08

08

ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையின் எதிரொலி – வாஷிங்டனில் 15 நாட்களுக்கு பொது அவசர நிலை பிரகடனம் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் அந்நாட்டு பாராளுமன்றத்தின் நேற்று(07.01.2021) நடைபெற்ற போது, அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறையின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் 4 பேர் மற்றும் ஒரு போலீஸ் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளராக பைடனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை செலுத்தி அதை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்திருந்தனர். அந்த சீலிட்ட கவரை பிரித்து மாகாண சபை உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணினர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வானார். அவர் வெற்றி பெற்றதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
டொனால்டு டிரம்ப் 232 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் வரும் 20-ம் திகதி பொறுப்பேற்க உள்ளார்.  இந்நிலையில், பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது போல 20-ந் திகதி ஜோபைடன் பதவி ஏற்கும் போதும் அவர்கள் வாஷிங்டனில் கலவரத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக வாஷிங்டனில் 15 நாட்களுக்கு பொது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வாஷிங்டன் மேயர் முரியல் பவுசல் வெளியிட்டுள்ளார். ஜோபைடன் பதவி ஏற்ற மறுநாள் வரை இந்த அவசர சட்டம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

“முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது.” – ரிஷாட் பதியுதீன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

“விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும் அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன் அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.

இலங்கை வாழ் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இன்று துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுமாத்திரமின்றி,  உலகிலுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் கவலையில் இருப்பதோடு, பல நாடுகள் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இதன் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டையும் சமூகங்களையும் பாதிக்கும்.

முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது. அரசியலில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான பிற்போக்குத்தனமான செயலை செய்யமாட்டார்கள்.

முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள மாற்று மத பிரமுகர்களும் இதனை வென்றெடுப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் நாட்டின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கள  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிவில் சமூக ஏற்பாட்டாளர்களும் இதற்காக குரல் எழுப்பி வருகின்றபோதும், அரசும் சுகாதார அமைச்சும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலதான் இருக்கின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது” – சுகாதாரதுறை அமைச்சர் உறுதி !

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுமெனவும் எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது எனவும், சுகாதாரதுறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று(07.01.2021)நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோ புள்ளேயிடம், வைரஸ் தொடர்பான விசேடநிபுணர்கள் குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில், கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டுமென அதில் தெரிவித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட அறிக்கை தற்போது சடலங்கள் தகனம் செய்யப்படுமா அல்லது அடக்கம் செய்யப்படுமா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, மத ரீதியான அல்லது வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அந்நடைமுறையை மாற்றப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இதே நேரத்தில் முஸ்லீம்கள் தங்களுடைய உறவினர்களின் ஜனசாக்களை எரிக்க வேண்டாம் என இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

“பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள்”- பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை வேண்டுகோள் !

பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது மேலாளர் வைத்தியர் டெர்னி பிரதீப் குமார இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, அப்புறப்படுத்தப்பட்ட சுமார் 150 கோடி முகக்கவசங்கள் கடலுக்குள் வீசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாடு மற்றும் சுற்றுச்சூழலையும் கடற்கரையையும் பாதுகாக்க உதவுமாறும் பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.

“தற்போதைய மாகாண சபைகள் முறைமைக்குப் பதிலாக தமிழர் பகுதிகளில் பிராந்திய சபைகளை அலகாகக் கொண்ட முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும்” – தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனை !

“தற்போதைய மாகாண சபைகள் முறைமைக்குப் பதிலாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கை உள்ளடக்கியதாக பிராந்திய சபைகளை அலகாகக் கொண்ட முறைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக எதிர்க்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசின் தன்மையானது மத்தியினதும் பிராந்தியங்களினதும் நிறுவனங்களாலான ஒரு சுதந்திரமான, இறைமையுடைய, சுயாதீனமான ஐக்கிய [ஒன்றுபட்ட] குடியரசாக இருக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பானது பிராந்தியத்தின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டுமெனவும் யோசனையில் முன்மொழிந்துள்ளது.

ஆளுகை அடிப்படையில் அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களில் , மேற்கூறிய பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் ஒரு பிராந்திய சபையைக் கொண்டிருக்க வேண்டும் என்று முன்மொழிவு கூறுகிறது, சபையின் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியால் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமெனவும் பின்னர் சபையின் அங்கீகாரத்துக்கு விடப்படவேண்டுமெனவும்,குறித்த பிராந்தியத்தின் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபை அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயற்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சபைகள் சில விடயங்களில் சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.தேசியக் கொள்கையைப் பொறுத்தவரை, அனைத்து பிராந்தியங்களுடனும் கலந்தாலோசிக்கப்படுவதுடன் அவற்றின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அத்துடன் தேசியக் கொள்கை சட்டவரையறை கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும், பிராந்தியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தைப் பற்றிய சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும், மேலும் அவை பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தைக் குறைக்காது. இந்த சட்டமூலங்களுக்கு வாக்களிப்பதன் மூலம் சபைகள் ஒப்புதல் அளித்தால், மத்திய சட்டவாக்கசபை [ நாடாளுமன்றம்] பகிர்ந்தளிக்கப்பட்டவிடயங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்க முடியும்.

மேலும், அதிகாரப் பகிர்வை பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விடயத்தில்,ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதித்துவ தூதுக்குழுவின் ஒப்புதலுடன் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் அங்கீகாரம் இருக்க வேண்டும். தேசியபந்தோபஸ்து, தேசிய பாதுகாப்பு, ஆயுதப்படைகள், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் தேசிய பொருளாதார விவகாரங்கள் மத்திய அரசுடன் அவசியம் இருக்க வேண்டும் – இவை தவிர பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் வழங்க வேண்டிய விடயங்கள் மற்றும் செயற்பாடுகளின் பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.

இதில் ஏனையவற்றுடன் , நிலம் (மத்திய பட்டியலில் உள்ள ஒரு விடயத்திற்கு மத்திய அரசு பயன்படுத்தும் அரச காணி தவிர), சட்டம் ஒழுங்கு, பிராந்திய காவற்துறைச் சேவை (தேசிய காவற்துறை படையால் கையாளப்பட்டவை தவிர மற்ற அனைத்துக் குற்றங்களும் அடங்கும்), கல்வி (மூன்றாம் நிலை கல்வி உட்பட), சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் கட்டுமானம், விவசாயம் மற்றும் விவசாய சேவைகள், நீர்ப்பாசனம், மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ச்சி, மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உள்ளூர் அரசு, பிராந்திய பொதுச் சேவை, மத மற்றும் கலாசார விவகாரங்கள், பிற சமூக பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் , கூட்டுறவு மற்றும் கூட்டுறவு வங்கிகள், தொழில்கள் மற்றும் வரி விதிப்பு, மத்திய மானியங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு கடன்கள் மற்றும் மானியங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (அந்நிய நேரடி முதலீடு) ஆகியவை உள்ளடங்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூற்றின் பிரகாரம் ‘பிராந்திய பொதுச் சேவை ஆணைக்குழு’ மற்றும் ‘பிராந்திய காவற்துறை ஆணைக்குழு’ இருக்கும். மேலும், அரச நிலத்தைப் பொறுத்தவரை, பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் சேனநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின்படி அதன் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், நிலங்களை சுவீகரித்தல் மற்றும் விடுவிக்கும் அதிகாரம் பிராந்தியங்களுக்கு இருக்க வேண்டும்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உத்தியோகபூர்வ மொழிகளாகவும், நாடு முழுவதும் நிர்வாக மொழியாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. சிங்களமும் தமிழும் தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ் உத்தியோகபூர்வ மொழிகளாகும், அதே சமயம் ஆங்கிலம் இணைப்பு மொழியாகும்.

நிறைவேற்று அதிகாரத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஒரு வைபவ ரீதியான ஜனாதிபதி இருக்க வேண்டும் என்றும், அமைச்சரவையின் தலைவராக இருக்கும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் செயற்படுவதாகவும், விடயங்களை ஒதுகீடு செய்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரம் உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

சட்டமன்றத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் இரு தரப்பு சட்டமன்றமாக இருக்க வேண்டும், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அவை மற்றும் பிராந்தியங்களின் பிரதிநிதிகளால் ஆன இரண்டாவது அவை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகாரப் பகிர்வைப் பாதிக்கும் திருத்தங்களின் விடயத்தில், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு அதிகமாகவும் , இரண்டாவது அவையிலுள்ள அனைத்து பிராந்திய பிரதிநிதிகளின் அங்கீகாரமும் அதற்கு இருக்க வேண்டும்.

நீதித்துறையைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் மற்றும் பிராந்திய சபைகள் உருவாக்கிய சட்டம் தொடர்பான அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு ரீதியான விளக்கத்தின் விடயங்களையும் கேட்டுத் தீர்மானிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.

மேலும், அடிப்படை உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை விசாரணை செய்வதற்கு மாகாண மேல் நீதிமன்றங்கள் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

“இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது” – பேராசிரியர் சரித ஹேரத்

“இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் குறைகளை மறைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

மாகாண சபைத் தேர்தல் முறைமையை நீக்கி புதிய தேர்தல் முறைமையை கடந்த அரசு அறிமுகப்படுத்தியது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் அப்போதைய அரசு தோல்வியடைந்ததால் மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை.

கடந்த அரசு எல்லை நிர்ணய அறிக்கையைக்கொண்டு வந்து அதை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வேண்டுமென்றே தோற்கடித்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தித் தேர்தலைக்   காலவரையறையின்றி பிற்போட்டுள்ளது.

நல்லாட்சி அரசு தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மாத்திரமல்ல மக்களின் ஜனநாயக உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை கடந்த அரசின் உறுப்பினர்களுக்குக் கிடையாது.

ஐக்கியக் தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முறையற்ற செயற்பாடுகள் அனைத்துக்கும் மூல காரணமாகும்.

மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் என்பது தற்போதைய அரசின் நோக்கமல்ல. தேர்தலைப் பழைய முறையிலும், புதிய முறையிலும் நடத்த முடியாத நெருக்கடி நிலை காணப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது  அரசின் பொறுப்பாகும். ஆனால், இந்தியாவின் அவசரத்துக்காக தேர்தலை விரைவாக நடத்த முடியாது. தேர்தல் திருத்த முறைமை குறித்து அரசு உரிய கவனம் செலுத்தியுள்ளது ” என்றார்.

“3000 வருடங்களாக இருந்த தமிழ் மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” – சி.வி. விக்னேஸ்வரன்

“3000 வருடங்களாக இருந்த தமிழ் மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா கூட்டத் தொடரின் போது செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பாக வட, கிழக்கிலுள்ள மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடினோம். இந்த நிலையில் எதிர்வரும் காலத்தில் என்ன வேண்டும்? என்பது தொடர்பாக பேசுவதற்கும் நாங்கள் குழுவொன்றை நியமித்துள்ளோம்.

இந்த நிலையில், அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவதோடு தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றே சட்டங்களும் கூறுகின்றன. அதன்படியே, அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொண்டு தங்களை ஆட்சி செய்வதற்கு இடமளிக்குமாறே நாங்களும் கோருகின்றோம். மாறாக, மத்திய அரசாங்கம் எங்களை அடிபணிய வைத்து ஆட்சி செய்யும் போது எங்களால் எதனையும் செய்ய முடியாது.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாங்கள் முன்வைக்கும் எந்தவொரு யோசனையையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாக, வட, கிழக்கில் ஆரம்பத்தில் சிங்கள மக்கள் இருந்ததாகவும் தற்போதே தமிழ் மக்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், அது மிகப் பெரிய பொய்யாகும். வட , கிழக்கில் அதிகளவான சிங்கள மக்கள் இருக்கவில்லை. 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களே அங்கு இருக்கின்றனர். சிங்கள மொழியானது 1400 வருடங்களுக்கு முன்னே பிறந்தது. அவ்வாறாயின் 3000 வருடங்களாக இருந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என்றார்.