30

30

“யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்” – மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா

“தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்” என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

யாழ்.சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1985 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கடமையாற்றியிருக்கிறேன். நான் கடைசியாக 2014, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கீரிமலை உடுவில் பகுதிகளில் கடமையாற்றியிருந்தேன்.

அக் காலப்பகுதியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான வீடுகளை பெற்றுக் கொடுப்பதில் பெரும் பங்காற்றியிருந்தேன். அத்தோடு விவசாய மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய பார்த்தீனிய ஒழிப்பில் நான் முக்கிய பங்காற்றியிருந்தேன்.

அதன் பின்னர் வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தற்போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாகிறது. எனினும் யாழ் மாவட்டம் தொடர்பாக ஏற்கனவே நான் அறிந்தவன். இங்குள்ள மக்களை நன்கு அறிந்தவன்.

எனவே இங்குள்ள மதத் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கருத்தின் ஊடாக ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மாவட்டத்தில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவேன். மேலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்.

அத்தோடு எனக்குக் கீழ் பணியாற்றும் சகல இராணுவ வீரர்களும் பொதுமக்களின் சகல சமூக செயற்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்” என்றும் தெரிவித்தார்.

“இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளோம்” – எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர்  இன்று(30.01.2021) வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், வழக்குத் தொடர்வதற்காக சில ஆவணங்களையும் கையளித்திருந்தனர் குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலையில் இருந்த சூலம் உடைக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சாள்ஸ் ஆகியோர் நேரிலே சென்று பார்வையிட்ட பின்பு ரவிகரன் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து 29.01.2021 நேற்றைய தினம் காவற்துறையினரோடு குருந்தூர்மலைக்குப்போய் உடைக்கப்பட்ட தடையங்கள் எல்லாவற்றையும் ரவிகரன் காண்பித்திருந்தார்.

ஆகையினாலே அங்கே இருந்தது உடைக்கப்பட்டதென்பது ஊர்ஜிதமாக்கப்பட்டிருக்கின்றது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலே, அல்லது மேன்முறையிட்டு நீதிமன்றத்திலே வழக்கொன்றை நாங்கள் தாக்கல் செய்யவுள்ளோம். ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினாலே கொடுக்கப்பட்ட உத்தரவினை மீறி, அந்த உத்தரவிற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக, அந்த நீதிமன்ற உத்தரவினை மீறியதற்காக, நீதிமன்றினை அவமதித்த வழக்கொன்றும் மேன்முறையிட்டு நீதிமன்றிலே நாங்கள் உடனடியாகத் தாக்கல் செய்வோம்.அது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும் எதிராக அந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் – என்றார்

வடக்கில் 2997 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம் !

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் இன்றைய முதல் நாளில் 2 ஆயிரத்து 997 சேவையாளர்கள் டோஸ் பெற்றுள்ளனர். இது 30 சதவீத்ததினர் ஆகும்.என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில்  9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர். மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 997 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும்   ஆயிரத்து 586 பேரும் கிளிநொச்சியில் 290 பேரும் மன்னாரில் 448 பேரும் வவுனியாவில் 360 பேரும் முல்லைத்தீவில் 313 பேரும் இன்றுகொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.
இரண்டாவது நாள் தடுப்பூசி மருந்து வழங்கல் நாளை முன்னெடுக்கப்படும் ” என்றார்.

மறைந்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கும் கொரோனா !

இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அவரது சடலம் இன்று சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு பொரளையில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டதாகவும் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாரியளவிலான இறுதி அஞ்சலிகள் இடம்பெறவில்லை என்றும் அவரது மகன் தெரிவித்தார்.

எண்ணற்ற தமிழ் நூல்களை சமூகத்திற்கு படைத்த டொமினிக் ஜீவா, முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் கடந்த வியாழனன்று கொழும்பில் காலமானார். 1940 ஆம் ஆண்டளவில் எழுத்துத் துறையில் கால் பதித்த அன்னார், ஈழ இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாவார்.

தமிழரசுக்கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் மாவை !

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று  சனிக்கிழமை தீர்மானித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது  எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

“நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” – சி.வி. விக்னேஸ்வரன்

“இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அண்மையில் ஊடக சந்திப்பொன்றின் போது அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டிருந்த கருத்து தொடர்பாக பேசிய சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி தொடர்பாக தன்னுடைய அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். எனினும் அது சமூக ஊடகங்களில் வேறு விதமாக பொருள் கொ்ளப்பட்டது எனக்குறிப்பிட்டு பேசுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில் …

இராணுவப் பயிற்சி பற்றிக் கூறிய விடயங்கள் பத்திரிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. எமது மாணவ மாணவியர்க்கு அவர்கள் கல்லூரிகளில் இருக்கும் போதே இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றே கூறினேன்.
என்னைப் போன்றவர்கள் எவ்வாறு எங்கள் கல்லூரிகளில் கல்லூரியை விட்டு விலக முன்னர் போர்ப் பயிற்சி நெறிகளில் பாண்டித்தியம் பெற்றோமோ ? அதே போன்று கல்லூரிகளில் இருக்கும் போதே எமது மாணவ மாணவியர் பயிற்சி பெற வேண்டும் என்றே கூறினேன்.

அவர்களுக்குப் பயிற்சி யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி அப்போது எழுந்தது. முழுமையாகத் தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இராணுவத்தில் இருந்தால் அவர்கள் தமிழில் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் முன்னாள் போராளிகள் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் தமிழ் நாட்டில் இருந்து வருவித்து அவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம் என்று கூறியுள்ளேன். சிங்களவர்களோ சிங்கள மொழியிலோ பயிற்சிகள் அளிக்கக் கூடாது என்றும் கூறினேன்.

அமைச்சர் கூறியது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றி. அவர்கள் அநேகமாகக் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக கல்லூரியில் பயிலும் 16 வயதுடையோருக்கு கல்லூரியிலேயே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன். இதனைப் புரியாமல் நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம். கல்லூரியில் போர்ப் பயிற்சி பெற்றமையின் நன்மைகளைப் புரிந்தே நான் அவ்வாறு கூறினேன். இன்றைய இளைஞர் யுவதிகளை ஒழுக்க சீலர்களாக மாற்றக் கூடியது இப் பயிற்சி” என குறிப்பிட்டுள்ளார் .

குருந்தூர் மலைக்கு தகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பொலிஸார் அச்சுறுத்தல் !

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அண்மையில் முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிட்டதைப் போன்று வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் பார்வையிடுவதற்கு, முல்லைத்தீவு காவல்துறையினர் முறைப்பாட்டாளர் ரவிகரனை 29.01.2021 இன்று குருந்தூர் மலைக்கு அழைத்துச்சென்றனர்.

இது தொடர்பில் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை மலைப்பகுதிக்குள் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன், அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் விபரங்களைச் சேகரித்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் 5286 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – பக்கவிளைவுகள் எவையும் பதிவாகவில்லை !

நேற்று முன்னிலை பணியாளர்கள் உட்பட 5286 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் பக்கவிளைவுகள் குறித்து எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சுகாதார பணியாளர்களும் முன்னிலை பணியாளர்களும் மருந்தை செலுத்திக்கொள்வது குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பக்கவிளைவுகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை நாளையும் நாங்கள் மருந்துவழங்குவதை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பெருமளவு சுகாதார பணியாளர்களுக்கும் முன்னிலை பணியாளர்களுக்கும் மருந்துகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது” – வைத்தியசாலையிலிருந்து சுகாதாரதுறை அமைச்சர் !

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றமையால், கொரோனாத்  தடுப்பூசி ஆரம்ப நிகழ்வில் தன்னால் பங்கேற்க முடியவில்லை எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவால் வழங்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசியை முதலில் சுகாதாரப் பிரிவுக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் வழங்க கிடைத்தமையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைகின்றார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக, கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, கொரோனாத் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தைத் தான் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பவித்ரா வன்னியாராச்சி, ஹிக்கடுவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் இரத்மலானை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

300 ஐ தாண்டிய கொரோனா உயிர்ப்பலி – மேலும் எட்டுப்பேர் பலி !

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.