15

15

1990இல், வடக்கிலிருந்து புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக செய்த இனச்சுத்திகரிப்பு இன்றும் தொடர்கிறது.” – பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் !

வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

“வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்தவே முயற்சிக்கின்றனர்.

 

மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்காளர் இடாப்பிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அரச அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும். 1990இல், வடக்கிலிருந்து புலிகள் இதே பாணியில்தான் முஸ்லிம்களை வெளியேற்றினர். இன்னும், இதே சிந்தனையில் அரச அதிகாரிகள் செயற்படுவது வெட்கக்கேடானது.

 

நான் அமைச்சராக இருந்தவேளை, முப்பதாயிரம் தமிழர்களை மீளக்குடியேற்றினேன். ஆனால், முஸ்லிம்களை குடியேற்ற வடக்கிலுள்ள அதிகாரிகள் விரும்பவில்லை. எனினும், அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று பலத்த சவால்களுக்கு மத்தியிலேதான், ஏழாயிரம் வீடுகளை நிர்மாணித்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

 

முல்லைத்தீவில் முஸ்லிம்களை குடியேற்ற காணிகளை துப்புரவு செய்தபோது, எங்களது முயற்சிகளுக்கு குறுக்காக நின்ற சிலர், எங்களை கொன்றுவிட்டுத்தான் முஸ்லிம்களை குடியேற்ற வேண்டும் என்றனர். எங்களிடம் அதிகாரம் இல்லாத நிலையில், முஸ்லிம்களின் காணிகளை இலஞ்சம் பெற்று வேறு பலருக்கு விற்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எனவே, எஞ்சியுள்ள வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற முறையான வேலைத்திட்டத்தை கோருகின்றேன். இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போருக்கே எதிர்வரும் தேர்தலில் எமது ஆதரவு.

 

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஜெனீவாவில் வழங்கப்பட்ட உறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவர்கள் மீள்குடியேறும் வரை எதிர்கொள்ளும் தொழில்ரீதியான சவால்களை தீர்ப்பதற்கும் நடவடிக்ககைள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையலாம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(14) மாலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஒரே தடவையில் முடியாமற்போனாலும், சிறிது சிறிதாக மீண்டெழ முடியும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான உள்நாட்டு உற்பத்தி இலக்கை குறிப்பிடத்தக்க அளவு அடையலாம் என ஜனாதிபதி கூறினார்.

நாடு 2018 ஆண்டின் நிலைமைக்கு இன்னமும் திரும்பவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் சரியான பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய நடவடிக்கைகள் அதற்கான தயார்ப்படுத்தல் மாத்திரமே என சுட்டிக்காட்டியுள்ளார்​.

காணாமலாக்கப்பட்டோருக்கான 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தல் !

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் இன்று (15) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

அவர்களுக்கு இதுவரையில் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை, ஆனால் இலங்கை அரசு அதனை புறம்தள்ளிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 1500 மில்லியல் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், நாங்கள் நிதிக்காகபோராடவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம்.

 

எமக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான நீதியை பெற்றுத்தரும், எனவே அதை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக இம்முறை வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயம் கண்டனத்துக்குரியது.

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த அதிபர் ரணில் இப்போது குறித்த விடயத்திற்காக நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார் அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா? என கேள்வி எழுப்புகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.

இந்நிலையில் எங்களுடைய போராட்டத்தை சிதைக்கும் வகையில் அதற்கு இழப்பீடு வழங்குவதாகக்கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர் எனவும்” அவர் தெரிவித்தார்.

பாடசாலை கொங்கிரீட் சுவர் இடிந்து வீழ்ந்து மாணவி பலி !

வெல்லம்பிட்டிய, வேரகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கொங்கிரீட்டில் ஆன நீர்க்குழாய் தொகுதி வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இந்த விபத்து சம்பவம் வெல்லம்பிட்டிய வேரகொட கனிஸ்ர வித்தியாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

விபத்தில் காயமடைந்த மேலும் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த ஐந்து மாணவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளது – நாடாளுமன்றத்தில் சுமந்திரன்!

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MAசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் உரிய முறையில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பொறுப்புடையவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் பணியை இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அப்போதைய ஜனாதிபதியாக செயற்பட்ட மகிந்த ராஜபக்ஸ, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் அரசாங்கம் மற்றும் பொது மக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதனாலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்குமாறும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திறைச்சேறிக்கு கொண்டு வரும் படியும் ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

“சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் பெற்றோர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும், விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும்.” – ஐ.நா பிரதிநிதிகளிடம் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை!

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்பாணத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று (14) நடைபெற்றது.

 

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சிறுவர் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த விசேட சந்திப்பு நடைபெற்றது.

 

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog, உதவிப் பிரதிநிதி Begona Arellano, கல்வி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம், சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டு செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத செயற்பாடுகள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கு ஆளுநரால் தெளிவுபடுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன் அதிகாலை தொடக்கம், இரவு வரை மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளில் தங்கவைக்கப்படுவதால் , மாணவர்களின் திறன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை என ஆளுநர் தெரிவித்தார்.

 

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சையின் பின்னர் மாணவர்களின் நிலைப்பாடு கவலைக்கிடமாக காணப்படுவதாகவும், இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் , வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ள நிலையில் அதனைத் தடுப்பதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் பெற்றோர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும், விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும் என ஆளுநர் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

 

இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், வடக்கு மாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog இதன்போது தெரிவித்தார்.