“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” – ரோகித போகொல்லாஹம

“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு தமிழ் கட்சி கூட்டணி சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனை உரிய முறையில் எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலையீடுகள் குறித்து தீவிரமாக உள்ளவர்களை பொறுப்புக்கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல் செய்யவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை 2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் படி தமிழ்தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்தியமையை அந்த கட்சி மறந்துவிட்டது எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் இலங்கை மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை தனக்கு சார்பாக வாதிடுவதற்காக பயன்படுத்தவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் கட்சிகளின் கருத்துக்களை சாதாரணமாக கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி போர்முனையில் யுத்தத்தை நடத்துவதற்கு பிரிட்டனும் பிரான்சும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அவர்கள் இந்த விடயத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தின என யுத்தகால வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் குறித்த தனது அரசாங்கத்தின் குறித்து அவ்வேளை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சராக காணப்பட்ட டேவிட் மில்லிபாண்டின் கருத்து என்னவென நான் உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை என ரோகித போகொல்லஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் குரலாக செயற்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு முதல்தடவையாக இரண்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், 2013 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ள போதிலும் அவர் ஜெனீவா குறித்த பொது நிகழ்ச்நிரலின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார். ஜெனீவா பெரும் சவாலாக காணப்படப்போகின்றது இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலகநாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *