26

26

விண்ணில் செலுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கி !

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம்  இணைந்து உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி உள்ளன.
பூமி தனித்துவமானதா? பூமியைப் போன்ற கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கான ஆய்விற்கு, வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்த உள்ளனர்.
மிகவும் சக்திவாய்ந்த இந்த தொலைநோக்கியானது, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஏவுதளமான பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ரொக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக நாசா கூறி உள்ளது. பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள், (930,000 மைல்கள்) தொலைவில் உள்ள அதன் இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மியன்மாரில் கருப்பு கிறிஸ்மஸ் – கிராம மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற இராணுவம் !

கிறிஸ்துமஸ் தினமான சனியன்று மியன்மார் இராணுவத்தினர் கிராம மக்களை சுற்றிவளைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தீ வைத்துள்ளனர்.

இவ்வாறு பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகள்/ சிறுவர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தினால் ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனிதாபிமான குழுவின் இரு உறுப்பினர்களும் காணாமல் போயுள்ளதாக ஆதாரங்களை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரின் கிழக்கு மோ சோ கிராமத்திலேயே இந்த சம்பவம் நடத்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து சனிக்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ள சேவ் தி சில்ட்ரன் அமைப்பு, மனிதாபிமானப் பணிகளைச் செய்துவிட்டு வீடு நோக்கி பயணித்த இரண்டு ஊழியர்கள் சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேநேரம் அவர்களின் தனிப்பட்ட வாகனம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதையும் அது உறுதிபடுத்தியுள்ளது.

நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஏறக்குறைய 11 மாதங்களுக்கு முன்பு இராணுவம் கவிழ்த்ததில் இருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது.  பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறையில் 1,300 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

“ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய கூடாது.” – தொடரும் தலிபான்களின் அடக்குமுறை !

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
“ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது. பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர்களை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏலத்திற்கு வருகிறது நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவி – தென்னாபிரிக்க அரசு எதிர்ப்பு !

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா அதிபராவதற்கு முன் தனது வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
தென்னாப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த சிறையில் காவலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரானார்.
இதற்கிடையே, நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட கிறிஸ்டோ பிராண்ட் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கர்ன்சேஸ் என்கிற ஏல நிறுவனம் ஜனவரி 28-ம் திகதி இந்த ஏலத்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விடுவதற்கு தென் ஆப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏலம் நடத்துவதை நிறுத்தவேண்டும் என கர்ன்சேஸ் நிறுவனத்தையும், கிறிஸ்டோ பிராண்டையும் அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் கலாசார மந்திரி நாதி தெத்வா கூறுகையில், இந்த ஏலம் குறித்து எங்கள் அரசோடு எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த சாவி தென் ஆப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது. அதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்தார்.

நோபல் பரிசு பெற்ற பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் காலமானார் !

தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பேராயர் எமரிடஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவு, நமது தேசத்தின் துக்கத்தின் மற்றொரு அத்தியாயமாகும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.

1931 ஆம் ஆண்டு கிளர்க்ஸ்டோர்ப்பில் பிறந்த அவர், 1984 இல் தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான அவரது பங்கிற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1975 ஆம் ஆண்டில் ஜொகன்னஸ்பர்க்கில் உள்ள செயின்ட் மேரிஸ் கதீட்ரலின் டீனாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின தென்னாப்பிரிக்கர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.