22

22

ராஜபக்சக்களின் குடியுரிமையை நீக்க நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதீப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலோ அல்லது மோசடியில் ஈடுபடுவதற்காகவோ நிதியை பயன்படுத்தினால் அதற்கு நிறைவேற்று அதிகாரம் பொறுப்புக்கூற வேண்டும்.

 

அந்தவகையில் நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரம் கட்டுப்பட வேண்டும்.

 

எனவே, பொருளதார நெருக்கடிக்கு காரணமானர்கள் குறித்து தேவையேற்படின் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரம் உள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிழைத்துள்ளனர் என ஆணைக்குழு பரிந்துரைத்தால் அதனை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்ட நபர்களின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இல்லாது செய்ய முடியும்.

 

இதற்கான யோசனையை அமைச்சரவையின் அனுமதியுடன் நாடாளுமன்றித்திலும் முன்வைக்கலாம்.

 

அதனை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் பொலிஸார் தாக்கி இளைஞன் மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ”சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர் முழுமையான நீதி விசாரணைக்கு முன்பாகவே மரணத்தை தழுவியுள்ளார். இது நடந்திருக்கவே கூடாத கொடிய துயர் நிகழ்வு.

 

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. உண்மைகள் கண்டறியப்பட்டு நியாயங்கள் உணர்த்தப்பட வேண்டும்.

 

மரணமடைந்த இளைஞனின் குடும்பத்தவர்கள் படும் இழப்பின் வலிகளில் பங்கெடுக்கின்றேன் ஆறுதலும் ஆழ்மன அஞ்சலியும்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை லஞ்சீட் மற்றும் பேப்பரை சாப்பிடச் செய்த அதிபர் – மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம், நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. பாதிப்பு உள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அந்தப் கல்லூரியில் 11-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாளில் சுற்றிக்கொண்டு வந்துள்ளனர்.

 

அந்த வகுப்பில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 07 மாணவர்கள் பகல் உணவுகளை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாள் பக்கங்களால் சுற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

 

மதியம் சாப்பிட்டுவிட்டு லஞ்ச் ஷீட் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை ஏழு மாணவர்களும் தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.

 

அப்போது ​​அவ்விடத்திற்கு வந்த அதிபர் அவற்றை வெளியே எடுத்து, சாப்பிடுமாறு கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் லஞ்ச் ஷீட் மற்றும் பத்திரிக்கைகளை தின்றுவிட்டனர்.

 

லஞ்ச் ஷீட்டில் மற்றும் செய்தித்தாள்களை சாப்பிட்ட ஏழு மாணவர்களில் ஒருவர் 21 ஆம் திகதியும் மற்றுமொரு மாணவன் 22 ஆம் திகதியும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தந்தை, நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அந்தப் பாடசாலையின் அதிபரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அம்முயற்சி கைகூடவில்லை.

காஸாவில் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் !

காஸாவில் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

 

இதனையடுத்து, காஸா மீதான தாக்குதல்களை நான்கு நாட்களுக்கு இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

 

அத்துடன், ஒவ்வொரு 10 பணயக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

இதனால் ஹமாஸ் அமைப்பினர் விரைவில் பணயக்கைதிகளை விடுவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஹமாஸ் படையினர் கடத்திச்சென்ற பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கத்தார் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது.

 

ஒரு வார கால தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கத்தாரின் வௌியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி (Majed al-Ansari) குறிப்பிட்டுள்ளார்.

 

இரு தரப்பும் ஒப்பந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதில் கத்தார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மஜீத் அல்-அன்சாரி கூறியுள்ளார்.

 

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கான முதற்படி என குறிப்பிட்டுள்ள அவர், பல தசாப்தங்களாக நீடித்து வரும் மோதலை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான விரிவான அரசியல் செயன்முறையாக இது மாறும் எனவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

 

எவ்வாறாயினும், பணயக்கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் ஹமாஸூக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

 

நாங்கள் போரில் இருக்கிறோம். எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை போரைத் தொடருவோம் என அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளமையை இன்று நாடாளுமன்றில் கவனத்திற்கு சுமந்திரன் கொண்டுவந்திருந்தார்.

அரசியலமைப்பு சபை உறுப்பினருக்க நாடா ளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்மொழியப்பட்ட போதும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

 

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் அதை சுட்டிக்காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என கூறும் அரசாங்கம் இந்த விடயத்தில் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமை குறித்து சுமந்திரன் ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களையும் புகுத்துவதற்காக சட்டக்கல்வி ஆங்கிலமூல கற்கை நெறியாக்கப்பட்டுள்ளது.” – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன் விசனம் !

”யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி ஆங்கிலத்தில் மாத்திரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் மொழியிலும் சட்டத்துறைக் கல்வி நடைபெறவேண்டும்” என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியினை மும்மொழிகளிலும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. எனினும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழியில் மாத்திரம் சட்டக்கல்வி நடத்தப்பட்டு வருகின்றது. ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாது? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் மக்களினுடைய பண்பாட்டு, பாராம்பரிய விழுமியங்களை பாதுகாக்கின்ற பல்கலைக்கழகமாக இருந்து வந்தது.

 

தற்போது அந்நிலை சிதைத்து வருகின்றது. குறிப்பாக சிங்கள மாணவர்களையும் புகுத்துவதற்காக ஆங்கிலமூல கற்கைநெறி புகுத்தப்படுகின்றது. வடக்குக் கிழக்கிலே புதிய பல்கலைக்கழகங்களை தொடங்குதல் எனும் பெயரில் ஏற்கனவே பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்குகின்ற வளாகங்களை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த விண்ணப்பிக்கும் போது அரசும் மிக அவசரமாக அதற்கு அனுமதி வழங்குகின்றது.

 

ஆனால் தென்பகுதியில் எந்தவொரு பல்கலைக்கழகங்களையும் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்குவதில்லை, காரணம் வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழங்களின் தமிழ் சாயத்தைத் சிதைத்து, தமிழ் பண்பாட்டை சிதைத்து, பெரும்பாண்மை சிங்கள மாணவர்களை இங்கு அனுமதிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் பல்கலைக்கழங்கள் மீதான ஏகபோகங்களை சிதைக்கும் நடவடிக்கை தான் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

தமிழர்களுடைய தாயகபூமியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடம், முகாமைத்துவ பீடம், மற்றும் கிளிநொச்சியிலுள்ள பீடங்களில் பெரும்பான்மையாக சிங்கள மாணவர்கள் காணப்படுகின்றனர். எமது தமிழ் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக யாழ் பல்கலைக்கழகத்திலே தொடங்கப்பட்ட கற்கைநெறிகள் எமது மாணவர்களிற்கு வசதி கிடைக்காமல் மாற்று மாணவர்களிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.

 

தமிழ்ப் பண்பாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெயரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் சகல கற்கைநெறிகளும் தமிழ்மொழியிலும் போதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். கலைப்பீட கற்கை நெறிகளைக் கூட ஆங்கில மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தினை அரசாங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக எமது பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வருகின்றது. இருப்பினும் பாரிய எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி கைகூடாமல் இருக்கின்றது.

 

சிங்களமொழி மாணவர்கள் பெரும்பான்மையாக இருப்பதைக் காரணம் காட்டி சிங்கள ஆளணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உருவாகி வருகின்றது. ஏன் சட்டத்துறையில் கூட சிங்கள நிரந்தர விரிவுரையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களை நியமிக்கக்கூடாதென்று யாரும் சொல்லவில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பாக மாறும் என்பதை நாங்கள் மறுக்க முடியாது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் என்பதற்கான அபாய எச்சரிக்கை” இவ்வாறு மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.