“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகவும் – பாசிசவாத கொள்கைக்கு எதிராகவும் நாம் ஓரணியில் திரண்டு போராடுவோம்” என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டின் ஜனாதிபதியானவர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மதிப்பவராக இருக்க வேண்டும். மாறாக சர்வாதிகாரப் போக்கில் பயணிப்பவராகவும் பாசிசவாதியாகவும் இருக்கக்கூடாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகவும் – பாசிசவாத கொள்கைக்கு எதிராகவும் நாம் ஓரணியில் திரண்டு போராடுவோம். இந்த அரசை வீழ்த்தும் வரைக்கும் எமது போராட்டம் தொடரும்.
முப்பது வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரை வெற்றி கொண்ட பெருமை 90 வீதம் அப்போதைய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையே சாரும். அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதியான இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பங்களிப்பும் காணப்பட்டது.
ஆனால், இறுதிக்கட்டப் போரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் விமர்சனங்களுக்குரியதாகவே இருந்தன. எனவே, இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.
ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயல்களினால் நாட்டுக்கும் – நாட்டின் தேசிய வீரர்களான இராணுவத்தினருக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது ” என்றார்.