22

22

மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை திட்டம் – 2025ல் நிறைவு செய்ய கௌதம் அதானி உறுதி !

மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் சோலா மற்றும் காற்றாலை திட்டத்தை 2025 ஜனவரிக்குள் நிறைவு செய்ய கௌதம் அதானி உறுதியளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார.

இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவுடனான சந்திப்பின் போது அதானி இந்த உறுதிமொழியை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், CEB மற்றும் NTPC இந்தியாவின் கூட்டு முயற்சிக்காக சம்பூர் சோலார் பூங்காவிற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

 

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரைவில் கலந்துரையாடல் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை – தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை மருத்துவமனையை வழங்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்திருந்தார்.

யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு மருத்துவமனை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இலங்கையில் உரிய சிகிச்சை அளித்திருந்தால் முத்துராஜாவை இலங்கையிலேயே வைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் ஆலய உற்சவங்களில் எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி பயன்படுத்தப்படும் யானைகள் – யாழ் மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு !

ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்தும் போது உரிய அனுமதிகளை பெற வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் ஆ,சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது, வேறு மாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு, அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துவதனை காணக்கூடியதாக உள்ளது.

உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதாகும். அத்துடன் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமாக ஆபத்துகளை ஏற்பட கூடும்.

அதனால் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு யானைகளை பயன்படுத்தவதற்கான அனுமதி வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் யானைகளை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதற்கான ஆளணி ஆகியவை பேராதனை கால்நடை வைத்திய பீடத்தில் மட்டுமே உள்ளதுடன், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொழில் பரப்பினுள் அவற்றுக்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு உரிய அனுமதி பெறப்படாமலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது யானைகளை உற்சவங்களில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தினரும் மற்றும் உற்சவங்களை நடாத்துவோரை கேட்டுக்கொள்வதாக செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதி செய்ய மாட்டார்.” – அமைச்சர் அலி சப்ரி

“நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வலியுறுத்திய அமைச்சர், இந்த செயற்பாடுகளை பூரண புரிந்துணர்வுடனும் அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடனும் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்..”  என  வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாது. உலகில் உள்ள அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளும் பிராந்திய கூட்டாண்மை மூலம் அந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்தி இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் மற்றும் “இந்திய – இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் தொலைநோக்குப் பார்வை” குறித்து இன்று (22) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி,

இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்துக்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் மொத்த வளர்ச்சியில் 2/3 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம். மேலும் இந்தியாவும் சீனாவும் அதில் முன்னிலை வகிக்கும் என்பது எவ்வித விவாதமும் இன்றி சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையாகும்.

எனவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை உற்றுநோக்கினால், அந்நாடுகள் இணைந்து செயற்பட்டதன் காரணமாக முழு ஐரோப்பிய பிராந்தியமும் வளர்ச்சியடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். சீனாவைப் போலவே, அமெரிக்கப் பிராந்தியமும் அதே முறையில் அபிவிருத்தியடைந்தது. இந்த அபிவிருத்தி வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஜனாதிபதி அண்மையில் இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, பல முக்கிய கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கருடன் கலந்துரையாடிய பின்னர், இந்தியாவின் தலைமை பாதுகாப்பு ஆலோசகருடனும் கலந்துரையாடப்பட்டது. அதன் பின், ஜனாதிபதி, இலங்கை தூதுக்குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த காலத்தில் நாம் சந்தித்த பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா எங்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது. நிதி நிவாரணம் வழங்கியதோடு குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைத்துவத்தையும் வழங்கியது. இந்தக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். அதற்கான இந்தியாவின் ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் இந்திய பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மேலும், நமது இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, நமது பொருளாதார, சமூக மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு முதலீடுகள் தேவைப்படுவதுடன், அந்த முதலீடுகளின் ஊடாக சந்தை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட்டால், இரு நாடுகளும் பெரும் நன்மைகளை பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய பிரதமருடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி தனியார் துறைகளுக்கிடையிலும் உடன்பாடுகளை எட்டுவதற்கு தேவையான பின்னணி குறித்து ஆராயப்பட்டது.

இந்திய ரூபாயை இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்கான ஏற்பாடுகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மீண்டும் பணத்தை ஏனைய நாணய அலகுகளுக்கு மாற்றாமல் எளிதாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமாகும். இந்தியாவும் சிங்கப்பூரை இவ்விதம் கையாண்டு இரு நாடுகளும் பெரும் பயன்களை அடைந்துள்ளன.

மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிகச் சிறந்த உறவை எவ்வாறு பேணுவது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடினோம். இப்போது இந்தியாவுக்கும் பலாலி விமான நிலையத்துக்கும் இடையில் தினசரி விமான சேவைகள் உள்ளன. எதிர்காலத்தில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். மேலும், உள்நாட்டு விமான சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாத்துறையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் சுற்றுலா கப்பல் சேவையை (Cruise Tourism)  மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இது இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு துறையாக இருப்பதுடன், இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இன்று தென்னிந்திய பிராந்தியம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை, இலங்கைக்கு பயனளிக்கும் வகையில், துறைமுகங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு நாட்டுத் தலைவர்களும் இனங்கண்டுள்ளனர்.

துறைமுகங்களுக்கு இடையே இந்த உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டும். இது குறித்து கலந்துரையாடி விடயங்களை ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவது குறித்து தலைவர்கள் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தனர். இவ்விடயங்கள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் விரிவாக கலந்துரையாடிய பின்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்மானிப்பதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்டு பூர்த்தி செய்யும் திறன் உள்ளது. அதன் பிறகு மேலதிகத்தை ஏற்றுமதி செய்ய ஒரு சந்தை வேண்டும். எனவே இதன் மூலம் பாரிய நிதியை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். நமது சூரிய சக்தி மற்றும் காற்று வலு போன்றவற்றை ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் எமக்குப் பாரிய தேவை உள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக கலந்துரையாடினோம்.

மேலும், இதன்போது இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.

இந்நாட்டு விவசாயத்துக்காக தொழில்நுட்ப அறிவைப் பெறுவது மிகவும் முக்கியம். கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கான தொழில்நுட்ப அறிவைப் பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம். இன்று இந்தியா டிஜிட்டல்மயமாக்கலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல்மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கு இந்தியாவிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளை பெறுவது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

மேலும், இந்திய பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், இந்திய முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு அவசியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்கள் இந்நாட்டுக்கு வந்து சுமார் 200 வருடங்கள் கடந்துள்ளன. அவர்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதுடன், இந்திய அரசாங்கம் அதற்காக 750 மில்லியன் இந்திய ரூபாயை முதலீடு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நுவரெலியா பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பது குறித்தும், அது தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வடக்கில் இழுவைப் படகுகளை கொண்டு மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். இலங்கை மீனவர்களுக்கு இந்திய எல்லையைத் தாண்டி அதற்கு அப்பால் செல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இரு தரப்பினரும் ஒன்றிணைந்து தொடர்ந்து கலந்துரையாடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்து சமுத்திர பிராந்தியம் முழுவதையும் பாதுகாப்பான வலயமாக எவ்வாறு பராமரிப்பது மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத விடயங்களை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் கூட்டாக செயல்படுவது குறித்தும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடப்பட்டது என்றும் அலி சப்ரி தெரிவித்தார்.

பாடசாலை மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு பிணை !

தனியார் வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியருக்கு களுத்துறை பிராதான நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (21)  பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

களுத்துறையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் தனியார் வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு 2  மாதங்களும் 10 நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், களுத்துறை பிரதான நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பிலான  வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 22 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” – துரைராசா ரவிகரன்

“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களின் மன நிலையைக் குழப்பி, இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் அரசியல் நோயாளிகள் எனவும் இவ்வாறான அரசியல் நோயாளிகளை பெரும்பான்மையின மக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ரவிகரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

முல்லைத்தீவு குருந்தூர் மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்திருப்பது மிகவும் வேடிக்கையானது.  குருந்தூர் மலையும், குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமமும் தமிழ் மக்களுக்கு உரியவையாகும்.  முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியானது சைவத் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமாகும். அங்கு பரம்பரை பரம்பரையாக சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்கள் பாரியளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுமாத்திரமின்றி தேன் எடுத்தல், மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளிலும் அங்கு வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறாக, தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்கள் நெல் மற்றும் சிறுதானியங்களுடனும், பால், தயிர், நெய், தேன், இறைச்சி என்பவற்றோடு பாலை, வீரை, முரளி உள்ளிட்ட காட்டுப் பழங்களை உணவுகளாக உட்கொண்டு தன்னிறைவாக வாழ்ந்துவந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு கிராமத்தை தழுவி ‘நிலக்கிளி’ எனும் நாவல் இலக்கியமொன்று எழுதப்பட்டுள்ளது. அந்த நாவலை எழுத்தாளர் அண்ணாமலை பாலமனோகரன் எழுதியுள்ளார். தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்களின் வாழ்வியலை இந்நாவல் தெளிவாகக் கூறுகிறது. அந்த நாவலில் கூட எமது தமிழ் மக்கள் குருந்தூர் மலையில் சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சைவ வழிபாட்டு அடையாளமான சூலம் இருந்ததாகவும் குறித்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு இந்த தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்கள், அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். குறிப்பாக, 1984இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பின் பக்கத்து கிராமங்களான ஆண்டான் குளம், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் கூட இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர்.

இவ்வாறு இடப்பெயர்வை சந்தித்த தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களிலேயே குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் ஆகிய கிராமங்களில் இதுவரையில் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை. குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல தடவை தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துமாறு கோரியும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

இவ்வாறு அங்கு வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகளை செய்துவருகின்றனர்.  அந்த திட்டத்தின்படி, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை என்பதுடன், தண்ணிமறிப்பு பாடசாலை தற்போது பூதன்வயல் கிராமத்தில் இயங்கிவருகிறது.

இவ்வாறான சூழலில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து, எம்மை குருந்தூர் மலைப் பகுதிக்குள் போகவிடாமல் தடுத்து, அங்கிருந்த சைவ வழிபாட்டு அடையாளமான திரிசூலத்தையும், முன்னே இருந்த கல்லையும் காணாமல் ஆக்கியுள்ளனர். அத்தோடு, அங்கு புதிதாக பாரியளவில் விகாரையொன்று நிறுவப்பட்டது.

இவ்வாறு தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையில் விகாரையை அடாத்தாக அமைத்துவிட்டு, அதை பௌத்த சின்னமாக அறிவிக்க கோருவது மிகவும் அபத்தமானது.

மேலும், அங்கே அகழ்வாய்வுகளின்போது சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டிருந்தது. அவ்வாறு அகழ்வாய்வுகளில் பெறப்பட்ட சிவலிங்கமானது எட்டுப் பட்டை கொண்ட எண்முகத் தாராலிங்கம் என பல ஆய்வாளர்களாலும் சொல்லப்பட்டது. குறித்த சிவலிங்கம் பல்லவர் காலத்துக்குரியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் அவ்வாறு பெறப்பட்ட சிவலிங்கத்தை எடுத்து தற்போது பௌத்த விகாரையின் உச்சிப் பகுதியில் வைத்துள்ளனர். இந்த சிவலிங்கத்தை விகாரையின் ஒரு பாகமாக சித்திரித்துள்ளனர்.

இப்படியாக அங்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு எமது தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது.

தற்போது எமது தமிழர்களின் பூர்வீகம், இருப்பு, பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றை கேள்விக்குள்ளாக்குகின்ற விதத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசாங்கமும் பௌத்த சிங்கள பெருந்தேசியமும் இணைந்து முன்னெடுத்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்படுவதை எம்மால் உணரமுடிகிறது.

குருந்தூர் மலையில் அகழ்வாய்வு என்ற போர்வையில் அங்கிருந்த தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன. அதேவேளை அங்கு புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டு இடத்தைப் போன்று சித்திரிப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து தண்ணிமுறிப்பு பூர்வீகத் தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள், தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் உள்ளடங்கலாக சுமார் 632 ஏக்கர் காணிகளை விகாரைக்குரிய காணிகளாக அபகரித்துள்ளனர்.

இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்கு கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் போலியான வரலாற்றுத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், ஜயந்த சமரவீர குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவிக்கும்படி கூறுகின்றார்.

இவ்வாறாக எமது தமிழர்களின் பூர்வீக வரலாற்று இடத்தை அத்துமீறி அபகரித்து வைத்துக்கொண்டு, தமிழர்களின் வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு, அதற்கு மேல் பௌத்த வரலாறுகள் இங்கு புதிதாக எழுதப்படுகின்றன.

இதன் மூலம் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. தமிழர்களான எமக்கு இந்த நாட்டிலே வரலாறுகள் இல்லை. தமிழர்கள் இந்த நாட்டில் ஏதிலிகளாக வந்தவர்கள் என காட்டுவதற்கு சிங்களம் முயற்சிக்கிறது. இந்த நாட்டின் பூர்வீகக்குடிகளான எம்மால் சிங்களத்தின் இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்தது என பொய்களை கூறும் பௌத்த துறவிகள், சிங்கள கடும்போக்காளர்கள், சரத் வீரசேகர மற்றும் இந்த ஜயந்த சமரவீர போன்ற சிங்கள இனவாதிகளாலேயே இங்கு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவித்தால் இங்கு இனங்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால்தான் இந்த நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், அந்த ஆயுதப் போராட்டத்தால்  எமது தமிழ் மக்கள் பல உயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நலிவடைந்திருக்கின்ற எமது மக்கள் மீது இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்து, அவர்களை மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தள்ளுவதற்கு இந்த சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.

தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மையின மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்த இனவாதிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (21) துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்கள் குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜயந்த சமரவீர என்னும் இனவாதி பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில், நாம் கடந்த 20ஆம் திகதி (வியாழக்கிழமை) குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதாக இருக்கவில்லை. அப்படியிருக்கும்போது தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மை இன மக்களை வன்முறைக்குத் தூண்டும் விதமாக அவர் இவ்வாறு போலியான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர போன்றவர்கள் தெற்கில் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக போலியான, இனவாதத்தைத் தூண்டும் விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்தும் அவர்கள் பாராளுமன்ற கதிரைகளில் அமர வேண்டுமெனில், இவ்வாறு இனவாதத்தை கக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இவர்கள் தமது அரசியல் இருப்புக்காக எதையும் செய்யக்கூடிய அரசியல் மனநோயாளிகள் என்றே சொல்லவேண்டும்.

கனேடிய உயர்ஸ்தானிகரை வெளியேற்றச் சொல்வது, முல்லைத்தீவு தமிழ் நீதிபதியை விமர்சிப்பது, கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தவர்களை இந்த நாட்டிலிருந்து நீக்கச் சொல்வது உள்ளிட்ட விடயங்களை பார்க்கும்போது, சரத் வீரசேகரவை இந்த அரசியல் மனநோய் எவ்வளவு தூரம் ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

அதேபோல ஜயந்த சமரவீரவும் நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லி, தமிழர்களின் தொல்லியல் இடத்தை பௌத்த தொல்லியல் இடமாக அறிவிக்குமாறு கூறி, தெற்கில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் மீது இனவாதத்தை விதைத்து, அப்பாவி சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளை அறுவடை செய்வதற்கு முயற்சிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் மனநோய் உள்ளவர்களை தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் இனங்கண்டு, இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவேண்டும்.

தமிழ் மக்களான நாங்கள் எமது பூர்வீக வாழ்விடங்களில் எமது பூர்வீக, பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்களுடன் சிறப்பாக வாழ விரும்புகின்றோமே தவிர, இவ்வாறான இனவாதத்தையோ, பிரிவினையையோ, வன்முறையையோ ஒருபோதும் விரும்பவில்லை என்றார்.

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ”  என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் சுரேன் இராகவன் போன்றோரின் அண்மைக்கால கருத்துகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் வீரசேகர கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.  இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி  தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர். அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல சோடிக்கப்பட்ட  பொய்களை ஜெனிவாகூட்டத் தொடரில் முன்வைக்கின்ற  வேலைகளை செய்தது மாத்திரமல்ல, ஜெனிவா கூட்டத்தொடரில் எங்களுடன் மோதுகின்ற வேலைகள் மற்றும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டவர். அதுமட்டிமன்றி தமிழ் நாட்டில் இருந்து வந்த வைக்கோ போன்ற தலைவர்களுடனும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்ட நபராவார்.

தற்போது இவர் அமைச்சரில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் குறிப்பாக  காலகாலமாக இனவாத கருத்துக்களை கூறிவருபவர்கள் போல்  முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத்வீரசேகர ஈடுபட்டு வருகிறார்.

இவர் சிங்கள பெளத்த இனவாத மக்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார். ஏனையவர்கள் மெழுகு புசியவர்கள் போல் எங்களை ஏமாற்றப்பார்கிறார்கள். இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு நாட்டுக்குள் வாழவேண்டும் என்று எங்களுடைய கட்சிகள் அல்லது  தலைவர்கள் நினைப்பது எவ்வாறு?

இனப்படுகொலைகள்  படுமோசமாக இடம் பெற்ற பின்னரும் கூட அதற்கான நீதி கிடைக்குமாயின் அதற்காக  பொதுசன வாக்கேடுப்பு நடாத்தி அதற்காக செல்லமுடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதனை விடுத்து அவர்களிடமிருந்து மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டுக் கொண்டிருந்தால் பிரயோசனம் எதுவும்  இல்லை.

இதனைபோல்தான் தற்போது சுரேன் இராகவன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக . மலையகத்தைச் சேர்ந்தவர். அவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து இன்று ஒன்றுமில்லாமல்  தேசியப்பட்டியல் எம்.பியாக வந்துவிட்டு  அவர் பேசும் பேச்சுக்கள், வீராப்புகளை ஏற்கமுடியாதுள்ளது. அதிலும் சமஷ்டி பெறலாம் என கனவுகாண வேண்டாம் என்றால் நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனை தவிர இதற்குவேறு வார்த்தைக்ள் எம்மிடம் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யவில்லை.  தமிழனாக இருந்து கொண்டு பெளத்தத்தில் ஆராட்சி கெளரவ பட்டத்தை பெற்றுவிட்டு அதில் பிழையில்லை ஆனால் எமது மக்களின் அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வீழ்ச்சியைப் பற்றி கதைக்காது சிங்கள பெளத்த பேரினவாத்தத்திற்கு ஓத்துதுகின்றவராக  சுரேன் இராகவனும் இணைந்துள்ளார். அதுமட்டுமன்றி சரத்வீரசேகரவின் அணியில் இணைந்து கொள்ளட்டும். இவற்றையேல்லாம் கண்டு ஈழத்தமிழர்கள் அச்சப்பட போவதில்லை. பயப்படபோவதில்லை  இவர்களுடைய இனவாத கருத்துகள் எங்களுடயை இறுதி இலட்சியத்தை அடைவதற்கு உரமூட்டும் என்பதை நம்புகின்றோம் என்றார்.

போலிச் சாமியார் ஓம் சரவணபவாவுக்கு முண்டுகொடுக்கவில்லை! – தனிமனிதர்களின் நம்பிக்கைகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பல்ல

வர்த்தக ரீதியில் தென்னிந்திய சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ள லைக்காமோபைல் நிறுவனத்துக்கு எதிரான தீவிர செய்திப் பிரச்சாரங்கள் தமிழகத்தில் முடக்கிவிடப்பட்டுள்ளது. அதன் எதிரொலிகள் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கின்றது. “லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் போலிச் சாமியார் ஓம் சரவணபவவிற்கும் எவ்விதமான அமைப்பு ரீதியான தொடர்புகளும் கிடையாது. வியாபார ரீதியாக லைக்காவுக்கு ஓம் சரவணபவவினால் எவ்வித நன்மையும் கிடையாது. ஓம் சரவணபவவுடன் கறுப்பு பணத்தைக் கூட வெள்ளையாக்க முடியாது. லைக்காவின் நிதிப் புரள்வோடு ஒப்பிடுகையில் ஓம் சரவணபவவின் அறக்கட்டளைக் கணக்கு ஒரு பொருட்டானதேயல்ல.
சமூக வலைத்தளங்களில் போலிச் சாமியார் எப்படி லைக்காவுடன் பேசப்பட்டார்?
லைக்காமோபைல் நிறுவனத்தின் துணை நிறைவேற்று பொறுப்பாளரான பிரேம் என்றழைக்கப்படும் பிரேமநாதன் சிவசாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிய காலகட்டத்தில் பிரேமின் நண்பர்களால் முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிரேமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரேமின் குடும்ப நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரேமின் வீட்டினுள் ஓம் சரவணபவ நுழைந்தார். பிரேம் யார் என்பதையும் பிரேமின் நோயையும் நன்கு அறிந்து வைத்திருந்த ஓம் சரவணபவ திறம்பட தனது காய்களை நகர்த்தி ஆடினார். சுவாமி தனது வித்தைகளை செவ்வனே பயன்படுத்தி பிரேம் குடும்பத்தை குறிப்பாக பிரேமின் மனைவியை ஆன்மீகத்துக்குள் இழுத்தார். இத்தம்பதியர் ஹரோ ஓம் சரவணபவ ஆலயத்தில் அம்மனுக்கான ஒரு இடத்தைக் கட்டிக்கொடுத்தனர். அவர்கள் அதனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
பிரேம் ஊடாக சுபாஸ்கரனின் தொடர்பும் கிடைத்தது. சுபாஸ்கரனும் சுவாமிகளின் தீர்த்தம் பெற்றார்.
அதேசமயம் என்புமச்சை சிகிச்சை மூலம் பிரேம் நோயில் இருந்து குணமடைந்தார். இருந்தாலும் நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஓம் சரவணபவ தலையிட்டதால் அன்று அவர் காட்டிய பரிவான கரிசனைக்கு பிரேம் தம்பதியர் நன்றியுடையவர்களாக உள்ளனர். ஓம் சரவணபவ என்ற இந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் இவ்வாறான பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்வந்தர்களை அணுகி அவர்களை வென்றெடுப்பதில் பெரும் கில்லாடி. அந்த வலையில் வீழந்துள்ளதே தெரியாமல் உள்ள பல நூற்றுக்கணக்கானோரில் பிரேம் தம்பதியினரும் அடங்குகின்றனர்.
இது தொடர்பாக இவ்வழக்கோடு தொடர்புடைய சட்டவல்லுநர் ஒருவர் கூறுகையில், பிரேம் தம்பதியினரின் நிலையைத் தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தர். தானும் இவ்வாறு ஓம் சரவணபவவின் கரிசனையில் மயங்கி பல்லாயிரம் பவுண்களை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பிரேமின் குடும்ப நண்பர் மேலும் தெரிவிக்கையில், பிரேமின் மனைவி இப்போதும் அந்த ஆலயத்துக்குச் சென்று தாங்கள் கட்டிய அம்மன் சன்னிதானத்தில் அமைதியாக இருந்து கும்பிட்டு வருகின்றார். இந்த தனிமனித நம்பிக்கைகள், பலவீனங்கள் ஒவ்வொரு மனிதர்களிடமும் உண்டு என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னணியிலேயே லைக்காமோபைல் நிறுவனத்தை ஓம் சரவணபவவுடன் தொடர்புபடுத்தி தங்கள் வியாபாரப் போட்டிகளுக்காகச் செய்வதாக அந்நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
லைக்காமோபைல் ஒன்றும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் கிடையாது. கூகிள், ஸ்ரார்பக், டொனால்ட் ரம் போல் வரிசெலுத்தாமல் டிமிக்கி விகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது நீண்டகாலமாகவே உள்ளது. மேலும் தமிழ் கோப்பிரேட் நிறுவனமான லைக்காமோபைல் ஏனைய கோப்பிரேட் நிறுவனங்கள் போன்று லாபத்திற்காக எதனையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களாகவே உள்ளனர். ஆனால் ஓம் சரவணபவவின் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கும் லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் தொடர்புகளும் கிடையாது எனத் தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக பிரேம் சிவசாமியிடம் கேள்வி எழுப்பிய போது: “ஓம் சரவணபவ – முரளிகிருஸ்ணன் புலிக்கள் குற்றவாளியா இல்லையா என்பதை பிரித்தானியாவின் சட்டத்திடமே விட்டுவிடுவோம். நானோ எனது நிறுவனமோ அவரைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அவருக்கு எவ்வித சட்ட உதவிகளையும் செய்து கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். “அவர் குற்றம் செய்திருந்தால் அவரை இந்நாட்டு நீதிமன்றம் தண்டிக்கும்” என்றும் தெரிவித்தார். பிரேம் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் ஓம் சரவணபவ ரஸ்டிகளிடமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிதியுள்ளது. அவர்களுக்கு நான் சட்ட உதிவியோ நிதியுதவியோ செய்ய வேண்டியதில்லை” என்றும் தெரிவித்தார்.
பிரேம் மேலும் குறிப்பிடுகையில் “தேசம்நெற் இல் வெளியான சில தகவல்கள் தவறானது என்றும் எழுத்தமைப்பு ஆரோக்கியமானதாக அமையவில்லை” என்றும் தெரிவித்தார்.
ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்ததைத் தொடர்ந்து லண்டனில் உள்ள தமிழர்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராகவும் சார்பாகவும் பிளவடைந்துள்ளனர்.
இவ்வழக்கு டிசதம்பர் 5 முதல் ஒரு வாரத்திற்கு நடைபெறவுள்ளது. அதுவரை ஓம் சரவணபவவிற்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. ஓம் சரவணபவ தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி மேற்கொண்ட விண்ணப்பம் யூலை 24 இல் விசாரணைக்கு வருகின்றது.