09

09

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய ஹன்டா் பைடன் – மகனுக்கு பொதுமன்னிப்பு இல்லை என்கிறார் ஜனாதிபதி ஜோ பைடன் !

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக மகன் ஹன்டா் பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளாா்.

போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் ஹன்டா் பைடன் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு தாராள அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவா்களால் அதை வாங்க முடியாது.

இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் ‘போதைப் பொருள் பழக்கம் கிடையாது’ என்று ஹன்டா் பைடன் பொய்யாகக் கூறியதாக அவா் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.

இது குறித்து ‘ஏபிசி’ தொலைக்காட்சிக்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில், ‘சட்டவிரோத துப்பாக்கி கொள்முதல் வழக்கில் அளிக்கப்படும் எந்தத் தீா்ப்பையும் ஏற்றுக்கொள்வேன். அந்த வழக்கில் ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் என் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கமாட்டேன்’ என்றாா்.

இந்த வழக்கு விவகாரத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹன்டா் பைடனுக்கு சலுகைகள் அளிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தாக்குதல் – ஓமன் அரசு கண்டனம் !

இஸ்ரேல் இராணுவம் ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது’ ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இச் செயல் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. மேலும் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஓமன் அரசு  கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் அமெரிக்கா தொடரும் – பெத் வான் ஷாக்

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்தபோது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த தலைமை இராஜதந்திரிகளின் அமர்வில் பங்கேற்றிருந்தார்.

இதில் பங்கேற்பதற்கச் சென்றிருந்த ஜுலி சங் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக்குடன் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பது அருமையாக இருந்தது – நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அமெரிக்க தூதுவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தினை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு 553 மில்லியன் டொலர்கள நிதி உதவியை செயற்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையில் தனியார் துறையின் முன்னணி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் மேற்குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமி உதிக்கும் காட்சியை படம்பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் விபத்தில் பலி !

விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்படம் ஒன்றைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.