“3000 வருடங்களாக இருந்த தமிழ் மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா கூட்டத் தொடரின் போது செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவாவில் என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பாக வட, கிழக்கிலுள்ள மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடினோம். இந்த நிலையில் எதிர்வரும் காலத்தில் என்ன வேண்டும்? என்பது தொடர்பாக பேசுவதற்கும் நாங்கள் குழுவொன்றை நியமித்துள்ளோம்.
இந்த நிலையில், அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவதோடு தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றே சட்டங்களும் கூறுகின்றன. அதன்படியே, அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொண்டு தங்களை ஆட்சி செய்வதற்கு இடமளிக்குமாறே நாங்களும் கோருகின்றோம். மாறாக, மத்திய அரசாங்கம் எங்களை அடிபணிய வைத்து ஆட்சி செய்யும் போது எங்களால் எதனையும் செய்ய முடியாது.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாங்கள் முன்வைக்கும் எந்தவொரு யோசனையையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாக, வட, கிழக்கில் ஆரம்பத்தில் சிங்கள மக்கள் இருந்ததாகவும் தற்போதே தமிழ் மக்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், அது மிகப் பெரிய பொய்யாகும். வட , கிழக்கில் அதிகளவான சிங்கள மக்கள் இருக்கவில்லை. 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களே அங்கு இருக்கின்றனர். சிங்கள மொழியானது 1400 வருடங்களுக்கு முன்னே பிறந்தது. அவ்வாறாயின் 3000 வருடங்களாக இருந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என்றார்.