அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.
அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.
பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது. இதையொட்டி வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை டிரம்பின் பிரிவு உபசார வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மரியாதைக்குக் கூட ஜோ பைடனின் பெயரை உச்சரிக்கவோ, அடுத்து ஜனாதிபதியாக் பதவியேற்பதற்காக அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ கூட இல்லை டிரம்ப். இது வலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாகியுள்ளது.
அந்த பிரிவு உபசார விழாவில் ஜனாதிபதி டிரம்ப் பேசியதாவது:
“அமெரிக்காவையே மீண்டும் உயர்ந்த நாடாக நான் என் பதவிக்காலத்தில் மாற்ற முயற்சி மேற்கொண்டேன். தேர்தலில் கடினமான போராட்டங்களையும், கடினமான போரையும் சந்தித்தேன். அதன்பின் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்.
இன்று 45-வது ஜனாதிபதியாக இருந்து எனது கடமைகளை முடித்துள்ளேன். நாம் பல்வேறு விஷயங்களை ஒன்றாக இணைந்து சாதித்துவிட்டோம் என்ற உண்மையுடன் நான் உங்கள் முன் நிற்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் இந்த இடத்துக்கு வந்தபின் ஏராளமானவற்றைச் செய்திருக்கிறேன். ஜனாதிபதி என்ற வார்த்தையின் அர்த்தத்துக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றி இருக்கிறேன்.
இந்த வாரம் நாம் புதிய நிர்வாகத்தை ஏற்கப் போகிறோம். அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், மேன்மையடையச் செய்யவும் வெற்றிபெறவும் பிரார்த்திப்போம். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவும் வாழ்த்துகிறேன். அதிர்ஷ்டம் மிகவும் முக்கியமான வார்த்தை.
அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அரசியல் வன்முறை என்பது நாம் மதிக்கும் அனைத்துக்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் எப்போதும் இல்லாதவகையில், ஒன்றாக இணைந்து மதிப்புமிக்க விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, கோபத்தை மறந்து, ஒரு தளத்தில் இணைய வேண்டும்.
ஏராளமான வரிச் சலுகைகள், சீனா மீது வரிவிதிப்பு, எரிசக்தியில் தன்னிறைவு, குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு எனப் பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறோம். அமெரிக்காவையும், வெளிநாடுகளில் அமெரிக்கத் தலைமையையும் வலிமைப்படுத்தி இருக்கிறோம். இந்த உலகத்தை நாம் மதிக்க வைத்திருக்கிறோம். இந்த மதிப்பை அடுத்துவருவோர் இழந்துவிடக் கூடாது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் என்னுடைய ஆட்சியில் கையொப்பம் ஆகின. இதுபோன்ற ஒப்பந்தங்கள் நடக்கும் என யாரும் நம்பவில்லை. மத்தியக் கிழக்கு நாடுகளில் வன்முறையின்றி, ரத்தமின்றி, போரை முடிவுக்குக் கொண்டுவந்து, நமது வீரர்களை நாடு திரும்பவைத்தோம்.
கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
உலகின் சக்தி மிக்க நாடான அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து நிலையான அச்சுறுத்தல்கள், சவால்களை எதிர்கொண்டது. ஆனால், நம் மீது நம்பிக்கை இழப்பதும், நம்முடைய தேசத்தின் மகத்துவத்தின் மீது நம்பிக்கை இழப்பதும்தான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். தேசம் என்பதில் நாம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும்.
சுதந்திரமான கருத்துரிமை, பேச்சுரிமை, வெளிப்படையான விவாதம்தான் இந்தச் செழுமையான பாரம்பரியத்தின் மையமாக நம்பப்படுகிறது. நாம் யார், எப்படி இங்கு வந்தோம் என்பதை மறந்தாலும், அமெரிக்காவில் அரசியல் தணிக்கை, தடுப்புப் பட்டியல் நடப்பதை அனுமதிக்கலாமா?
இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வெளிப்படையான விவாதத்தை மறுப்பதும், கருத்துரிமையை மறுப்பதும் நம்முடைய பாரம்பரியத்தை மீறுவதாக அமையும். நான் ஜனாதிபதி பதவியை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன். புதன்கிழமை நண்பகலில் ஆட்சி மாற்றத்தை ஒப்படைக்கத் தயாராகிறேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.