09

09

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கக் கோரி மட்டக்களப்பில் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

பசியும் வன்முறையும் இல்லாத தன்னிறைவான வாழ்வு எமக்கு வேண்டும். வன்முறைகளை நிறுத்துவதற்கு அரசினதும் அரசியல் ரீதியானதுமான முன்னெடுப்பு உடனடியாக எமக்கு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இன்றைய தினம் மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகளால் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினுடைய ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற இப் பேரணியானது மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் இருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்றது.பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வாரத்தின் ஒரு பகுதியாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இப் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் பறைமேளம் அடித்து, நீளப் பேரணியாகச் சென்றனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வார நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது.பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் உணவுப் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதுடன் உணவு விநியோகத்தினையும் இலகுபடுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பசி பட்டினியிலிருந்து மக்களை விடுவிக்க சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டங்களை அரசு உடனடியான அமுல்படுத்த வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாத உள்ளுர்வளப் பொருளாதார முறைமையை பிரதானமாக்கும் நடைமுறைக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பாவித்து கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பாதைகளை பேரணியில் சென்றவர்கள் ஏந்தி சென்றனர். இந் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

முடிவுக்கு வருகிறது கொரோனாவின் ஆட்டம் – ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள மகிழ்வான தகவல் !

“மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்

பிரியந்தகுமார கொலை தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லை – சியல்கோட் சட்டத்தரணிகள் அறிவிப்பு !

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லையென சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன்,  இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பில் அச்சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரியந்த குமார கொலை தொடர்பில் நேற்று மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சந்தேக நபர்கள் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 13 நாட்கள் காவல்துறையின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, பிரியந்தகுமார பணியாற்றிய ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 345  ஊழியர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் தாக்கிக் கொலைசெய்யட்டு தீயிடப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம், கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது இறுதிக் கிரியை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வருகிறது எங்கலா மெர்கர்ஸின் 31 வருட அரசியல் வாழ்க்கை – ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாஃப் ஸ்ச்சோல்ஸ் !

ஜேர்மனியின் புதிய அதிபராக ஒலாஃப் ஸ்ச்சோல்ஸ் அந்த நாட்டு நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

16 வருடங்கள் அந்த நாட்டு அதிபராக கடமையாற்றிய எங்கலா மெர்கர்ஸின் 31 வருட அரசியல் வாழ்க்கை  நிறைவுக்கு வருகின்றது. இந்தநிலையில் 63 வயதான ஜேர்மனின் புதிய அதிபருக்கு அந்த நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

அவர் முன்னாள் அதிபர் எங்கலா மெர்கர்ஸின் ஆட்சி காலத்தில் துணை அதிபராக கடமையாற்றியிருந்தார்.

நாடாளுமன்றில் அவருக்கு 395 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிராம மக்கள் 11 பேரை உயிரோடு கொளுத்திய மியன்மார் இராணுவம் – வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேசம் !

மியான்மரில் கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினர் 11 பேரை பிடித்து இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதேவேளை, கடந்த 5ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300 இற்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம்.” – பிரியந்த குமாரை எரித்தவர் வாக்குமூலம் !

பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு தீ வைத்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் ஆட்களை ஒன்றுதிரட்டி முகாமையாளரின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஹமீட் மீரியும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.