09

09

“500 நாட்களை எட்டியுள்ள உக்ரைன் – ரஷ்யா போர் ” – 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி !

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் 500 நாட்களை எட்டியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இதேவேளை உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.

2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைவாக இருந்த போதிலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதோடு 37 பேர் காயமடைந்த நிலையில் இது படையெடுப்பு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மீது இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஈரானில் ஆறு மாதங்களில் 354 பேருக்கு தூக்குத்தண்டனை – திணறும் மனித உரிமைகள் அமைப்புக்கள் !

மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இங்கு ஆண்டுக்கு ஆண்டு தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், போதைப்பொருள் விவகாரத்தில் தூக்கிலிடப்பட்டவர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 126 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஈரானில்தான் ஆண்டுதோறும் அதிக பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தி ஒடுக்கவே, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுதாக கவலை தெரிவிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளான ஈரான் தற்போது மரண தண்டனை விவகாரத்திலும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.