16

16

“மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்பட்டால் கிழக்கில் வஹாபி பல்கலைக்கழகங்களும், வடக்கில் இனப்படுகொலை பற்றிய பாடத்திட்டங்களும் ஆரம்பமாகும்.” – நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர எச்சரிக்கை!

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் அன்றி, மாகாணசபைகளினால் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். 13 ஆவது திருத்தச்சட்டத்தில் கல்விக்கான அதிகாரம் கூறப்பட்டுள்ளதே ஒழிய, பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

 

அப்படி நேர்ந்தால், கிழக்கு மாகாணத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் அனுசரனையுடன் வஹாபி பல்கலைக்கழகங்கள் அல்லது ஷரீஆ சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியுமாக இருக்கும்.

 

அதேபோல், கனடாவின் ஒன்டேரியோ பிராந்திய பாடசாலைகளில், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக கற்பிக்கப்படுவது போன்று, வடக்கில் ஆரம்பிக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மனங்களை மாற்றும் இவ்வாறான பாடத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுவிடும்.

 

பல்கலைக்கழகங்கள் நாட்டை முன்னேற்றும் வகையிலும், நாட்டுக்கான புத்திஜீவி சமூகத்தை உருவாக்கும் வகையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய, அரசியல் நோக்கத்திற்காகவோ ஆளுநர் அல்லது முதல்வர்களின் தேவைக்காகவோ ஸ்தாபிக்கப்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் – கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும் அமரர் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச தொழில்கல்வி நிறுவனமாக கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் – சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் 52ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வு எதிர்வரும் 18.11.2023 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் கல்வி பண்பாட்டு மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான திரு.சி.கருணாகரன் தலைமையில் இடம்பெறும் மேற்குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் 100 ஆளுமைகளை ஆவணப்படுத்தி வெளிவரும் “யார் எவர் – கிளிநொச்சி 2023” என்ற நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன் சிவஜோதி ஞாபகார்த்த விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி !

பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணியொன்று இன்று யாழில் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர், து.சுபோகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் திருக்குடும்பகன்னியர் தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.