05

05

வவுனியாவில் இராணுவ காதலனை சந்திப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தாய் !

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (05.07.2023) காலை இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 

குருநாகல் வரக்காப்பொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 

இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவ தலைமையக அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்

 

குறித்த பெண்ணிக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வறுமை காரணமாக 800 ரூபாய்க்கு தனது பெண் குழந்தையை விற்ற விற்ற பழங்குடியின தாய் !

வறுமையின் காரணமாக 8 மாத பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவின் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு, இவரது கணவர் முசு, தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 2 ஆவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. வறுமையின் காரணமாக தாய் கராமி முர்மு, குழந்தையை இனி நாம் வளர்க்க முடியாது என நினைத்து குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதனையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பி வந்த முசு 2 ஆவதாக பிறந்த பெண் குழந்தையை பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு, குழந்தை இறந்துவிட்டதாக முர்மு கூறியுள்ளார். ஆனால், சந்தேகமடைந்த முசு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்றது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், தாய் முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி, ஏற்பாடு செய்த நபர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மொழிப்பிரச்சினையால் இரண்டு வருடங்கள் வரை தாமதம் !

வடக்கு கிழக்கில் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளை மேன்முறையீட்டுக்காக கொழும்புக்கு வரும் போது அதற்கான மொழிபெயர்ப்பிற்கு மட்டும் இரண்டுவருட காலங்கள் செலவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

 

ஆகவே வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் அல்லது வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இவற்றில் ஏதாவது ஒன்றினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் ஏற்படாது என சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் வறுமையில் உள்ளவர்களே அதிக குற்றங்களை செய்கிறார்கள் – நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

எமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், ஒரு வழக்கு இரண்டு, மூன்று மாதங்களிலேயே விசாரித்து முடிக்கப்பட்டுவிடும்.

எமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான், பல குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.

சிறைச்சாலைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்றால் இதனை பார்க்க முடியுமாக இருக்கும்.

 

நோய் வந்த பின்னர் மருந்து கொடுப்பதைவிட, அந்த நோயை வரவிடாமல் தடுக்க வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.

 

இது தொடர்பான போதிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். வழக்குகளை நீடிக்காமல் உடனடியாக அவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதனை செய்தால், சிறைச்சாலைகளில் நெரிசலும் ஏற்படாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

363.3 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்து இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம்!

இந்த வருடத்தில் இந்த நாட்டின் ஏற்றுமதி வருமானம் 25% குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஐரோப்பாவில் இருந்து பெறப்படும் ஓடர்கள் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த வருடம் ஐரோப்பாவில் இருந்து ஓடர் செய்யப்பட்ட ஆடைப் பொருட்களின் கையிருப்பு இன்னும் தீர்ந்து போகாததால் புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வருடத்தின் ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 363.3 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 1,843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவும், இது கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களுடன் ஒப்பிடுகையில் 16.5% வீழ்ச்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ஆடை ஏற்றுமதி மூலம் இலங்கை 2206.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது என குறித்து தரவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 14.2% குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் ஆடைகளின் ஏற்றுமதி வருவாயும் 3.1% குறைந்துள்ளது. மற்ற முடிக்கப்பட்ட ஆடை தயாரிப்புகளும் 19% சரிந்துள்ளதாக குறித்த அறிக்கை கூறுகிறது.

மன்னார் மனிதப்புதைகுழி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு !

மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான கட்டளை ஒன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு B/232 இன்று புதன்கிழமை(05) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஏற்கனவே அழைக்கப்பட்ட 27 திணைக்களத்தின் பிரதிநிதிகள் சார்பில் பலர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

அத்தோடு அரச தரப்பு சட்டத்தரணியும், அரச சட்ட வைத்திய அதிகாரியும், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளும், OMP அலுவலக சட்டத்தரணிகளும், இராணுவ சட்டத்தரணி போன்ற பலர் பிரசன்னமாகி இருந்த நிலையில், நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட வினாக்களுக்கு அமைவாக இந்தப் புதை குழியில் ஏற்கனவே 376 மனித எச்சங்கள் எடுக்கப்பட்ட நிலையில் இதனை மீண்டும் அகழ்ந்து மிகுதி மனித எச்சங்களை உடனடியாக எடுக்கத் தேவையில்லை என்று ஒட்டுமொத்த தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரம் தற்போது இந்த மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் காணாமல் போன தரப்பில் ஒட்டுமொத்த அறிக்கை (Comprehensive Report) என்ற அடிப்படையிலும் இதுவரையில் நடந்தது என்ன? இனி தொடர்ந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது? அவற்றை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களை சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அவை தரம் பிரிப்பு செய்யவதற்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. மனித எச்சங்கள் தனியாகவும் ஏனைய பொருட்கள் தனியாகவும் தரம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு பிற்பாடு தான் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கின்றது.

இது தொடர்பாக வைத்தியர் மீண்டும் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை ஒன்றை ஆக்கியிருக்கிறது. இதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் இதுவரை நடைபெற்ற அகழ்வுப் பணியில் கண்ட விடயங்கள், நடைபெற்ற விடயங்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்திற்கு வைத்தியர் ராஜபக்ஷ மற்றுமொறு அறிக்கையொன்று சமர்ப்பிக்க வேண்டியிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

 

அதுவரையான காலப்பகுதியில் குறித்த புதைகுழியை தூய்மையாகவும் அதே நேரம் முழு நேரம் காவல்துறையினர் முழுமையாக பாதுகாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

அதே நேரம் மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுவதற்காக திகதியிடப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து புதிய சாதனை !

சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் துடுப்பாட்ட வீராங்கனை பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.

 

6 இடங்கள் முன்னேறி அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

 

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சமரி அத்தபத்து இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

 

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் 83 பந்துகளில் 108 ஓட்டங்களை குவித்தார்.

 

ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சமரி அத்தபத்து 80 பந்துகளில் 140 ஓட்டங்களை விரைவாக குவித்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு இன்னிங்சிலும் அவர் ஆட்டமிழக்காமல் ஆடியமை சிறப்பம்சமாகும்.

கிரிக்கட் தரவரிசையில் இலங்கை வீராங்கனை ஒருவர் முதலிடத்தை அடைவது இதுவே முதல் முறை ஆகும்.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் 30 மரணங்கள் – பின்னணி என்ன..?

இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது நாளொன்றுக்கு, 32 முதல் 35 பேர்வரையில், விபத்துகளால் மரணிக்கின்றன நிலையில்

வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது,

மேலும் இது மிகவும் மோசமான நிலைமையாகும் எனவே, இதனைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதே அவசியமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அஸ்தியை வைத்து செய்யப்படும் நகைகள் – வெளிநாட்டவரிடையே அதிகரிக்கும் கேள்வி !

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் 15 லட்சம் டொலர் அந்நிய செலவாணியை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இப்போதும் ஆர். கே. எஸ் அஷ்மாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி ஏஜென்சி மூலம் செய்யப்படுகின்றன.

இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகள் அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை என்றாலும், ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த நகைகளுக்கு பெரும் கேள்வி காணப்படுகின்றது.

 

குறித்த பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டு சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.