12

12

சிறுவர்கள் வீசிய தூண்டிலில் சிக்கிய வெடிகுண்டு – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களது தூண்டிலில் திடீரென ஒரு பாரமான பை அகப்பட்டுள்ளது.

உடனே குறித்த சிறுவர்கள் அதனை தூக்கி பார்த்தபோது அப் பையில் துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது அவதானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

யாழ். காவல்துறையினர் குறித்த வெடிகுண்டினை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசேட அதிரடிப் படையின் உதவியுடன் மீட்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை – மக்கள் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட மாற்றம் !

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதனால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டமையை அடுத்து – பொலிஸார், பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அந்த இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சிலையை வைப்பதற்கு முறையான அனுமதியை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்திருந்தார்.
இவ்வாறான எதிர்ப்புகளையடுத்து சங்கமன்கண்டி பகுதியில் வைக்கப்பட்ட சிலையை இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து அகற்றுவதாக பொலிஸார் நேற்று வாக்குறுதி வழங்கினர். இதனால், சிலை வைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் அங்கிருந்து சென்றனர்.
இந்தப் பின்னணியிலேயே சங்கமன்கண்டி பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு – புறக்கணித்த முன்னணியினர் !

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்றிருந்தன.

தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் இந்த சந்திப்புகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது ,

13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தியாவிற்கு உறுதியளித்ததை போன்று 13ஆம் திருத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்து கோருவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, நிரந்தர தீர்வுக்கான அலுத்தங்களை ஒருபோதும் கைவிட போவதில்லையென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அது சமஷ்டி மற்றும் கூட்டு சமஷ்டியிலான தீர்வாகவே அமையும்.

இருப்பினும், தற்போது ஒற்றையாட்சியின் கீழ் உள்ள உரிமையைப் பெறுவதற்கான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் கூடி பொது ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேநேரம், தேர்தல் முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதை மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரிந்திருந்தால் இந்த 30 வருட யுத்தமே நடந்திருக்காது.” – யாழில் அத்துலிய ரத்ன தேரர் !

கடந்த 30 வருடம் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

வடமாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியினை முதற்கட்டமாக 32 மாணவர்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ் மத்தியின் அன்னசத்திர பகுதியில் அமைந்துள்ள இந்து பௌத்த கலாச்சார பேரவையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்தனதேரர் கலந்துகொண்டு இரண்டு மொழிக்கற்கையின் சிங்கள பாடநெறியினை கற்ற மாணவர்களுக்கே இச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிங்களம், தமிழ் மொழியிலான பிரச்சனையில் விவசாயிகளுக்கான காணியில்லை, விவசாயிகள் தொழில்நுட்பத்திற்கான தொழில் முறையில்லை அதற்கான நிதியில்லை அதனை முன்னெடுத்து செல்லுகின்ற போகின்றவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பில்லை. இவை தீர்க்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். அதிலும் சாதிப் பிரவினை ஏற்றுக்கொள்ள முடியாது நன்கு வளர்ச்சி அடைந்த பிரிவினையில் சாதிப் பிரவினையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

விவேகானந்தர் மற்றும் ஏனைய சமய பெரியார்களின் உருப்பட்ட உபதேசங்களில் கூறப்பட்ட ஒன்று இந்த பிரச்சனை இருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் எல்லாரும் சாதிப்பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும். பௌத்த மதத்திலும் சாதிப்பிரவினையினை புத்தபெருமான் எதிர்க்கின்றார். உலகத்தினை நேசிப்பதுதான் பௌத்த மதம் உலகத்தில் உள்ளதைபோன்று அனைத்து உயிர்களையும் நேசிக்கவேண்டும். அதுதான் காலத்தின் அவசியம். இப்போது எமது மாகாணத்தில் தேவையாக இருப்பது கணனி பொறியிலாளராக வருவது மிக அவசியம் அதற்கான தொழில்வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். அதற்காக தயார் நிலையில் உருவாக வேண்டும்.

விவேகமற்ற தீர்மானங்களால் இலவசக்கல்வியையும் அழிக்க முயற்சிக்கிறது ராஜபக்ஷ அரசு – ஆசிரியர் சங்கம் கவலை !

அரசாங்கம் காலத்திற்கு காலம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டின் பல துறைகளிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியை தனியார் மயமாக்கும் சட்டமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியை அந்நிய செலாவணி ஈட்டும் முறையாக மாற்றுவது தொடர்பான ஜனாதிபதியின் உணர்வுகளை மேற்கோள்காட்டி, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா..?  என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகிறது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியை புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகரித்த டொலர் தட்டுப்பாடு – உணவுப்பொருட்களுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு !

சுமார் 1500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, கடலை, செத்தல் மிளகாய், பருப்பு மற்றும் மசாலா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை இருக்கும் என்றும் கூறப் படுகிறது.

சில நாட்களுக்குள் இந்த அரசு வெடித்துச்சிதறும் – இராஜாங்க அமைச்சர் ஆருடம் !

அரசாங்கம் செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து தாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்த்து 2019 இல் மக்கள் மாற்றத்தை மேற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கிலாந்தில் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் சமூக கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒமிக்ரோன் வைரஸ் பரவலின் பெரிய அலையை பிரிட்டன் எதிர்கொள்ள நேரிடும் என்று புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகி வருகின்றன.  இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஒமிக்ரோன் முந்தியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுவதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமிக்ரோன் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது எங்களின் நம்பிக்கை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ரோசன்னா பர்னார்ட் தெரிவித்துள்ளார்.  முக கவசம் அணிவது, சமூக விலகல் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும் அது போதுமானதாக இருக்காது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டன. திங்கட்கிழமை முதல், அரசின் மற்றொரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட சாத்தியமான வழிகாட்டுதல்கள் தொடங்குகிறது. அடுத்த வாரம் முதல், பெரும்பாலான இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்ய முன்பு யோசியுங்கள் – அனுரகுமார எச்சரிக்கை !

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தால், சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு விதிக்கும் நிபந்தனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதிக் கட்டுப்பாட்டை நீக்கவும், அரசாங்கத்தின் உள்ளுணர்வுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை வழிநடத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் நிலைமையை மீளாய்வு செய்த பின்னரே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் தேவையில்லாதது. மஹிந்தவின் வழிக்கு வாருங்கள் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

“பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வைத் தருவோம் என்கிறார். ஆனால் சில தமிழ் கட்சித் தலைவர்களோ 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருகின்றனர்.” என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று (11.12.2021) மாலை 3 மணியளவில் சுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் “தமிழர் தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் படித்த ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை என்று நாங்கள் தீர்மானித்தோம். ஆனால் அது வேட்புமனுவில் காணப்படவில்லை. 2022ஆம் ஆண்டு தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கலாம் . சாணக்கியன் போன்ற ஐந்தாறு இளைஞர்களை நாங்கள் களமிறக்கியிருந்தால் நாட்டையே தலைகீழாக மாற்றி இருப்போம் மாறுகின்ற உலகத்திலேயே நாங்கள் நிறைய மாற்றங்களை உள்வாங்க வேண்டும்.

சமஷ்டி என்ற சொல் அன்றும் இருந்தது இன்றும் இருக்கின்றது. ஆனால் சமஷ்டிக்கான விளக்கம் தற்போது மாறிவிட்டது. சம்பந்தன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பொழுது பிரித்தானியாவில் அன்றிருந்ததைப் போன்று இலங்கையிலும் யாப்பை அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் இன்று உங்கள் நாடு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால் எமது நாடோ பின்னோக்கி சென்றுவிட்டது என்றார்.

சம்பந்தன் அன்றைய சிந்தனையோடு இருக்கவில்லை. புதியதையும் உள்வாங்குகிறார். அதனாலேயே இன்றும் அவர் எமக்கு தலைவராக இருக்கின்றார்.

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போதைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வைத் தருவோம் என்கிறார். ஆனால் சில தமிழ் கட்சித் தலைவர்களோ 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருகின்றனர்.

13ஆம் திருத்தம் அடிப்படையிலேயே பழுதுபட்டது அதனை திருத்த முடியாது என இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறுகின்றார். 13ஆம் திருத்தத்தின் சில முக்கியமான நல்ல விடயங்கள் உள்ளன. அவற்றையும் சேர்த்துக் கொண்டு அதையும் தாண்டிய அதிகாரப்பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்றார்.