மோசடியாளர்களின் பக்கமே நான் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்த செயலாற்றுகை எந்தளவுக்கு உறுதியாக காணப்படுகிறதோ அந்த அளவுக்கு அரச நிர்வாகம் வினைத்திறனாக இருக்கும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு இன்று பலமாக உள்ளதா அல்லது பலவீனமடைந்துள்ளதா,
என்பதை சற்று ஆராயுங்கள். கிரிக்கெட் துறையின் ஊழல் மோசடியை வெளிப்படுத்தி,தற்றுணிவுடன் செயற்பட்டதால் விளையாட்டுத்துறை,இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.
கோட்டபய ராஜபக்ஷவின் நிர்வாகம் மோசமானது என்று குரல் எழுப்பப்பட்டதால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மகுடம் சூட்டப்பட்டது. ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக உள்ளது. போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மகுடம் சூடிய ரணில் விக்கிரமசிங்க தனது உண்மை முகத்தை நேற்று (நேற்று முன்தினம்) காண்பித்துள்ளார்.
ஊழல் மோசடி தொடர்பில் கருத்துரைத்தவரை பதவி நீக்கி விட்டு,ஊழல்வாதிகள் பக்கம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார். இவ்வாறான நிலையில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்தம் எவ்வாறு பாதுகாக்கப்படும்.
பொருளாதார பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல் சிறுப்பிள்ளை போல் கடந்த அரசாங்கம் செயற்பட்ட போது தவறுகளை சுட்டிக்காட்டினோம். குறிப்பிட்ட விடயத்தை ஆராயாமல் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.
அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளி வைத்தது. அரசாங்கத்துக்கும், மக்களுக்குமிடையிலான தொடர்பு முறிந்தது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியதுடன் ஆரம்பமாகியுள்ளது.
ஊழல்வாதிகளுக்கு சார்பாகவே நான் செயற்படுவேன் என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.பொதுஜன பெரமுனவினர் ஆட்சியதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து விட்டு அரச நிர்வாகம் முறையாக இடம்பெறுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.வெகுவிரையில் அதன் பிரதிபலனை அவர்கள் பெறுவார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.சுமார் 06 இலட்சம் பேரின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 12 இலட்சம் பேருக்கு சிவப்பு எச்சரிக்கை மின்கட்டண படிவம் அனுப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாமல் கடுமையான தீர்மானங்களை அமுல்படுத்துதால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது.
மின்கட்டண அதிகரிப்பால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.இந்நிலை நீடித்தால் சமூக கட்டமைப்பு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 20 ஆயிரம் ரூபா மாதந்தம் வரி அறவிடலுக்கான முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எவ்விதமான திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.வரி அறவிடல் மாத்திரமே அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 அம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவியை பெற்றுக்கொள்வார். நாட்டின் எதிர்காலம் குறித்து அவருக்கு அக்கறையில்லை. தற்போதைய தவறான தீர்மானங்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்.