06

06

“சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண குடிமக்கள் மட்டுமே நீதித்துறையால் வலைவீசப்படுகின்றனர்.” – அனுரகுமார திஸாநாயக்க

“நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரத்தினால் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.” என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் பேசிய அவர்,

தற்போதுள்ள சட்டங்களான பொதுச் சொத்துச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்களே பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுக்க போதுமானவை எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண குடிமக்கள் மட்டுமே நீதித்துறையால் வலைவீசப்படுகின்றனர் என்றும், அதேசமயம் கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் அதிகாரத்தின் காரணமாக விடுதலையாகி விடுவதாகவும் தெரிவித்தார்.

“தேங்காய் திருடியதற்காக ஒருவர் பிடிபட்டார், பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அது எப்படி வரும்? நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரமே தவிர, சட்டத்தில் பிரச்சினை இல்லை. இது பெரும்பான்மையான அரசியல் அதிகாரம், ஒரு சில உயர் அதிகாரிகள், பல பொலிஸ் அதிகாரிகள், பல தொழில் அதிபர்கள் மற்றும் ஊடக அதிபர்களை உள்ளடக்கிய ஒரு தீய வட்டம். இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தீய வட்டம். வலுவான அரசியல் அமைப்பினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும், சட்டங்களால் மட்டும் அல்ல,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“பாலியல் லஞ்சம் கோருவதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் படி குற்றமே.” – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பாலியல் இலஞ்சத்தையும் ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் ஊடாக குற்றமாகவே தாம் கருதுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாம் மீண்டும் இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளோம். இதற்காக கடந்த ஒருவருடமாக பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களையும் நாம் நடத்தினோம்.

சர்வதேச நாணய நிதியமும் சில யோசனைகளை இதற்காக முன்வைத்துள்ளன. உயர்நீதிமன்றிலும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவரேனும், சட்டவிரோதமாக சொத்து சேர்த்து இருந்தால் இந்தச் சட்டத்தின் ஊடாக அதனை தாராளமாக கைப்பற்றலாம்.

20 வருடங்களுக்குள் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் வழிவகை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் உள்ளது. அதனை இந்த சட்டமூலத்திலும் கொண்டுவந்துள்ளோம். ஆனால், புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி, அந்த சட்டத்திற்கு எதிராக கடந்த காலங்களில் ஒரு செயற்பாடு இடம்பெற்றிருந்தால், அதற்கெதிராக எம்மால் சட்டநடவடிக்கையை இதன் ஊடாக மேற்கொள்ள முடியாது.

உதாரணமாக பாலியல் இலஞ்சத்தை, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக குற்றமாக நாம் கருதுகிறோம். எனினும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் இலஞ்சம் தொடர்பாக, தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், அந்த குற்றம் அன்று இடம்பெற்றபோது அது குற்றமாக கருதப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் வேறு வழிகளில் இலஞ்சம் பெற மாட்டார்கள்.” – மஹிந்தானந்த அளுத்கமகே

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் அவர்கள் வேறு வழிகளில் இலஞ்சம் பெற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எம்மை நோக்கி எதிரணியினர் இன்று திருடர்கள் என்று கூறுகிறார்கள். 2015 இலிருந்து 2020 வரை நாமும் அவர்களை பார்த்து திருடர்கள் என்றுதான் கூறினோம். இப்படி மாறி மாறி குறைக்கூறிக் கொண்டிருக்காமல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து திருடர்கள் நுழையாதவாறு ஏன் புதிய சட்டத்தை இயற்ற முடியாது?

குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனைக் கிடைக்க வழிவகை செய்ய எதிரணியினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தோடு, இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கு சிறந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்பதோடு, அவர்களுக்கான சம்பளமும் தாராளமாக வழங்க வேண்டும்.

ஏனெனில், பொலிஸ் அதிகாரியொருவரை ஆணைக்குழுவில் உறுப்பினராக நியமித்து, அவருக்கு பொலிஸாருக்கு வழங்கும் சம்பளத்தைதான் கொடுக்கிறார்கள். இதனால், இவர்களுக்கு ஏனையோர் வந்து பணம் கொடுக்கும் நிலைமை காணப்படுகிறது.

அனுபவமும், அறிவும் நிறைந்த சிறப்பான வல்லுனர்களை ஆணைக்குழுவுக்கு நியமிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பதிவு செய்தது டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் !

பேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய சமூக ஊடக தளமான திரெட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக உருவாக்கப்ட்ட இந்த புதிய சமூக ஊடகத்தை மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியிருந்தார்.

எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டுவிட்டர் சமூக ஊடக தளத்திற்கு மாற்றாக மெட்டா முன்மொழிந்துள்ள த்ரெட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த செயலியும் டுவிட்டரை போல உரை அடிப்படையிலான உரையாடல் பயன்பாட்டுக்குரிய செயலியாகும்.

இதன் பயனர்கள் 500 எழுத்துகள் வரையிலான இடுகைகளை வெளியிட முடியும், அத்துடன் நிழற்படங்கள் மற்றும் காணொளிக்களை உள்ளடக்கலாம் டுவிட்டரைப் போலவே, சக பயனானிகளின் இடுகைகளுக்கும் பதிலளிக்கலாம், அல்லது மற்றவர்களுக்கு பகிரலாம்.

நேற்று இந்த தளம் ஆரம்பிக்கபட்டதையடுத்து மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் தனது சொந்த த்ரெட்ஸ் கணக்கைப் பயன்படுத்தி முதல் ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களைப் பதிவுசெய்துள்ளார்.

அத்துடன் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டாவின் பிரபலமான நிழற்படங்களின் பகிர்வு தளமான இன்ஸ்ரகிராமுடனும் த்ரெட்ஸ் கணக்குகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தளம் வெளியிடப்படுவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் எலோன் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்துக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் மெட்டாவின் இந்தப் புதிய நடவடிக்கை சிலிக்கான் பள்ளத்தாக்கின் இரண்டு முக்கிய பில்லியனர்களுக்கு இடையேயான போட்டியை அதிகரித்துள்ளது.

“கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு முறைப்படி செய்யப்படுவதாக தெரியவில்லை.” – சுமந்திரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நாங்கள் அவதானித்தபடி குறித்த முறைப்படி செய்யப்படுவதாக தெரியவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மனித புதைகுழி அகழப்படும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு  மனித புதைகுழி அகழப்படுவதை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் இது செய்யப்படவில்லை.

பல சான்றுகள் காணாமல்போவதற்கான  ஆபத்துக்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு முக்கியமான சாட்சியமாக காணப்படுகின்றது.போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவமாக இது இருக்கவேண்டும் , இராணுவசீருடையை ஒத்த அல்லது தமிழீழ சீருடையை போன்ற பல காணப்படுகின்றன,

விசேடமாக பெண்போராளிகளுடைய உடல்களாக இவை இருக்கவேண்டும்,

தற்போது ஆண் ஒருவரினது உடலும் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது,

எனவே ஐந்துக்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது போல தென்படுகின்ற போது அதனை மிகவும் அவதானமாக அந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்யவேண்டும்.

அப்படி செய்யாமல் இதனை அந்த அந்த நேரத்திற்கு ஏற்ப செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமில்லை,

சர்வதேச நிபுணத்துவத்தின் மேற்பார்வையில் இது செய்யப்படவேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி – முதல் நாள் அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில், மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆரம்பமான அகழ்வுப் பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்றுப் பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

முதல் நாள் அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை ஆண் பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வுப் பணி இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வருகின்ற வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடையவியல் பொலிசார் உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டடதுடன் , ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வல்லிபுரம் கமலேஸ்வரன், பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் இடம்பெற்றன.

 

 

 

 

 

இலங்கையில் பெண்களிடமே அதிகமாக பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் அமைச்சர் கீதா குமாரசிங்க !

பெண்களே அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நாட்டில் அதிகமாக காணப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெண் ஒருவர் ஒரு தடவை ஒரு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அந்தப் பெண் பல தடவைகள் பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகிறார்.

ஊடகங்களினால் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இல்லாது போய்விடுகிறது. இதனால், தனது பிரதேசத்திலும் தனது நாட்டிலும் வாழ முடியாத நிலைமை ஏற்படுகிறது.

பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதனால், சில பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளை வெளியே சொல்லாமல்கூட இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த சட்டமூலத்தின் ஊடாக இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக தண்டனை கிடைக்கும் என்பது சிறந்த ஒன்றாகும் என்றாலும், சாட்சியாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

எவ்வாறாயினும், விரைவில் இந்த சட்டமூலத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிக ஆபத்தான பறவையை இலங்கைக்கு அன்பளிப்பு செய்த தாய்லாந்து!

அண்மையில் தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த முத்துராஜா என்று அழைக்கப்பட்ட யானை முறையான பராமரிப்பு இன்றி  இலங்கையில் இருப்பதனால்  குறித்த யானையை 20 வருடங்கள் கழித்து தாய்லாந்து மீளப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில் தாய்லாந்தினால் 3 ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” – Double Wattled Cassowary பறவைகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இதில் 2 ஆண் பறவைகளும், ஒரு பெண் பறவையும் உள்ளடங்குகின்றன.

 

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த பறவைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 

மலேஷியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச் 179 ரக விமானத்தில் இந்த 3 இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகளும் நேற்றிரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

 

5 அடி உயரமும் 60 கிலோ கிராம் எடையும் கொண்டதாக வளரக்கூடிய இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகள் உலகின் மிக ஆபத்தான பறவை இனத்தில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன.

கண்கவரும் வர்ணங்களுடன் மிக அழகாக காட்சியளிக்கும் இந்த பறவைகளால் உயர பறக்க முடியாது.

 

இலங்கை – தாய்லாந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குரங்குகள், தீக்கோழி, பாம்புகள் உள்ளிட்டவை தாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.