அமெரி்க்க அதிபராக பதவி ஏற்ற சிலமணிநேரங்களில் 15 முக்கிய உத்தரவுகளில் ஜனாதிபதி ஜோபைடன் கையொப்பமிட்டு, அமெரிக்க மக்களுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கினார்.
அதில் முக்கியமான உத்தரவுகளான அமெரிக்காவுக்குள் குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவதற்கான தடை நீக்கம், பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் அமெரிக்கா இணைதல், சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குதல், மெக்சிக்கோ எல்லையில் சுவறு கட்டும்பணியை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்ட 15 உத்தரவுகளில் ஜனாதிபதி ஜோபைடன் இன்று கையொப்பமிட்டார்.
வாஷிங்டனில் ஜனாதிபதி ஜோபைடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்
“ பல்வேறு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளில் கையொப்பமிட்டது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது வெறும் தொடக்கம்தான். நான் பிரச்சாரத்தில் மக்களிடம் கூறியதை நிச்சயம் நிறைவேற்றுவேன். நடுத்தர மக்கள் நலனுக்காக அரசு இயங்கும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவேன்.
நான் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்தேனோ அதை நிறைவேற்றும் பணியைத் தொடங்கிவிட்டேன். இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும், இவை தடை உத்தரவுகள் மட்டும்தான். இதற்கான சட்டமசோதா கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். அடுத்தடுத்து வரும் நாட்களில் பல்வேறு உத்தரவுகளை நான் பிறப்பிக்க இருக்கிறேன்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 100 நாட்களுக்கு மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனும் உத்தரவில் முதலில் கையொப்பமிட்டேன். அதைத்தொடர்ந்து பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது, அமெரிக்காவில் இனவேறுபாடு இன்றி மக்களுக்கு சமஉரிமை அளித்தல் போன்ற உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜென் சகி கூறுகையில்
“அமெரிக்காவில் 100 நாட்களுக்கு மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனும் உத்தரவை ஜனாதிபதி ஜோபைடன் முதலில் பிறப்பித்துள்ளார்.அதைத் தொடர்ந்து 15 முக்கிய உத்தரவுகளில் ஜனாதிபதி ஜோபைடன் கையொப்பமிட்டுள்ளார்.
உலக சுகதாார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகிய ட்ரம்பின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் அமெரிக்கா இணைந்துள்ளது. இதனால் உலகளவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈடுபடும். நாங்கள் நேரத்தை வீணாக்கப்போவதில்லை. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் குழுவை அமெரிக்காவில் உருவாக்க ஜனாதிபதி ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.
பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா ட்ரம்ப் ஆட்சியில் விலகியது, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு மீண்டும் அமெரிக்கா இணைய உள்ளது. அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இலக்கை அடைய அமெரி்க்கா முயற்சிக்கும்.
கரோனா வைரஸ் பல்வேறு பொருளாதார சிக்கல்களை மக்களுக்கு அளித்துள்ளது.கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் கடனையும்,வட்டியையும் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான அவகாசத்தை அளிக்க கல்வித்துறை அமைச்சகத்துக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டும்பணியும் , அதற்கு வழங்கப்பட்டுவரும் நிதியும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சகி தெரிவித்தார்.