24

24

“மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.” – இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

 

இந் நாட்டில் மக்களின் வரிகளை பெற்றுக்கொண்டு மாளிகைகளும் கோபுரங்களும் கட்டி வைத்துள்ள இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ மேலதிகாரிகளின் பாதுகாப்புக்கென பாரிய நிதி செலவிடப்படுகின்றது.

 

இருப்பினும் இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் யுத்தம் முடிந்த பின்னும் கோட்டாபயவினார் மேலதிகமாக இணைக்கப்பட்டு அவர்கள் மேசன், தச்சுத்தொழில் மற்றும் கூலி வேலைகளுக்க்காக அமர்த்தப்பட்டார்கள்.

 

இலங்கை மக்கள் அவர்களின் வேதனத்துக்கும் சேர்த்து தற்பொழுது பாரிய வரி செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுள்ளார்கள்.

 

இருப்பினும் இவர்களும் இப் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படுள்ளனர். ஆனால் இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் ஆனது இன விரோதத்தை மென்மேலும் தூண்டும் விதமாகவும் அவமரியாதை செய்யும் விதமகாவும் அமைந்துள்ளது.

 

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டதை நான் மிகவும் துக்ககரமான சம்பவமாக கருதுகின்றேன்.

 

ஓர் இனத்துக்காக இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும் இந்த இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிப்பதாகும். அவர்களின் பெற்றபெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் பிள்ளைகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள் என சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.

யாழில் இளைஞன் பொலிஸ் காவலில் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கு – ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய உத்தரவு !

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் அமெரிக்க தூதுவர் – சரத்வீரசேகர விசனம் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன். என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.குழுவின் அனுமதியுடனேயே 3 முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கிறார்.ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.

 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

 

அமெரிக்க தூதுவருக்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது.தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்

யாழ்ப்பாணத்தில் 130க்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று 4 ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

 

இதன்போது, மேலும், 3 மனித எச்சங்கள் முழுமையாகவும், 2 மனித எச்சங்கள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

 

இந்த அகழ்வு பணியானது இன்று 5 நாளாகவும் இடம்பெற்று வருவதுடன், இதன்போது விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித புதைகுழியானது எவ்வளவு ஆழமானது என்று சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நேற்று மாலை 3 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

இருப்பினும் இன்று காலை 9 மணியளவில் மீண்டும் அங்கு அகழ்வு பணிகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே வருடத்தில் பொலிஸ் காவலில் இருந்த 20 பேர் பலி !

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11ஆம் திகதி குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

“வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.” – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

வரவு – செலவுத் திட்டக் குழு விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொர இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதனால் அப்பிரதேசத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தி எவரையும் இச்சேவையில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டு வந்திருந்தோம்.

 

பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை புகட்டும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் அவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படவில்லை. எனவே அவ்வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.