13

13

சங்கானையில் வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசம் !

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளது.

அக் கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டியுள்ளது. முச்சக்கர வண்டியினை மூடியிருந்த பொலுத்தீன் எரிந்துகொண்டிருந்தவேளை வீட்டிலிருந்தவர்கள் அந்த பொலுத்தீனை கீழே இழுத்து விழுத்தினர். இதனால் முச்சக்கர வண்டி பாரிய பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லீம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்களா..? – சாணக்கியனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் நசீர் அஹமட் !

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது “ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் கௌரவ பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்” என்று தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே உங்களுடன் பகிரங்க விவாதத்தை நடாத்த நான் தயாராக இருக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பரிக்கப்பட்டது தொடர்பிலும், அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான செயற்பாடுகள், முஸ்லிம்கள் இழந்த காணிகள், இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே உங்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த இந்த அழைப்பு விடுக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை இந்நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் குறித்து உங்களுடைய அறியாமையை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் இது தொடர்பாக திறந்தவெளியில் உங்களுடன் விவாதிக்கும் வகையில் உங்களது சம்மதத்தை நான் எதிர்பார்ப்பதுடன் அதற்குரிய இடம், பொருத்தமான நேரம் தொடர்பில் இருவரும் கலந்தாலோசித்து இந்த பகிரங்க விவாதத்தை நடத்த வேண்டும் என்றார்.

“நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.” – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

“நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.” என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுன நிச்சயம் பெற்றிப்பெறும். சஜித், சம்பிக்க, ரணில், அநுர மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. விவசாயத்துறை அமைச்சின் பொறுப்புக்கள் இராணுவத்திற்கு பொறுப்பாக்கப்படவில்லை. நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை.

விவசாயத்துறை அமைச்சின் செயற்பாடுகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. கொவிட் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். இராணுவத்தினரது உதவியில்லாமல் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். தடுப்பூசி செலுத்தல் திட்டத்தை இராணுவத்தினர் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துள்ளார்கள்.

இலங்கையை பசுமை நாடாக உருவாக்குவதற்கு தேவையான முக்கிய விடயங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறையானதாகவும், நிலையானதாகவும், செயற்படுத்துவதற்கு ‘பசுமை விவசாய செயற்பாட்டு மையம்’ ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் பசுமை விவசாய செயற்பாட்டு மையம் செயற்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. சேதனபசளை திட்டத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றன. இரசாயன உரம் தடை செய்யப்பட்டபோது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்தது. சேதன பசளை திட்டத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் இரசாயன உர பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் எவரும் கருத்துரைப்பதில்லை. எதிர்வரும் காலங்களில் நாட்டில் பெரும் உணவு தட்டுபாடு ஏற்படும் என எதிர்தரப்பினரும், ஆளும் தரப்பின் ஒருசில உறுப்பினர்களும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. பெரும்போக விவசாயம் நிச்சயம் வெற்றிப் பெறும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட விரும்பவில்லை.

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பறிபோகும் தமிழர்களின் நிலங்கள் – தொடரும் வனவளத்துறையினரின் அடாவடி !

வவுனியா செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த காணிகளுக்குள் நேற்று உள்நுழைந்த வனவளத் திணைக்களத்தினா் எல்லைக்கற்களை நட்டு அவற்றைக் கையகப்படுத்தியுள்ளனா்.

100 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் உழுந்து பயிர்ச்செய்கை செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினா் பூத்துக்காய்ப்பதற்கு தயாராகக் காணப்பட்ட உழுந்துப் பயிர்களுக்குள் தமது உழவு இயந்திரங்களை ஓட்டிச் சென்று பயிர்களுக்கும் சேதம் விளைவித்துள்னா்.

இதனால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக தமிழர்களின் காணிகள் வனவளத் திணைக்களத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல் தலைவர்கள் கூறுவதற்கெல்லாம் ஆமென் சொல்ல முடியாது.” – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கை ஒரு கேலிக்கூத்து போன்றது எனவும் அவர் விமர்சித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனேமுல்ல பொல்லாத்த தேவாலய பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

மதத் தலைவர்கள் அனைத்த சந்தர்ப்பங்களிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்றும் மதத் தலைவர்கள் சுயாதீனத் தன்மையை அரசியல் நன்மைக்காக பயன்படுத்தினால் வெட்கப்பட வேண்டும் .  அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது.

இன்று மக்கள் நிர்க்கதியாகியுள்ளமைக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மதத் தலைவர்களும் காரணம். இந்த நாடு மத நாடொன்றாகும்.

இதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் குறித்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை .  அத்தோடு, தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களை இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.