வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டக் குழு விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொர இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதனால் அப்பிரதேசத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தி எவரையும் இச்சேவையில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டு வந்திருந்தோம்.
பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை புகட்டும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் அவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படவில்லை. எனவே அவ்வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.