20

20

பத்திரிகை துறையிலும் Ai – கூகுள் நிறுவனம் புதிய முயற்சி!

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

“தமிழருக்கும் இந்நாட்டில் உரிமை உண்டு. ஆகவே பிச்சை போட வேண்டாம்.” – இரா.சாணக்கியன்

தான் ரணில் ராஜபக்ஷ அல்ல, நான் ரணில் விக்கிரமசிங்க என்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்க போவதை நீங்கள் ஏற்று கொள்ள போகிறர்களா இல்லையா என்று ஜனாதிபதி கேட்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

தமிழருக்கு இவ் நாட்டில் உரிமை உண்டு, எமக்கு நான் இதுதான் தருவேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம் எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியும் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும், எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் நாட்டுக்கான கடன் அதிகரிக்குமே தவிர முதலீடுகள் கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், நேற்றையதினம்(19) சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படை முகாமில் வைத்துள்ள மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலாளராக பெண் !

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் நாடு திரும்பும் வரை இது அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

 

சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

 

1994 ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட திருமதி விஜேவர்தன, திறைசேரியில் 22 வருடங்களாக பல்வேறு பதவிகளை வகித்து வந்ததோடு இறுதியாக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியிருந்தார்.

 

2015 முதல் 2019 வரை அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் சாந்தனி விஜேவர்தன பணியாற்றியுள்ளார்.

 

காலி சவுத்லண்ட் பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான இவர், ருகுணு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதோடு நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பூநகரியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு நிரந்தர தடையுத்தரவு !

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை ஆலயம், ஆசிரியர் விடுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்றவை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இதன்படி குறித்த மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

மதுபானசாலை தொடர்பில் கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

விசாரணைகளின் பின்னர் இன்று வரை மதுபானசாலையை திறப்பதற்கான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், குறித்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மதுபானசாலையை திறப்பதற்கான நிரந்தர தடையுத்தரவை பிறப்பித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிளி/முழங்காவில் பகுதியில் தங்ககத்துடன் கூடிய மதுபானசாலையை அகற்றுமாறு பொதுமக்கள்,பொது அமைப்புக்களால் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரனூடாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.  இன்றையதினம் (20.07.2023) ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரன் அவர்களின் வாதப்பிரதி வாதங்களை ஆராய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நிரந்தர தடை உத்தரவாக்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் – விரைவில் வாக்குமூலம் !

2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஜூலை 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

 

சிட்டிசன் பவர் அமைப்பு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

இந்த தொகை தொடர்பில் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய நீதிமன்றில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

 

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த பணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய வர்த்தகர்களால் வழங்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு பணத்தை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் வளாகத்தை கைப்பற்றியதன் பின்னர் நிதி அறிக்கை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

 

இதேவேளை, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அந்த விசாரணைகளின் பகுதிகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் – வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல் !

அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட சர்சைக்குறிய செஃப்டர் எக்ஸோன்  மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“செஃப்டர் எக்ஸோன் (Ceftriaxone) மருந்து பயன்பாட்டினால் மரணம் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றே மீண்டும் பதிவாகியுள்ளது. சில மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.

 

ஆனால் தற்போது காணப்படும் நிலை மிகவும் அசாதாரணமானது. நாட்டில் பல பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகின்ற காரணத்தினால் ஒவ்வாமை என்ற விடயத்திற்கு அப்பால் சென்று இந்த மருந்தில் சிக்கல் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

 

ஆகவே இந்த சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக சந்தேகங்களை மாத்திரம் எழுப்பாமல் உரிய மருந்துகளை உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்து இது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அதிகாரப்பகிர்வு என்ற பெயரில் தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்காதீர்கள்.” – நாடாளுமன்றத்தில் சுரேன் ராகவன் !

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

 

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தமிழ் பிரதிநிதிகள், இது அவசியமானது அல்ல என்றும் சமஷ்டி முறையிலான தீர்வே தங்களுக்கு வேண்டும் என்றும் வெளியே சென்று கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

 

நான் இவர்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். கனவுக் கணாதீர்கள்.

 

சமஷ்டி கோரிக்கையுடன் வட்டுக்கோட்டைவரை சென்று, மீண்டும் 2009 ஆம் ஆண்டு இந்நாடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இரத்த ஆறுக்கு மத்தியில் திரும்பி வந்துள்ளது.

 

இவ்வாறு இருக்க மீண்டும் யுத்தமொன்றையா நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? அப்படியென்றால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அன்று சரத்பொன்சேகாவுடன் இணைந்து, சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்வோம் என்றே யாழில் கூறியிருந்தார்.

 

அப்படியென்றால், இப்போது ஏன் இதற்கு மாறான ஒரு கருத்தை இவர்கள் வெளியிட வேண்டும்?

 

அதுவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும்போதே ஏன் இவ்வாறு கூற வேண்டும்?

இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க இடமளிக்க முடியாது. இனியும் இந்நாடு இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்காது.

 

எனவே, மீண்டும் இதற்குள் நாட்டை தள்ள முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் தூண்டிவிட வேண்டாம் என நான் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

இது எச்சரிக்கை கிடையாது. உண்மையைத்தான் கூறுகிறேன். இந்நாட்டிலுள்ள அப்பாவி விவசாயிகள் முதற்கொண்டு அனைவரும் இதனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

அமெரிக்கா தூதுவரையும், இந்திய உயர்ஸ்தானிகரையும் மகிழ்ச்சிப் படுத்த நாம் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது.

 

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பயணம் முடிவடையும் முன்னரே சமஷ்டியைக் கோருவதை, வடக்கு மக்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 

இதனை நான் வடமாகாண முன்னாள் ஆளுநர் என்ற வகையில் உறுதியாகக்கூறுகிறேன்.

 

தமிழ் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழு !

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி குழு நியமிக்கப்ட்டது.

 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையிலான மேற்படிச் செயற்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக கல்வி அமைச்சு, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, மீன்பிடித்துறை அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்குகின்றனர்.

 

பொருளாதார நெருக்கடியினால் தொழில்களை இழந்தவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் இருதரப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

 

அக்குழுவினால் தொழில்களை இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில்களை பெற்றுக்கொடுப்பதற்கான மூலோபாய திட்டமிடலொன்று தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்புக்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

 

அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத்தருமாறு உலக தொழிலாளர்கள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், உலக தொழிலாளர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பிலான இறுதி அறிக்கையும் அமைச்சிடம் சமர்பிக்கப்பட்டிருந்தது.

 

அதனையடுத்து இருதரப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட கலந்துரையாடல்களின் பலனாக குறுகிய கால, இடைக்கால, நீண்டகால தீர்வுகள் கண்டறியப்பட்டதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான குழுவே தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய இனிவரும் நாட்களில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளை கண்டறிந்து அந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான தகைமைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது !

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தாம் கடமைபுரியும் வவுனியா மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் உட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றுபவர் எனவும், குறித்த நபர் நகர்ப்புறத்தை அண்டிய பாடசாலை மாணவன் ஒருவனையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் வவுனியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

வவுனியா, குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவனே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டுள்ளதுடன்,

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.