15

15

கோகா-கோலா பானங்களால் புற்றுநோய் – எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம் !

நாம் அன்றாட எடுத்துக்கொள்ளும் மென் பானங்களில் ‘அஸ்பார்டேம்’ என்னும் செயற்கை இனிப்பூட்டியை கழிக்கின்றனர். அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘கார்சினோஜன்’ எனப்படும் பொருளின் கீழ் வகைப்படுத்தப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நிபுணர் குழுக்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

செயற்கை சுவையூட்டி குறித்த எச்சரிக்கை! - ஜே.வி.பி நியூஸ்

இது பாதுகாப்பற்றது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது, தற்பொழுது, அந்தப் பொருள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிகிறது, ஒரு குழு. மற்றொரு குழு, அந்தப் பொருள் எவ்விதத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை மதிப்பிடுகிறது.

இதனை தொடர்ந்து, உலகின் மிகப் பிரபலமான இனிப்பூட்டிகளில் அஸ்பார்டேமும் ஒன்று. இது கோகா-கோலா’ பானங்கள், ‘மார்ஸ் சூயிங்கம்’ போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாக செயற்கை இனிப்பூட்டிகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா பேசினார்.

அப்பொழுது ஒரு செய்தியாளர் அவரிடம் “உணவில் சீனியைச் சேர்க்க வேண்டுமா இனிப்பூட்டியைச் சேர்க்க வேண்டுமா என்ற சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு, மூன்றாவது தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும்” என்றார். அதற்கு அவர்கள் “அவற்றுக்குப் பதிலாகத் தண்ணீரை அருந்தவேண்டும்” என்று கூறினார். மேலும், ஒருநாளில் 40 மில்லிகிராமுக்கும் குறைவான அளவிலே ‘அஸ்பார்டேமை’ ஒருவர் உட்கொள்ள வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவிக்கின்றனர் – ஐ.நா அறிக்கை !

உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

கொரோனாவுக்கு பின்னர் உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 12 கோடி அதிகரித்துள்ளது. பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்போது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை குறைந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் முற்றவெளி திடலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை !

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான Glocal Fair – 2023 தொழிற்சந்தை யாழ்ப்பாணம் முற்றவெளி திடலில் இன்று காலை ஆரம்பமானது.

Glocal Fair – 2023 நாளையும் தொடரவுள்ளது. இதனூடாக கொழும்பில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும் யாழ்ப்பாணத்திலே பெற்றுக் கொள்ளவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான மனுச நாணயக்கார, டக்ள்ஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த தொழிற் சந்தையில், தொழில் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தொழிலாளர் தொடர்பான விடயங்கள் தொடர்பில், விழிப்புணர்வு வழங்கப்படுவதகாவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் !

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது.

வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளது. இதற்கான தீர்வாக 11 மாடிகளைக் கொண்ட சிறுவர் இதய நோய் பிரிவொன்றை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க அவசர தொலைபேசி எண் அறிமுகம் !

கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க அடுத்த சில வாரங்களில் அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நேற்று  வெள்ளிக்கிழமை (14) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓரளவு  துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

“நாம் இனமத ரீதியாக பிரிந்திருந்தது போதும். இனிமேல் நாங்கள் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம்.” – யாழில் மனுச நாணயக்கார !

இனியும் இனமத ரீதியாக பிரிந்து நிற்காமல் அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் குளோபல் பெயார் கண்காட்சியை யாழில் இன்று(15) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தேசிய மொழியாக தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இன மத ரீதியான பேதங்களை ஏற்படுத்தி முன்னைய அரசியல்வாதிகள் எங்களை பிளவுபட வைத்தனர். அதனாலேயே இனமத ரீதியாக நாங்கள் பிளவுபட்டிருந்தோம்.

முன்னைய அரசியல்வாதிகளே இனமத ரீதியாக எங்களை பிரித்து பிளவுபட வைத்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனைவரையும் இனமத ரீதியாக ஒன்றிணைத்து நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.

நாங்கள் இனமத ரீதியாக பிரிந்திருந்தது போதும். இனிமேல் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை நாம் நோக்கினால் இனமத பேதம் இல்லாததால் தான் அந்தநாடுகள் இப்படி வளர்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எனவே நாமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும். நான் சிங்களவர்களின் தேசிய உடையை அணிவதில்லை. ஆங்கிலேயர் உடை தான் அணிவதுண்டு. ஆனால் இங்கு தமிழர்களின் உடை அணிந்து வந்துள்ளேன். இங்கு நான் அணிந்து வந்துள்ள ஆடை புகைபடத்தை எனது மனைவிக்கு அனுப்பிய போது இனிய தமிழ் என்றார்.

அதேபோன்று இங்கு என்னுடன் இருக்கும் பணியாளர் கூட இந்த உடை மிக அழகு என்று என்னிடம் கூறியிருந்தார். நாம் எந்த ஆடை அணிந்தாலும் அழகு என்றால் அதற்கு காரணம் எங்களது மனம் அழகாக இருப்பது தான்” – என்றார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்டு பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் !

நாட்டில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இருந்து படகு மூலம் நேற்று (14) இரவு 8 பேரும் தனுஷ்கோடிக்கு பயணித்துள்ளனர். யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மற்றும் ஆணைக்கோட்டை – கூழாவடியைச் சேர்ந்த இரு பெண்கள், இரு ஆண்கள் மற்றும் நான்கு சிறுவர்களே அகதிகளாக சென்றுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரிகள் நால்வர் கைது !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 200 மி.கி. ஐஸ், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர், புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த இருவர் என 20 முதல் 30 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர்.

“தோல்வியடைந்த ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதமே.ஆதலால் பிரியாதிருப்போம்.”- யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் !

“பிரிப்பதற்கு இடங்கொடோம்  ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், தோல்வியடைந்த ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை  தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவீடனில் குர்-ஆன் எரிக்கப்பட்டமைக்குக் கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி ரணில் குருந்தூர் மலை விவகாரத்தில் மௌனியாக இருக்கக்கூடாது !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ்மக்கள் வழிபடுவதற்கு பௌத்த பிக்குகள் மற்றும் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், இதன் மூலம் தமிழ் மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டிருப்பதாகச் சாடியுள்ளனர்.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) தமிழ் மக்கள் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அதன் பிரகாரம் அங்கு சென்ற தமிழ் மக்கள் பொங்கல் பொங்குவதற்கு முற்பட்ட வேளையில், அங்கு வருகை தந்திருந்த பௌத்த பிக்குகளும் அவர்களுடன் வருகை தந்திருந்தவர்களும் அதற்கு இடையூறு விளைவித்ததுடன் பொலிஸாரும் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு, பொங்கல் பொங்குவதற்குத் தடையேற்படுத்தினர்.

இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் அப்பகுதியில் இருந்தவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன், ‘குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, அப்பகுதிக்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிங்களவர்களைக் காட்டிலும் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரே மிகமோசமாக நடந்துகொண்டதாகவும், தம்மை மிலேச்சத்தனமான முறையில் தாக்க முற்பட்டதாகவும், அங்கிருந்த பெண்களைத் தகாதமுறையில் வெளியேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்மக்கள் குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் ஈடுபட்டுவருவதாகவும், அதற்குத் தொடர்ந்தும் இடமளிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்திய கஜேந்திரன், ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியை விட்டுக்கொடுப்பதற்குத் தாம் ஒருபோதும் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, குருந்தூர் மலையில் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், அங்குசென்ற தமிழ்மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, இந்துக்களின் வழிபாட்டு உரிமை மீறப்படுவது குறித்துத் தனது தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கு முன்பதாக இதனை அவரது கவனத்துக்குக் கொண்டுசெல்லவிருப்பதாகவும், தமிழ்மக்களின் மதவழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவிருப்பதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து இந்தியப்பிரதமர் மற்றும் இந்திய அரசியல் தலைவர்களிடத்திலும் வலியுறுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

‘ஏற்கனவே குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப்பட்டிருக்கும் அதேவேளை, இவ்விவகாரத்தில் தாம் தவறானமுறையில் செயற்பட்டிருப்பதைத் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதிக்கு வழிபடச்சென்ற தமிழ்மக்களுக்கு எதிராக பொலிஸார் மிகமோசமாக நடந்துகொண்டிருப்பது இன, மதவாதத்தின் உச்சக்கட்டமேயாகும்’ என்று ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுவீடனில் புனித குர்-ஆன் எரிக்கப்பட்டமைக்குக் கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கக்கூடாது என்றும், இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.