25

25

“ஜோபைடன் வேண்டாம்“ – கருத்துக்கணிப்பில் வெளியான அமெரிக்கர்களின் அதிர்ச்சியான முடிவு !

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர். மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதேவேளை அண்மையில்  அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஜோபைடனின் வயது தொடர்பில் அதிக கேள்வி எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் இன மோதல் ஏற்படும் என்ற தவறான கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் எவரும் பரப்பக்கூடாது.” – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல் என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்து மீண்டும் ஒரு போரை தமிழ் மக்கள் விரும்பாத நிலையில் அவர்கள் தமது அன்புக்குரியவர்களை அமைதியாக நினைவுகூர்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்திய நிலையில், திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் இன மோதல் ஏற்படும் என தவறான கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் எவரும் பரப்பக்கூடாது என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூவின அரசியல்வாதிகளும் மக்களின் உறவுப் பாலமாகத் திகழ வேண்டுமே தவிர இவ்வாறான நிகழ்வுகள் மூலம் அரசியல்வாதிகள் சுயலாபம் தேட முற்படக்கூடாது என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இந்த நாட்டில் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான உண்மையான முயற்சியை மேற்கொண்டிருக்கவில்லை என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்

கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – என்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் !

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று(24) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்து வரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை ஆவணம் கையளிக்கப்பட்டது.

எனிலும் குறித்த காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது என்பதனால் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.

இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கும் நோக்கில் அமைச்சரவை அமைச்சர் அல்லது ஜனாதிபதியை  நேரடியாக சந்திக்க தீர்மானித்திருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதோடு திருகோணமலை மாவட்டம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் மற்றும் காடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டவர்களை 4ம் மாடிக்கு அழைத்து விசாரணை – சாணக்கியன்

இராஜாங்க அமைச்சர் சி சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக ”ஒரு கொலைகாரன்” என முகநூலில் பதிவுகளையிட்ட சிலர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாணக்கியனையும் பிள்ளையானையும் காணவில்லை!! - Transnational Government of Tamil Eelam

“மக்களை அடக்குவதற்கும் மக்களை கட்டுப்படுத்துவதற்குமாகவே அரசாங்கம் தற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வர முயல்கின்றது. தற்போது கொண்டு வர உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் இல்லாதொழிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.

சனல் 4இன் காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி. சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சனல் 4இன் கருத்தை தங்களது முகநூல்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு 4ஆம் மாடியில்  விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

சனல் 4இல் வெளிவந்த காணொளியை போட்டவர்களுக்கே நான்காம் மாடி விசாரணை என்றால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் கொண்டு வரப்போகின்ற புதிய சட்டமூலங்கள் மக்களது பிரச்சினைகளை ஆதங்கங்களை வெளிப்படுத்த முயல்கின்றபோது அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமானது இந்த சட்டங்களை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையோ போராடுபவர்களையோ அடக்க முயல்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாளுடன் சுற்றித்திரிந்த 21 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞர் ஒருவரே நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரின் பேரிலும் பல லட்சம் ரூபாய் கடன் – 4 இலட்சத்தால் எகிறிய தனிநபர் கடன் !

நாடு பெற்ற கடனை மக்கள் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பிரஜையும் கடனாளியாகியுள்ளதாகவும் எவ்வளவு ரூபாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர கற்கைப் பிரிவின் பேராசிரியர்களான வசந்த அத்துக்கோரள மற்றும் தயாரத்ன பண்டா ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஆய்வின்படி, கடந்த ஏப்ரல் வரையான காலப்பகுதி வரை நாடு பெற்ற கடனில் தனி நபர் ஒருவர் 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டிய கடனாளியாக மாறியுள்ளார்.

இதேவேளை, நான்கு பேர் கொண்ட குடும்பமொன்று 47 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாவை கடனாக செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட தனிநபர் கடன் தொகை இவ்வாண்டு ஏப்ரல் மாதமாகும்போது 4 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவாக காணப்படுகிறது.

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் என்னிடம் உள்ளது.” – யாழ்ப்பாணத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் !

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன் , மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச்  சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை  நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த இசை நிகழ்வு முற்றிலும் இலவசமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினையும் நிகழ்வாக இருக்கும்.  அடுத்து வரும் நாட்களின் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்ந்து வரும்.

சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு அகில இலங்கை தாதியர் சங்கம் ஏற்பாடு !

சுகாதார அமைச்சுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக  அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

”தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத்  தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தாதியர் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வரைவை இரகசியமாகத்  தயாரித்துள்ளதாகத்” தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக்  கருத்திற்கொண்டு நாட்டின் சுகாதார அமைப்பில் காணப்படும் குறைபாடுகளைச் சரி செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவையை இடைநிறுத்துவது தொடர்பில் அறிவிக்காமலேயே இலங்கையை விட்டு வெளியேறிய 200 வைத்தியர்கள் !

கடந்த 18 மாதங்களில் 348 விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளில் தமது சேவையை விட்டு விலகியுள்ளதாக சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 272 மருத்துவ நிபுணர்கள் ஊதியம் இல்லாத விடுமுறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 76 பேர் பணிக்கு வராமல் வெளியேறினர்.

இது தவிர, தரவரிசையில் உள்ள 850 மருத்துவ அதிகாரிகள் ஒரு வருட காலத்திற்குள், அதாவது ஜூன் 1, 2022 முதல் 2023 மே 31, 2023 வரை சேவையை விட்டு வெளியேறியுள்ளனர், அவர்களில் 544 பேர் ஊதியம் இல்லாத விடுப்பில் வெளிநாடு சென்றுள்ளனர்.

மேலும் 197 பேர் அறிவிக்கப்படாமல் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 109 பேர் பணியிலிருந்து விலகியுள்ளதாக மேற்படி குழு தெரிவித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்னுமொரு ஈஸ்டர் ஞாயிறு வகை குண்டுத் தாக்குதல் – எதிர்க்கட்சி எச்சரிக்கை !

அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு வகை குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, 2019 ஆம் ஆண்டு தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யாரேனும் தலைமறைவாக இருந்தால், விரைவில் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் 2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்னொரு குழப்பத்தை உருவாக்கலாம்.

“201 இல் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஒரு தீவிரவாதி என்பது உண்மைதான். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட குழுவினர் அவரையும் அவரது குழுவையும் தாக்குதல்களை விரைவுபடுத்தியதுதான் பிரச்சினை,” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 க்கு முன்னர் இலங்கையில் நடந்த பல்வேறு இஸ்லாமிய விரோத செயல்களுக்கும் நியூசிலாந்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்கும் பழிவாங்கும் வகையில் சஹ்ரான் மற்றும் குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.