20

20

மாவீரர் நினைவேந்தலை தடை செய்ய கோரிய பொலிஸார் விண்ணப்பத்தை நிராகரித்தது மல்லாகம் நீதவான் நீதிமன்றம்!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.

 

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்ய கோரியே காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.

 

நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது. எதிர்மனுதாரர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதத்தை தொடர்ந்து, வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது.

 

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என தெரிவித்ததுடன் காவல்துறையின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது.

 

எதிர்மனுதாரர்களின் சார்பில் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

 

இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று மல்லாகம் நீதிமன்றத்தில் மானிப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கட்டளை நாளை (21) வழங்கப்படவுள்ளது.

“புலிகளிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பாதுகாத்ததும், துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான்” – விமலவீர திஸாநாயக்க

மகிந்தவின் புண்ணியத்தால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குகூட சுதந்திரமாக நடமாடமுடிகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளும், ஜே.விபியினரும்தான் இந்நாட்டை சீரழித்தனர். ராஜபக்சக்கள்தான் இந்நாட்டை மீட்டெடுத்தனர். அபிவிருத்தியில் புரட்சி செய்தனர். எல்லா வீதிகளும் ‘காபட்’ இடப்பட்டு புனரமைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் கட்டியெழுப்பட்டன. இப்படி ராஜபக்ச யுகத்தில்தான் நாட்டுக்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்சவுக்கு முன் இருந்த தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

 

எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. கடவுளும் வரவில்லை.எமக்கு உயிர் தந்தது மஹிந்த ராஜபக்சதான். நாட்டை மீட்டெடுத்ததும் அவர்தான்.எனது கிராமத்தையும் பாதுகாத்து தந்தது மஹிந்ததான்.

அதனால் யார் என்ன கூறினாலும் நான் அவருக்கு சோரம்போவேன்.

தலதாமாளிகை தாக்கப்படும் போதும், எல்லை கிராமங்களில் தாக்குதல் நடக்கும்போதும் நாட்டை மீட்கயார் இருந்தது? அவ்வாறு மீட்ட மஹிந்த துரோகியா? எமக்கு மூச்சு தந்த ராஜபக்சக்கள் துரோகிகளா?

மரண பீதியுடன் வாழ்ந்தவர்களுக்கு உயிர் தந்த ராஜபக்சக்களை வீரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் துரோகிகள் ஆக்கியுள்ளனர்.

 

போர் காலத்தில் இந்த வீரர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.ராஜபக்சக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் நாட்டை மீட்டது ராஜபக்சக்கள்தான். கொரோனாவால் மக்கள் செத்து மடியும்போது மக்களை பாதுகாத்தது ராஜபக்சக்கள், இப்படியானவர்கள் துரோகிகளா? ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் நானும் ஈழத்தில்தான் வாழவேண்டி வந்திருக்கும்.

 

மஹிந்தவின் புண்ணியத்தால்தான் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணையிறவு, வவுனியா என எல்லா பகுதிகளிலும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான் என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் தாக்கியதாலேயே இளைஞர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் – வெளியானது சட்ட மருத்துவ அறிக்கை!

களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

 

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றைய தினம் உயிரிழந்தார்.

 

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தார்.

 

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த 8ஆம் திகதி திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

 

தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

 

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

 

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்கவாலரின் காவலுடன் உயிரிந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

 

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது. உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிசாரால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளைஞன் பலி – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழ பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரும்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலாதிக்கம் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இளைஞனை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதால் தான் இளைஞன் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் , பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதை செய்தனர் என கூறும் உயிரிழந்த இளைஞனின் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்நிலையில் இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் ஊரவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பாரிய போராட்டம் ஒன்றினை பொலிஸ் நிலைய பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணைக்கு ஏதுவாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் எரியப்படும் குப்பைகளை அகற்ற 2 மில்லியன் ரூபா செலவு !

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் எரியப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாகவும், நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் மட்டும் 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளி பாதமலை யாத்திரை காலம் டிசம்பர் 26 ஆம் திகதி போயா அன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை எடுத்துச் செல்லாமல் சிவனொளி பாதமலையை தரிசிக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் பக்தர்களுக்கு தேவையான வீதிகள், நீர், மின்சாரம் மற்றும் ஏனைய பொது வசதிகள் எதிர்வரும் நாட்களில் அபிவிருத்தி செய்யப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் செல்போன் பாவனையே இவ்வாறான பல குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சுமார் 5,000 பதிவாவதாக இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. எமது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றுமொரு மிகப்பெரிய காரணி. இலங்கையில் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பதிவாகும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும்.

கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஐ.சி.சி அறிவிப்பு !

இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக கிரிக்கட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று (19) வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (20)  அறிவித்தலை விடுத்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் செல்வாக்கு இன்றி ஸ்ரீலங்கா கிரிக்கட் சுயாதீனமாக செயற்படுவது அவசியமானது எனவும், அனைத்துப் பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் கூடிய கூட்டத்தில் உரிய தீர்மானத்தை சபை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவ்வாறானதொரு தடையை கோரியதாக அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள கிரிக்கட் சம்மேளனம், குறித்த தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தற்போதுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை தாக்கி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இலங்கை கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டை அமைச்சர் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குற்றம் சாட்டியுள்ளது.