இந்தியாவை சீண்டிப் பார்ப்பது எமது நோக்கமல்ல. ஆனால் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு உள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் இடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் உள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடா நாட்டு பிரஜை. ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் என கூறுகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியா–கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் நிலைமை அண்மைய நாட்களாக அதிகரித்து வருகிறது. கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை அடுத்து பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.