18

18

ஆராய்ச்சியின் போது வௌவாலிடம் கடி வாங்கிய வுகான் விஞ்ஞானி – கொரோனாவிற்கான காரணத்தை தேடி பயணிக்கும் குழுவின் தேடலில் அதிர்ச்சி !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வில் வைரஸ் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான வுகான் நகரில் உள்ள ஒரு குகையில் கடந்த 2017-ம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி வௌவாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெய்லி மெயில் மற்றும் டெய்லி ஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ’வௌவால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017-ம் ஆண்டு சென்றுள்ளார். சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவாலை பிடித்து அதில் பரிசோதனை செய்துள்ளனர்.

அந்த குழுவில் இடம்பெற்றிருந்த வைரஸ் ஆராய்ச்சிளர் சியூ ஜியி என்ற அந்த குகையில் பிடித்த ஒரு வௌவாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” – ரோகித போகொல்லாஹம

“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு தமிழ் கட்சி கூட்டணி சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனை உரிய முறையில் எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலையீடுகள் குறித்து தீவிரமாக உள்ளவர்களை பொறுப்புக்கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல் செய்யவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை 2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் படி தமிழ்தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்தியமையை அந்த கட்சி மறந்துவிட்டது எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் இலங்கை மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை தனக்கு சார்பாக வாதிடுவதற்காக பயன்படுத்தவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் கட்சிகளின் கருத்துக்களை சாதாரணமாக கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி போர்முனையில் யுத்தத்தை நடத்துவதற்கு பிரிட்டனும் பிரான்சும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அவர்கள் இந்த விடயத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தின என யுத்தகால வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் குறித்த தனது அரசாங்கத்தின் குறித்து அவ்வேளை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சராக காணப்பட்ட டேவிட் மில்லிபாண்டின் கருத்து என்னவென நான் உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை என ரோகித போகொல்லஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் குரலாக செயற்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு முதல்தடவையாக இரண்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், 2013 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ள போதிலும் அவர் ஜெனீவா குறித்த பொது நிகழ்ச்நிரலின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார். ஜெனீவா பெரும் சவாலாக காணப்படப்போகின்றது இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலகநாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை மீள இலங்கைக்கு அழைத்து வரக்கோரி கணவர் தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் !

கம்பஹாவில் வதியும் கப்பல் தள பணியாளர் ஒருவர் தனது மனைவியை ஜோர்தானிலிருந்து திருப்பி அழைக்குமாறு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் ஒன்றை நடத்தினார்.

இவரது மனைவி (24வயது) கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஜோர்தானில் தொழில்புரிந்து வருகிறார். தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

இந்த அவல நிலை குறித்து அப்பெண்ணின் கணவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது மனைவியை திருப்பி அழைக்க விரும்பினால் 4 லட்சம் ரூபா பணம் தருமாறு கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபர் தொலைத்தொடர்புக் கோபுரம் மீதேறி போராட்டம் செய்த பின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாட உடன்பட்டார்.

“மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை !

“மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(18.01.2021) மண்டைதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனைக் கண்டித்து பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு,கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

போன தடவையும் பொலிஸார் பஸ்ஸுடன் தான் வந்தனர். நீங்கள் மீண்டும் திருப்பி வர முயற்சி செய்தால் நாங்கள் பகிரங்கமாகச் சொல்கின்றோம் , பிரதேச செயலகம்,  மாவட்ட செயலகம் உட்பட அனைத்தும் முடங்கும். சிவில் நிர்வாகம் முடக்கப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என தெரிவித்துள்ள அவர் முழுமையாக விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என வேலணை பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பைலை என்னால் முடியாது என திருப்பி அனுப்புங்கள் எனவும் சிவாஜிலிங்கம் வேலணை பிரதேச செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” – கஜேந்திரன்

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று(18.01.2021) மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ்அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களிடம் பேசும் போதே கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

29 குடும்பங்களை சேர்ந்த மக்களும் தங்களின் சொந்த நிலங்களை இழக்க தயாரில்லை. மீண்டும் மீண்டும் மக்களை குழப்பும் விதத்தில் காணி திணைக்களம் நடந்துகொள்கின்றது. பிரதேச செயலாளர் இந்த பிரதேசத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர்களிற்கு இதனை தெரிவிக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் நிலங்களை அளப்பதற்கு அனுப்புகின்றனர் ஆற்றில் ஒடும் நீர் நித்திரையா முழிப்பா என பார்ப்பதற்கு கொள்ளி வைத்து பார்ப்பது போல காணித்திணைக்களம் செயற்படுகின்றது, இது மக்களை குழப்புகின்ற முயற்சி மக்களிற்கு இதில் விருப்பமில்லை என காணித்திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்.

மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கவில்லை,காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் தான் அலுவல்கள் இடம்பெறுகின்றன. காணித்திணைக்களத்திடம் இந்த நோக்கத்தை கைவிடுமாறு பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும். வாழ்க்கையில் கடற்படையினருக்கு காணி கொடுப்பதற்கு ஒருபோதும் மக்கள் இணங்கமாட்டார்கள் இந்த மக்களும் தங்கள் காணிகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் தொடரும் பௌத்தமயமாக்கல் – இராணுவத்தினர் புடைசூழ தமிழர் நிலத்தில் பௌத்த சின்னங்களை தேடிய ஆராய்ச்சி ஆரம்பம் !

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்றையதினம் (18)ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது .

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ,மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர். இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மணலாறு படலைகல்லு என்னும் பகுதியிலும் கல்யாணபுர என்னும் மற்றும் ஒரு விகாரை சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் (18) அங்கும் தொல்லியல் அகழ்வாராச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 ஆவது பிரிகேட்டினால் ஏற்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன . இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலையை சூழ நாட்ட பட்டு நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம் வரைக்கும் நிறுத்தப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்துக்குள்ளும் அரசாங்கம் மீளவும் பௌத்தமயமாக்கல் செயற்றிட்டத்தில் இறங்கியுள்ளமை தொடர்பில் பலராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் குறித்த மலை பகுதியில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் காணப்பட்ட நிலையில் அங்கு குமுளமுனை ,தண்ணிமுறிப்பு கிராம மக்கள் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆனால் நேற்றைய தினம் (17) குருந்தூர் மலை பகுதிக்குள் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான ஆலயம் அங்கு இல்லாது உடைத்து அழிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் குருந்தூர் மலையில் இருந்த சூலம் ஒன்று இடம் தெரியாது உடைத்து எறியப்பட்டுள்ளது அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம்(17) கிராம மக்களின் முறைப்பாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இந்த பகுதிக்கு பார்வையிடுவதற்க்காக சென்றிருந்த நிலையில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் தடைகளை ஏற்படுத்திய நிலையில் மிக நீண்ட வாய்தர்க்கத்தை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உட்செல்ல அனுமதிக்க பட்டிருந்தனர். அந்த இடத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு நேற்று (17)அனுமதி மறுக்கட்டிருந்தது. இந்த நிலையில் இன்றையதினம்(18) அமைச்சர் வருகை தந்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி பிரதேச ஊடகவியலாளர்கள் தொல்லியல் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில் பிராந்திய ஊடகவியலாளர்களும் இறுதியில் அனுமதிக்கபட்டனர். இருந்த போதிலும் அகழ்வாராய்ச்சி பணி இடம்பெறும் மலையில் உள்பகுதியில் காணப்பட்ட படையினர் பிரதேச ஊடகவியலாளர்களை ‘நீங்கள் தமிழா’ என கேட்டு வெளியே செல்லுமாறு பணித்ததோடு ஊடகவியலாளர்களை புகைப்படங்களையும் எடுத்தனர்.

அகழ்வு பணிகளுக்காக குருந்தூர் மலையில் நின்ற பல நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அறுத்து வீழ்த்த பட்டுள்ளது.அமைச்சரின் வருகைக்காக பல மாதங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்ட தண்ணிமுறிப்பு குளத்துக்கு செல்லும் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பொறியியலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு நாட்களில் அவசர அவசரமாக செப்பனிட பட்டிருந்தது. பல வருடங்களாக இந்த வீதியை செப்பனிட்டு தருமாறு தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தும் செப்பனிட படாத வீதி அமைச்சர் வருகைதந்து விகாரையின் தொல்லியல் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவசர அவசரமாக செப்பனிடபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினார் .

குறித்த குருந்தூர்மலை இடம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் தாக்கல்செய்ய வழக்கில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல் ஆக்கபட்ட கட்டளை ஒன்றில் அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் எந்தவிதமான கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்ய முடியாது என்றும் தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம் என்றும் வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது தொல்லியல் ஆய்வுகளை செய்வதாக இருந்தால் யாழ் பல்கலை கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூற பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் நூற்றுக்கணக்காக குவிக்கப்பட்டு இராணுவமே தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து குறித்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பிரதேசத்தை சிங்கள மயபடுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்டுகின்றதா என பிரதேச தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

’18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி” – அமைச்சர் சரத் வீரசேகர புதிய திட்டம் !

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த முன்மொழிவை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பயிற்சி மக்கள் தமது சொந்த காலில் நிற்கவும் தலைமைத்துவ குணங்களை ஊக்குவிக்கவும் ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டிற்கு பங்களிக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறைகள் பல நாடுகளுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவியுள்ளதுடன், இது இளைஞர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகவும் – பாசிசவாத கொள்கைக்கு எதிராகவும் நாம் ஓரணியில் திரண்டு போராடுவோம்” – நளின் பண்டார

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகவும் – பாசிசவாத கொள்கைக்கு எதிராகவும் நாம் ஓரணியில் திரண்டு போராடுவோம்” என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டின் ஜனாதிபதியானவர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மதிப்பவராக இருக்க வேண்டும். மாறாக சர்வாதிகாரப் போக்கில் பயணிப்பவராகவும் பாசிசவாதியாகவும் இருக்கக்கூடாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகவும் – பாசிசவாத கொள்கைக்கு எதிராகவும் நாம் ஓரணியில் திரண்டு போராடுவோம். இந்த அரசை வீழ்த்தும் வரைக்கும் எமது போராட்டம் தொடரும்.

முப்பது வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரை வெற்றி கொண்ட பெருமை 90 வீதம் அப்போதைய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையே சாரும். அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதியான இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பங்களிப்பும் காணப்பட்டது.

ஆனால், இறுதிக்கட்டப் போரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் விமர்சனங்களுக்குரியதாகவே இருந்தன. எனவே, இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.

ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயல்களினால் நாட்டுக்கும் – நாட்டின் தேசிய வீரர்களான இராணுவத்தினருக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது ”  என்றார்.

“மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் தேசிய பிரச்சினையாகவே கருதுவேன். ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும்” – சஜித் பிரேமதாஸ

“மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் தேசிய பிரச்சினையாகவே கருதுவேன். ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மொனராகலை – புத்தள ஒக்கம்பிடிய பிரதேசத்தில் நேற்று (17.01.2021) நடைபெற்ற ‘எதிர்க்கட்சியின் நடமாடும் சேவை’ கூட்டத்தில்  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எதிர்க்கட்சியின் செயற்பாடு முரண்பாடுகளை ஏற்படுத்துவது என அநேகமானோர் கருதுகின்றார்கள். வரலாற்றில் இதுவரை காலமும் செயற்பட்ட எதிர்க்கட்சிகளைக் கருத்தில்கொண்டு அவர்கள் அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார்கள். இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி மாறுப்பட்ட எதிர்க்கட்சியாகச்  செயற்படும்.

அரசின் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். சிறிய எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு நாடு தழுவிய ரீதியில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். பிரச்சினைகளை ஏற்படுத்தி தவறான வழியில் இலக்கை அடைவது எதிர்க்கட்சியின் செயற்பாடல்ல.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். மக்களின் பிரச்சினைகளைப் பகிரங்கப்படுத்தி அதனை உயர்மட்ட அரசியல் வரை எம்மால் கொண்டு செல்ல முடியும். நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கவனம் செலுத்தும். அரசின் அனைத்துச் செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

தேசிய பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும், ஏனைய பிரச்சினை குறித்து ஏனையோர் பேச வேண்டும் என அரசியல் களத்தின் பிரதிவாதிகள் தெரிவிக்கின்றார்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினை என்ற கோணத்திலேயே நான் பார்ப்பேன். தேசிய பிரச்சினை, மாகாண பிரச்சினை, மாவட்ட பிரச்சினை, பிரதேச பிரச்சினை என்ற வேறுபாடுகள் ஏதும் கிடையாது.

மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அவற்றில் அடிப்படைப் பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகள் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும். நாம் மக்கள் மத்தியில் செல்லும்போது அவர்கள் தங்களின் பிரச்சினைகளைக் கூறுகின்றார்கள். அதிகாரம் இல்லாவிடினும் எம்மால் ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.ஆகவே, மக்களின் அடிப்படைப்
பிரச்சினைகளையும் தேசிய பிரச்சினையாகவே கருதுவேன். பிரச்சினைகளை ஒருபோதும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என குறிப்பிட்டார்.

“போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு” – ஜனாதிபதி தீர்மானம் !

இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் இம்முறை ஜெனிவா அமர்வில் யோசனை ஒன்றை முன்வைக்கவும் மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு மாற்று நடவடிக்கைகளைக் கையாளத் தீர்மானித்துள்ளது.

இதன்படியே குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதன்போது குறித்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த ஆணைக்குழு அடுத்துக் கூடவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிதாக தீர்மானம் ஒன்றை வரையவும், அதனை ஜெனிவாவில் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக இலங்கை கையாளவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கெஹலிய மேலும் தெரிவித்தார்.