17

17

இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பும் வனிந்து ஹசரங்க !

2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியடைந்தமைக்காக மிகவும் வருந்துவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், எல்லா நேரங்களிலும் நாட்டுக்காக தான் விளையாடியதாக ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

 

எல்பிஎல் போட்டிக்குப் பிறகு, தனது காயம் ஓரளவுக்கு குணமடைந்ததாகவும், ஆனால் பயிற்சி தொடங்கிய பிறகு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சத்திரசிகிச்சையின் பின்னர் 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தற்போது சத்திரசிகிச்சை முடிந்து 05 வாரங்கள் கடந்துள்ளதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய அளவில் தனது பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வனிந்து குறிப்பிட்டுள்ளார்.

 

12 வாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாட முடியும் என, வனிந்து ஹசரங்க நம்பிக்கை வெளியிட்டார்.

“2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்நேற்று(16) நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல்வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இதன்போது ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு “மாகே மங்பெத” என்ற சுயசரிதை நூலும் வெளியிடப்பட்டது.

 

இந்நாட்டின் கல்வித் திட்டத்தை மறுசீரமைப்புக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, “அனைவருக்கும் கல்வி” என்பதே ஆர்.ஐ.டி அலஸின் நோக்கமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

 

பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்நாட்டு பிள்ளைகளின் உயர் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு பங்களிப்பு வழங்கும் தனியார் துறையினருக்கு குறைவின்றி ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்தார்.

 

நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின் இந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழ், சிங்கள இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

 

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். கல்வியை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஜப்பான், சீனா, அரபு, கொரிய மொழிகளையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

 

2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டமும் தயாரிக்கப்படும்.

 

இந்நாட்டின் உயர்கல்வி தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இந்நாட்டின் இலவசக் கல்வி இருப்பதாக கூறினாலும் பெருமளவானோர் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் இந்நாட்டு பிள்ளைகள் உயர்கல்வி பயில்கிறார்கள். அந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைமைகளை நமது நாட்டிலும் செயற்படுத்துவோம்.

பல்கலைக்கழங்களுக்கு செலுத்த அவசியமான பணத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதே இலவச உயர்கல்வியாகும் என பலரும் கூறுகிறார்கள். இருப்பினும் மற்றைய நாடுகளில் அந்த முறையில் உயர்கல்வி வழங்கப்படுவதில்லை.

 

கல்விச் செயற்பாடுகளை தொடர மாணவர்களுக்கு சலுகை கடன் வழங்கப்படுகிறது. அதனால் விரும்பிய பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மாணவருக்கு கிடைக்கிறது. எமது நாட்டில் அந்தத் தெரிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே செய்கிறது. அதனால் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோல் பணம் இல்லாதன் காரணத்தால் எந்தவொரு மாணவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடாது.

 

இந்நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போதுள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு அவசியமான வசதிகளை வழங்கி அதன் பலன்களை 05 வருடங்களில் அடைய வேண்டும். அதன் போது மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும். அதேபோல் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு இணையான 03 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

 

அதேபோல் அரச சார்பற்ற நிறுவனங்களை ஆரம்பிக்கவும் நாம் அனுமதி வழங்குவோம். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படும். எனவே காணிகளை விற்பனை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாட்டின் பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களின் வருகையும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது. அதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

2024இற்கான புத்தங்கள் தற்போதும் அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

யுனெஸ்கோவுடன் இணைந்து 8 பாடசாலைச் சேர்ந்த 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கூப்பன்களைப் பகிர்ந்தளிக்கவுள்ளோம். அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் பயன்படுத்தாமல் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக்கொடுப்போம்.

யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட்டுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டும் – அனுர குமார

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், உள்ளிட்டவர்கள் தான் பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தற்போது இன்னொருவரையும் இதில் சேர்க்க வேண்டும். அவர் தான் அமைச்சர் பந்துல குணவர்த்தன.

 

ஏனெனில், இவர்தான் பொருளாதாரம் தொடர்பாக இந்த நாடாளுமன்றில் அதிக தடவை கதைத்துள்ளார்.

 

எனவே, தனது பெயர் இந்தப்பட்டியலில் இல்லாதமையை நினைத்து பந்துல கவலையடைகிறாரோ தெரியவில்லை. அத்தோடு, நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், உயர்நீதிமன்றின் தீர்ப்போடு இந்தத் தெரிவுக்குழு பயனற்றதாகிவிட்டது. இதனால், இந்தத் தெரிவுக்குழுவை கலைக்க வேண்டும் என நான் சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் சுமார் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது !

யாழில் சுமார் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் – விஜித ஹேரத் குற்றச்சாட்டு!

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உணவு மற்றும் வரி வசூல் மட்டுமே வரவுசெலவு திட்டத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவருவதாக 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட போதிலும் அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய தந்தைக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை !

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு தனது மகளை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

 

அத்துடன் தனது மகளை துன்புறுத்தும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் பகிர்ந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

 

இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

அதேசமயம் அச்சிறுமியும் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபருக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து நிதிமன்றம் தீர்பளித்துள்ளது.

“1956இன் தனிச்சிங்கள சட்டமே நாட்டை வீழ்த்தியது.” – மனுச நாணயக்கார

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது.

 

“அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் சமூகத்தில் பரப்பப்பட்டன.

 

இதனை அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த நாடு வீழ்ந்தபோது, அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பேச்சில் மட்டுமன்றி, செயற்பாட்டிலும் எமது ஐக்கியத்தை நாம் காண்பித்துள்ளோம். எதிர்க்காலம் குறித்து மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், புதிதாக சிந்திக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்துதான், இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்தது.

 

இங்கு தான் நாம் பிரிந்தோம். இதன் பின்னர்தான் ஆயுதம் ஏந்தப்பட்டு, கொடிய யுத்தமும் நாட்டில் ஏற்பட்டது. இவை தான் நாடு முன்னேற்றமடைய தடையாக இருந்தன.

 

1956 இற்குப் பின்னர் நாட்டை விட்டு பல புத்திஜீவிகள் வெளியேறினர். 1983 இலும் 2022 இலும் இதேபோன்று புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

 

நாம் நம்மை உணராத காரணத்தினால்தான், அடுத்தவரின் குறைகளை பெரிதாகக் காண்கிறோம். நாம் ஏனையவரின் மத, இன, கலாசாரத்தை மதித்தால் மட்டுமே, இந்நாட்டை முன்னேற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.