19

19

வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகாவை செயற்கை நுண்ணறிவின் (AI) ஊடாக வடிவமைத்துள்ளனர் – சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகாவை செயற்கை நுண்ணறிவின் (AI) ஊடாக வடிவமைத்துள்ளதாக சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள், இலங்கைக்கு அறிவித்துள்ளதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தன்று, செயற்கை நுண்ணறிவின் ஊடாக வடிவமைக்கப்பட்ட துவாரகாவை, உயிருடன் இருப்பதை போன்று வெளிப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிய வருகின்றது.

மாவீரர் தினத்தன்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் சிறப்புரையாற்றுவது வழக்கம்.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள சர்வதேச புலிகள் வலையமைப்பு வெளிநாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நோர்வேயில் உள்ள மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் நெடியவன் என்கிற பேரிம்பநாயகம், நோர்வேயில் இருந்து விடுதலைப் புலிகளை மீட்டெடுக்க பல தடவைகள் முயற்சித்த போதிலும் புலனாய்வு அமைப்புகள் அதனை முறியடிக்க முடிந்ததுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஒரே வருடத்தில் இலங்கை கடற்பரப்பில் 196 இந்திய மீனவர்கள் கைது !

இந்த ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 196 இந்திய மீனவர்களையும் 29 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கில் இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது – மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர், மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர்.

வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் த. ஜெயந்தன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்தபோதே இவ்வாறு உறுதியளித்தனர்.

வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட ஆளுநர், இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மாணவர்கள் மீது அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதால், அவர்கள் மனநிலை ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், வாழ்க்கையின் அடுத்த நகர்வுக்கு அது இடையூறாக அமைவதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆகவே, பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதோடு, இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர், வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர் ஆளுநரின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததோடு, இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அத்துடன் வட மாகாண கல்வி மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் அதிபர்கள் சங்கத்தினர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளித்தனர்.

2 மில்லியன் ஏக்கர் காணிகளை விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 2 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். மாலைதீவின் புதிய ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம். போட்டித்தன்மை கொண்ட மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், வலுசக்தி மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவது முக்கியத்துவமுடையதாகும்.

இலங்கையை பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவது முக்கியத்துவமுடையதாகும். அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, விவசாயத்தை நவீனமயமாக்குவது, காணி உரிமை தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 02 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அத்துடன், பாரியளவிலான நவீன விவசாய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சில திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு பிரவேசித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்துக்காக அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாரிய பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய தொழில்மயமாக்கல் குறித்தும் அவதானம் செலுத்த முடியும்.

அதேபோன்று, பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, லாவோஸ், கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து அந்த நாடுகளிலும் முதலீடு செய்ய இலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நேபாளத்தையும் ஒன்றிணைக்க முடியும்.

மேலும், வங்காள விரிகுடாவை சூழவுள்ள நாடுகளுக்கிடையில் சுற்றுலா வலயத்தை உருவாக்கும் திட்டம் காணப்படுகிறது. கெரீபியன் தீவுகளை விட இது மிகப்பெரிய மாற்றீடாக அமையும். பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் இணைவதற்கு இலங்கை தற்போது விண்ணப்பித்துள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் பரந்த பொருளாதார பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் இளம் தொழில்முனைவோர் கவனம் செலுத்த வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள பொருளாதார ஆற்றல்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எதிர்பார்க்கப்படும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று இளம் தொழில்முனைவோரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.