27

27

“ஜனநாயகம் மனித உரிமைகள் குறித்து எவரும் கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையில் இலங்கை இல்லை” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே

ஜனநாயகம் மனித உரிமைகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும் கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இவை கடந்த வருடம் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடேயிற்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மீறல்களில் ஈடுபடுபவர்களையும் வன்முறைகளையும் ஏனைய நாடுகளிலேயே காண்கின்றோம் இலங்கையில் இல்லை.

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளக்கூடும். அமெரிக்கா உலகின் மனித உரிமைகள் குறித்து நேர்மையான அக்கறையை கொண்டிருந்தால் ,இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடில்லை. நாட்டில் தற்போத அமைதி நிலவுகின்றது என்பதை நாங்கள் நினைவுபடுத்தவேண்டியிருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடனின் வெற்றி முக்கியமானது என்பதை வலியுறுத்தியுள்ள அதேவேளை பைடன் தனது நாட்டில் ஒழுங்கை ஏற்படுத்தவேண்டிய நிலையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள ஏற்படுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

இலங்கை ஒரு வன்முறை நாடில்லை. இங்கு வன்முறைகள் இடம்பெறவில்லை ஏனைய நாடுகளில் இடம்பெறும் சிறிய சம்பவங்களே இடம்பெறுகின்றன .இலங்கையில் இனமத ஐக்கியம் நிலவுகின்றது இதனை நாங்கள் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ட்ரம்ப் விதித்த தடையை நீக்கினார் ஜோ பைடன் !

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20ம் திகதி பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார். ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றுள் பெரும்பாலானவை முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகள் ஆகும்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அறிவித்தார். மேலும், இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும், மெக்சிகோ சுவர் கட்டுமானத்திற்கும் தடை விதித்து அதிரடி காட்டினார்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த தடையை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப் நீக்கினார். இதன் அடிப்படையில், அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணிபுரியலாம். ராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “அமெரிக்காவில் பிறந்த அனைத்து தகுதியுள்ள மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். உலகளவில் அமெரிக்கா வலிமையான, அனைவருக்கும் ஏற்ற நாடு. அதில் ராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை. ராணுவத்தின் நலனுக்காகவும், தேசத்தின் நன்மைக்காகவும் தகுதிவாய்ந்த அனைத்து அமெரிக்க மக்களும் ராணுவத்தில் பணியாற்றலாம். பாலினத்தின் அடிப்படையில் ராணுவத்தில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது. தகுதியுள்ள அனைவரும்,வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்தை கடந்த உயிர்ப்பலி – கொரோனாவுடன் போராடும் இங்கிலாந்து !

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 36,89,746 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 16.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜூலை 17-ந்திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் மீள நிறுவப்படவேண்டும்” – துரைராசா ரவிகரன் பொலிஸில் முறைப்பாடு !

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் இன்று (27.01.2020 ) முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.

மேலும் குறித்த முறைப்பாடு தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 18.01.2021அன்று முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க படையினர் சகிதம் வருகைதந்து அங்கு தொல்லியல் அகழ்வுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிலையில் அங்கிருந்த முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது.

அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்குச் செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர்.

இந் நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமைய குருந்தூர் மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு 27.01.2021 இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன்,உள்ளிட்டவர்களுடன் நானும், சில பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களோடும் சென்றிருந்தோம்.

அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.

இதனைவிட ஆலயநிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப்போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிந்தது.

மேலும் கடந்த 10.09.2020 அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய குருந்தூர்மலைப் பகுதிக்கு சென்றபோது அப்போதும் அங்கு இருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது.

அதேவேளை கடந்த 01.10.2020 அன்று குமுழமுனைப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றபோது, அமைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னமான முச்சூலம், அருகே இருந்த காட்டிற்குள் உடைத்து வீசப்பட்டிருந்ததை அவதானித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சூலத்தினை எடுத்து ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்து அன்றைய பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 18.01.2021 அன்று அமைச்சர் வருகைதந்தபோது மீண்டும் அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக அறியமுடிந்தது.

இதிலே குறிப்பாக கடந்த 10.09.2020 நீதிமன்றில் இடம்பெற்ற இந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில், தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புக்கோரியிருந்தது.

இந் நிலையில் நீதிமன்று தொல்லியல் திணைக்களம் கோரியதற்கமைய குருந்தூர்மலை வளாகத்தில் ஊர்காவல்படையின் பாதுகாப்பு காவலரண் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

20210127 152917

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேதான் அங்கு பாதுகாப்பு தரப்பினர் இருந்த நிலையில், அங்கிருந்து தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.

இந் நிலையில் இவ்வாறு தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலே, 27.01.2020 இன்று முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் அப்பகுதி கிராமமக்களின் சார்பாக முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளேன்.

மேலும் குறித்த முறைப்பாட்டிலே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் மீள நிறுவப்படவேண்டும் எனவும், அங்கு தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளேன் ” என்றார்.

“போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது” – கெஹலிய ரம்புக்வெல

“போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது” என அமைச்சரவைப் பேச்சாளாரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று(26.01.2021)  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.

மங்கள சமரவீர, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு எதிரான நெருக்கடியை 2015 இல் ஜெனிவாவில் உருவாக்கினார். எனினும், இறுதி ஜெனிவாக் கூட்டத்தில் திலக் மாரப்பன, 2015 தீர்மானத்தில் இலங்கை அரசமைப்புக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் எமக்கே உள்ளது. சுயாதீன நாடு என்ற அடிப்படையில் அரசு தீர்மானம் எடுக்கும் .

போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசு  உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தடுப்பூசி போடுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்” – தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லலித் வீரதுங்க

தடுப்பூசி போடுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Lalith Weeratunga 1024x576 1

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தாமாக முன்வந்து ஊசி போடுவதாகவும், கட்டாயப்படுத்தலினால் இல்லை என கூறி விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும். ஆனாலும் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு ஊக்குவிப்போம் என்றும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் !

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ,மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் , கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்களும் இன்றையதினம் விஜயம் செய்து நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இன்று காலை (27.01.2020) குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரை அங்கு காவல் கடமையில் நின்ற இராணுவத்தினர் உள்ளே செல்லவிடாது தடுத்ததோடு, தமது மேலதிகாரியின் உத்தரவுப்படி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவ முகாமின் இராணுவ மேலதிகாரி பணித்துள்ளதாக தெரிவித்து தடை விதித்தனர்.

அவ்விடத்திலிருந்து தொலைபேசி வாயிலாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் விடயம் குறித்து தெரியப்படுத்தியதை தொடர்ந்து, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் தொலைபேசியூடாக சாள்ஸ் நிர்மலநாதனுடன் கலந்துரையாடியதன் பின்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றலுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகை தந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இலக்கங்களையும் காவல் கடமையில் இருந்த இராணுவத்தினர் பதிந்ததோடு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்களையும் பதிந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் கலந்துகொண்டிருந்தனர்.