“தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் ” – துரைராசா ரவிகரன்

“தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் ” என முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருந்தூர் ஆலய பகுதியில் அரசின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வந்து தொல்லியல் ஆய்வுக்கென ஆரம்ப நிகழ்வினை 18.01.2021 அன்று ஆரம்பித்து வைத்திருந்தார். இது தொடர்பாக கிராமத்தவர்கள் பலரும் தங்களுடைய விசனத்தை வௌியிட்டிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக குறிப்பிடும்போதே துரைராசா ரவிகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் இந்துமக்கள் வழிபட்டு வந்த தலமாகும். இந்த இந்து ஆலயத்தின் அடையாளங்கள் யாவும் தற்போது அழிக்கப்பட்டுள்ளன. அரசின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வந்து தொல்லியல் ஆய்வுக்கென ஆரம்ப நிகழ்வினை 18.01.2021 அன்று ஆரம்பித்து வைத்திருந்தார்.

எனினும் நீதிமன்ற கட்டளையில் குறிப்பிட்டதைப் போல யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட மாணவர்களோ, அல்லது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களோ யாரும் அழைக்கப்படவில்லை. எல்லாமே சிங்களமயமாக காட்சியளித்திருந்தது. நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல.

சிங்கள இனவாதிகளுக்கு எதிராகவும், இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவுமே நாம் எமது கருத்துக்களை வெளியிடுகின்றோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் ஆய்வு என்ற பெயரில் அடுத்தகட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.

இதேவேளை கடந்த 2018.09.04 அன்று குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கும் நோக்கோடு இரு பௌத்த பிக்குகள் அடங்கலான 12 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்தனர். அவர்களின் வருகை  குமுழ முனைப்பகுதி மக்களோடு இணைந்து நாம் தடுத்திருந்தோம்.

அதன் பின்னர் இதுதொடர்பில் கடந்த 06.09.2018 அன்று காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் கடந்த 27.09.2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பிக்குமார் தலைமையிலான குழுவினருக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குழப்பங்களை விளைவித்ததாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். அதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை இங்கு பலரும் மீறியுள்ளனர். பெரும்பாலும் தமிழ் மக்கள் பொதுவிடயங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்களை மீறுவதில்லை.எனினும் தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் காணப்படுகின்றன. ஆனால் இங்கே வட இலங்கையிலே நீதிமன்றத் தீர்ப்புக்களை அவமதித்தவர்களுக்கு இவர்கள் என்ன பதிலை வழங்கவுள்ளார்கள்.

குறிப்பாக நீராவியடிப்பிள்ளையார் ஆலய விடயத்தின்போது, பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் முல்லைத்தீவு  நீதிமன்ற கட்டளைகளை மீறியிருந்தார். தற்போது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க உட்பட இராணுவம், காவல்துறையினர் உட்டப பலர் இந்த குருந்தூர் மலை விடயத்தில் நீதிமன்றத் தீர்பினை மீறியுள்ளனர்.

இதற்கு உரியவர்கள் இதற்கு என்ன பதிலை வழங்கப்போகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், படையினர், வெலிஓயா, மகாவலி என பல வழிகளிலும் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளும் சிங்களமயமாக்கல் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றது. இந் நிலையில் தற்போது குருந்தூர் மலை தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் சிங்களமயமாக்கும் செயற்பாடு ஆரம்பித்திருக்கின்றது. எனவே இதை சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வாகவே இதனைப் பார்க்கமுடிகிறது.

தேர்தல் காலங்களிலே அரசிற்கு ஆதரவளிப்பார்கள், அரசோடு இணைந்துள்ளவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர். குறிப்பாக எமது தமிழர்களின் நிலங்கள், ஆறுகள், குளங்கள், கடல் என அனைத்து வளங்களும் சொத்துக்களும் அபகரிக்கப்படுகின்றன.

இதற்கு பன்னாடுகள் என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளார்கள். நிச்சயமாக இந்த விடயத்தில் இந்தியா உட்பட பன்னாடுகள் தலையிட்டு எமது பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *