28

28

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு – 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்வு !

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27)  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினத்துடன் சேர்த்து  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  ஊடகங்களுக்கு மேலும்  தெரிவித்துள்ளதாவது

“இதுவரை  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது.

இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில்  ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம் !

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில்  ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை காவல்துறையினர் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

சாட்சி பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் , அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் உத்தரவிட்டார்.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , வழக்கின் மூன்றாவது சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்து காவல் உத்தியோகஸ்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நால்வரை மாத்திரமே கைது செய்துள்ளனர்.

ஏன் மற்றையவரை கைது செய்யவில்லை என்று மன்றில் கேள்வி எழுப்பினர்.

அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மற்றைய நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த இளைஞனுடன் கைதான இளைஞனின் சாட்சியத்தின் அடிப்படையில் 04 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நான்கு காவல் உத்தியோகஸ்தர்களாலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு காவல்துறை உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.” – புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணத்தை அரச தரப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கிரிக்கெட் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

வாராந்த அமைச்சரவை சந்திப்பு நேற்று (27) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு ரொஷான் ரணசிங்கவிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.

மேலும், மகாவலி காணி பகிர்வு அமைச்சராக அவர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்மொழியப்பட்ட பெரும்பாலானோரில், அவரது அரசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தமை ஏன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறான சூழலில் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதியின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை வழங்காத நிலையில் அவரின் அமைச்சு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

எவருக்கும் எதிராகச் செல்ல தாம் எதிர்பார்க்கவில்லை, உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா உட்பட அனைவரின் உதவியுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை “சுத்தம்” செய்ய விரும்புவதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதித்துள்ள தடையை நீக்குவதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐசிசி தடையை ஒரு சில நாட்களுக்குள் விரைவில் மாற்றியமைப்பது மிகவும் முக்கியம்.” என்றார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர், ஹரின் பெர்னாண்டோ நேற்று (27) மாலை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை தமிழரிடையே பல குழுக்கள் உள்ளன. அவர்களுள் சிலரே தனிநாட்டை உருவாக்க விரும்பினர்.” – கோவாவில் முத்தையா முரளிதரன் !

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட இன நெருக்கடியை தமிழக அரசு சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதன் காரணமாகவே தேசத் துரோகம் இழைத்ததாக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நேற்று (26) கோவாவில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை என்று கூறிய முத்தையா முரளிதரன், அதற்குக் காரணம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன என குறிப்பிட்டார்.

இலங்கை தமிழ் சமூகத்தில் பல்வேறு துணைகுழுக்கள் உள்ளன. எல்லா குழுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன என்று முரளிதரன் கூறினார்.

அந்தக் குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை பிரித்து தனி நாட்டை உருவாக்க விரும்புவதாகவும், ஆனால் பலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை.” – அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய, எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர். மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.