19

19

உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் !

உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்களை ரஷ்யா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்கா, ரஷ்யா, பித்தானியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதத்தை ரஷ்யாவும் அமெரிக்காவும் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது சீனாவின் வசமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் வசம் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதற்காக உலக நாடுகள் சுமார் 91.3 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் தற்போது 9,585 அணு ஆயுதங்கள் செயற்பாட்டிலுள்ளதாகவும், இதில் சீனாவிடம் மட்டும் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியது தாய்லாந்து!

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை தாய்லாந்து அரசு நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகின்றது.

இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் அரசின் குறித்த அறிவிப்பை அடுத்து தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்.ஜி.பிடி சமூகத்தினர் ஒன்று கூடி வானவில் கொடியைக் காற்றில் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹஜ் யாத்திரையில் வெப்ப அலை – 550 யாத்ரீகர்கள் உயிரிழப்பு !

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என்று கூறப்படுகிறதுடன் அவர்களில் பெரும்பாலோர் நீர்ச்சத்து குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் வெப்பமான காலநிலையில் யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ள முடியாமல் தவித்த நிலையில், அவர்களில் பலர் மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் கர்நாடகாவில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்யும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் பூகோள ரீதியிலான நிலைமை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இவ்வாறான நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே மட்டங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.