நாளை பிரித்தானிய நாட்காட்டியில் மிக முக்கியமான நாள். ‘Rememberance Day’ – ‘ஞாபகார்த்த தினம்’ உலக மாகா யுத்தம் நவம்பர் 11ம் திகதி 11 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டநாள். அதையொட்டி அந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கின்ற தினம். தற்போது முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் மட்டுமல்ல அதன் பின்னான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அதில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களையும் நினைவு கூருகின்ற மிக முக்கிய சடங்காக 11 / 11 மாறியுள்ளது.
ஒடுக்குமுறையை எதிர்க்கின்ற மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம். பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்கத் தவறினால், அதனைத் தடுக்கத் தவறினால், அதிகாரமும் இராணுவ பலமும் உடையவர்கள் தாம் விரும்பியதை எந்த விலையைக் கொடுத்தும் அடைய முடியும் என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன் நாளைய எதிர்காலம் மிக மோசமானதாக்கப்பட வாய்ப்பாக அமையும்.
இனவெறிக் கருத்துக்களை விதைத்து ஏழை, நலிந்த மக்களை தரக்குறைவாக மதிப்பிடும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் Rmemberance Dayயைக் காரணம் காட்டி இந்த போராட்டத்தை நிறுத்தவும் பெரு முயற்சியில் இறங்கியிருந்தார். அதனையும் மீறி மெற்றோபொலிட்டன் பொலிஸார் ஊர்வலத்தை தடை செய்ய மறுத்திருந்தனர்.
இந்த போராட்ட நாளில் ‘தமிழ் சொலிடாரிட்டி’ அமைப்பு பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்து இப்போராட்டத்தில் தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுள்ளனர்.