23

23

“சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் விடுதலைப் புலிகளைக் குறிக்கின்றது என்றால்,  நாட்டின் தேசியக் கொடியின் நிறங்களை மாற்ற வேண்டும்.”- கனகரத்தினம் சுகாஸ்

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் விடுதலைப் புலிகளைக் குறிக்கின்றது என்றால்,  நாட்டின் தேசியக் கொடியின் நிறங்களை மாற்ற வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

சிவப்பு மஞ்சள் நிறங்களை பயன்படுத்துவதனால் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யபோவதாக கூறி தீலிபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கமாறு தொடர்ந்தும் பல்வேறு தரப்பினர்களினாலும் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திலீபன் நினைவேந்தலைக்கு தடைவிதிக்குமாறு யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, கொழும்பிலிருந்து சென்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வினால் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளது எனவும் நினைவேந்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்

இந்த நிலையில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என யாழ் நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவை சீண்டிப் பார்ப்பது எமது நோக்கமல்ல. ஆனாலும் கொலையின் பின்னணியில் இந்தியாவே உள்ளது.” – ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியாவை சீண்டிப் பார்ப்பது எமது நோக்கமல்ல. ஆனால் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு உள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் உள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடா நாட்டு பிரஜை. ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் என கூறுகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியா–கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் நிலைமை அண்மைய நாட்களாக அதிகரித்து வருகிறது. கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை அடுத்து பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“சாணக்கியன் ஒரு பைத்தியக்காரன். பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான்.” – நாடாளுமன்றத்தில் பிள்ளையான் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு நாள் விவாதத்தின் போது தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஒரு கொலைக்காரன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியதையடுத்து, இரு தரப்பினருக்கிடையிலான வாக்குவாதம் சூடு பிடித்துள்ளது.

திரிப்பொலி பிளட்டூன் இராணுவப்படைபிரிவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஒரு கொலையாளி என சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சாணக்கியனை பார்த்து பைத்தியக்காரன் என்றும் பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான் எனவும் சாணக்கியனின் தோற்றத்தை கிண்டலடிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை “உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளுக்குத் தயார் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார்.” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22.09.2023) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி நளின் பண்டார என்னைக் கடுமையாக நாகரிகமற்ற வகையில் விமர்சித்துள்ளார். என்னைக் “கொலையாளி” என்று விமர்சித்துள்ளார்.

ஆகவே, அந்த வார்த்தையை நாடாளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு வேண்டுகின்றேன். எனது ஊடக செயலாளராக இருந்த அன்ஷிப் ஆஸாத் மௌலான புகலிடக் கோரிக்கைக்காக என் மீது பாரிய பழியைச் சுமத்தியுள்ளார்.

ஒருவகையில் இந்த மௌலானா வெற்றி பெற்றுள்ளார். ஏனெனில் அவர் பிரபல்யமடைந்துள்ளார். அவரது புகலிடக் கோரிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நான் விலகியதன் பின்னர் புலிகள் அமைப்பு பலவீனமடைந்து தோல்வியடைந்தது என்று என் மீது வெறுப்புக் கொண்டுள்ள நாடு கடந்த தமிழர் அமைப்புக்கள் ஆஸாத் மௌலானாவின் பின்னணியில் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான உரிமைகளை நான் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளதால் அடிப்படைவாத கொள்கையுடைய முஸ்லிம் அமைப்புக்கள் என் மீது வெறுப்புக்கொண்டுள்ளன. மறுபுறம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் தலைமைகளும் என்னை வீழ்த்த இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக எடுத்துள்ளன.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு (2020.10.08) ஆம் திகதி முன்னிலையான போது சிறைச்சாலையில் இருந்தபோது சந்தித்தவர்களையும், பேசப்பட்ட விடயங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.
சர்வதேச மட்ட விசாரணை

நான் சாட்சியமளிக்கச் செல்லும்போது ஆஸாத் மௌலானாவும் என்னுடன் வருகை தந்திருந்தார். கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு சஹ்ரான் உட்பட அவரது தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள். பயங்கரவாதி சஹ்ரான் பல பகுதிகளில் பயிற்சிக் கூடங்களை நடத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஒன்றும் அறியாதவர் போல் தற்போது கருத்துத் தெரிவிகின்றார். முஸ்லிம் அரசியல்வாதிகள் கலீமா என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பேசுகின்றார்கள்.

எதிர்காலத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும். அடிப்படைவாத கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் உள்ளார்கள். தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். பிரதேச பொலிஸ் சேவைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளுக்குத் தயார் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார்.

முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், ஜே.வி.பி.யினரும் என்னை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நான் தவறு செய்யவில்லை. எனது கையில் இரத்தக்கறையில்லை. எனவே, எனது அரசியல் பயணம் தொடரும். அதனை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

 

 

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது !

12 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி ஏற்கனவே அவரது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாகவும் அந்த சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே அந்த மாணவி மீண்டும் 14 வயது மாணவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“அரசு சார்ந்த சந்திப்புக்களுக்கு தன் மகனையும் அழைத்துச் சென்ற விவகாரம்.” – அலிசப்ரி வழங்கியுள்ள புதிய விளக்கம் !

ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் நிகழ்வுக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள தனக்கு தனது பணிச்சுமையை குறைப்பதற்காக தனது மகன்  உதவினார் அதன் காரணமாக தன்னுடன் சில நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் அவரது மகனும் காணப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இடம்பெற்ற சந்திப்புகளில் என்னுடன் எனது மகன் கலந்துகொண்டது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான கரிசனைகளை பார்த்தேன்

நான் உண்மைகளை உங்கள் முன்முன்வைக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியின் உயர்மட்ட தூதுக்குழுவிற்கு உதவுவதற்கு அப்பால் வெளிவிவகார அமைச்சர் என்ற அடிப்படையில் வோசிங்டன் ஐ.நாவிற்கான விஜயத்தின் போது நான் பல சந்திப்புகளில் ஈடுபடவேண்டியநிலையேற்பட்டது.

எனது பயணஏற்பாடுகளில் பத்து உரைகள் மூன்று பொதுநிகழ்வுகள் பல இருதரப்பு பலதரப்பு நிகழ்வுகள் சந்திப்புகள் போன்றவை காணப்பட்டன- மிக அதிகமான பணிசுமை காரணமாக பெருமளவிற்கு  ஆராயவேண்டிய எழுதவேண்டிய துல்லியமாக தயார்படுத்தவேண்டிய அவசியம் காணப்பட்டது.

அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற உதவுவதற்காக ஒவ்வொருவரும் அமைச்சரவை பணியகத்தின் மூலம் நன்மையடைவோம் இதில் தொண்டர்களும் பணம்பெற்றுக்கொண்டு பணியாற்றுபவர்களும் காணப்படுவார்கள்.

எனது மகன் நான் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் ஆராய்ச்சி உதவியாளராகவும்  நகல்எழுத்தாளராகவும் எனது மகன் உதவினார். அமெரிக்காவில் அவர் தற்போது கல்விகற்றுவருபவர் என்பதால் அவர் தனது நேரம் நிபுணத்துவத்தை ஒதுக்குவதற்கு முன்வந்தார்.

முக்கிய சந்திப்புகள் நிகழ்வுகளில் எனக்கு அவரது ஆதரவு பெரும் உதவியாக அமைந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமோ வெளிவிவகார அமைச்சோ ஒரு சதம் கூட செலவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை – இஸ்ரோ தொடர்ந்தும் முயற்சி!

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

 

எனினும், சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் திகதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்ட் 23ஆம் திகதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

 

அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

ரோவரில் உள்ள ‘லிப்ஸ்’ எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி’, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.

 

தொடர்ந்து, அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஒக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

 

தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத ஆரம்பத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலர் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயற்பாட்டு நிலைமைகள் மேம்படும்.

14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது.இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை.

 

ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று (22) சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வைக்கும் முயற்சி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

அதன்படி, விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு சென்றால் உள்நாட்டு யுத்தம் தொடர்பிலும்  தமிழர்கள் சர்தேச விசாரணைகளை கோர வாய்ப்புள்ளதால் சர்வதேச விசாரணை வேண்டாம்.” – மைத்திரிபால சிறிசேன

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு சென்றால் உள்நாட்டு யுத்தம் தொடர்பிலும்  தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணைகளை கோர வாய்ப்புள்ளதால் சர்வதேச விசாரணை வேண்டாம்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் இந்தளவுக்கு விவாதம் நடத்தப்பட்ட விடயம் வேறு எதுவும் இருக்காது. இதில் நானே இலக்காக இருக்கின்றேன். தாக்குதல் நடந்த நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துத் தெரிவித்துள்ளேன்.

அதன்போது எனக்குப் புலனாய்வுப் பிரிவோ, பாதுகாப்புத் தரப்பினரோ எனக்கு அறிவிக்கவில்லை. இதனை மக்கள் நம்புகின்றார்கள் இல்லை. நான் தெரிந்துகொண்டே வெளிநாட்டுக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

இதன்படி நானே பொறுப்புக் கூற வேண்டியவர் என்றும் கூறுகின்றனர். 7 நீதியரசர்களைக் கொண்ட வழக்கு விசாரணையில் எனக்குத் தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். நான் 2016 ஆம் ஆண்டு முதல் எனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளேன். சர்வதேச நாடுகளில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல்களை நடத்தும்போது இங்கு இவ்வாறு நடக்க இடமளிக்கக்கூடாது என்று நான் அடிக்கடி பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன்.

சஹ்ரானைக் கைது செய்யாமை தொடர்பில் கூறுகின்றனர். அவரைக் கைது செய்யவென அதிகாரிகள் இருக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி போகப் போவதில்லையே.நான் 2019 ஜனவரியில் நடந்த பாதுகாப்புச் சபையில் சஹ்ரானைக் கைது செய்யாது இருக்கின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளேன்.

அத்துடன் ஒரு வருடமே பாதுகாப்பு அமைச்சு என்னிடம் இருந்தது. கிடைத்து 6 மாதத்திலேயே குண்டு வெடித்தது. இவ்வாறு குண்டு வெடிக்க முன்னர் நான்கு வருடங்கள் என்னிடம் காவல்துறை அமைச்சு இருக்கவில்லை.சம்பவம் நடந்த பின்னர் சஹ்ரானுடன் தொடர்புடைய முழு அமைப்புகளையும் இல்லாமல் செய்துவிட்டேன். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக்கொண்டு யுத்தம் தொடர்பிலும் தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணை கோரலாம்.

 

எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நா. பிரதிநிதியிடம் கூறிவிட்டேன். உள்ளக விசாரணைக்குச் சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் ஐ.நாவிடமும் நாங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கேட்கின்றேன். அத்துடன் சிலர் என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இங்கு விவாதங்களை நடத்தி இன்னும் பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை.

 

என் மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கின்றேன். சரத் பொன்சேகாவுக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை நானே வழங்கினேன். நான் வழங்கியது வேண்டாம் என்றால் அந்தப் பதவியை இல்லாமல் செய்துகொள்ள வேண்டும்.

 

அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து அவருக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். இந்நிலையில், சில இராணுவ அதிகாரிகள் என்னிடம் அவர் பற்றி கூறுவர்.

 

யுத்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு கிளிநொச்சி வரும் அவர் கொங்கிறீட் பங்கருக்குள் இருப்பார் எனவும், அவர் யுத்தக் களத்துக்குச் செல்லவில்லை எனவும் இராணுவ அதிகாரிகள் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். நாய் மனித கால்களைக் கடிக்கும்; ஆனால் மனிதன் நாயின் காலைக் கடிப்பதில்லை” என்றார்.

 

“உள்நாட்டில் விசாரணைகள் நடைபெற்றால் ஒருபோதும் உண்மைகள் வெளிவராது.” – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் விசாரணைகள் நடைபெற்றால் ஒருபோதும் உண்மைகள் வெளிவராது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அஸாத் மௌலானா என்பவர் யார்? பிள்ளையானின் செயலாளர். அவர் நாட்டை விட்டு செல்லும்வரை பிள்ளையானுடன்தான் இருந்துள்ளார்.

 

இவர் மொட்டுக் கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர். அப்போது நல்லவராக தென்பட்டவர், இன்று இவ்வாறான கருத்துக்களை கூறியவுடன் மோசமானவராக பார்க்கப்படுகிறார்.

 

ஈஸ்டர் தாக்குதலானது வவுனதீவு சம்பவத்துடன் ஆரம்பமாகவில்லை. 2015 ஜனவரி, 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுடன் தான் ஆரம்பமானது.

 

ஜனவரி 6 ஆம் திகதியன்று, புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே, மக்கள் எதிர்ப்பார்க்கும் முடிவு வாராவிட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள், எனவே, அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்தார்.

 

ஆனால், அன்று அப்படி எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. இங்கிருந்துதான் ஈஸ்டர் தாக்குதலுக்கான சூழ்ச்சி ஆரம்பமானது.

 

லசந்த விக்ரமதுங்க, தாஜுடீன், பிரகீத் ஹெக்னெலிகொட கொலை வழக்குகளை நாம் விசாரணை செய்தோம்.

 

புலனாய்வுப் பிரிவின் சிலரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினோம். சுரேஷ் சாலேவையும் நீதிமன்றில் நிறுத்தினோம். கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது.

 

இதனால் இவர்களுக்கு சிக்கல் வந்தது. எனவே, சர்வதேச புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இந்த விசாரணைகளை செய்ய வேண்டும்.

 

உள்நாட்டில் விசாரணை நடைபெற்றால் ஒருபோதும் உண்மை வெளிவராது” என அவர் மேலும் தெரிவித்தார்.