தாலிபான்களுடன் கடந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் குறித்து, ஜோ பைடன் நிர்வாகம் மறுஆய்வு செய்யும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சல்லிவன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு மே மாதத்திற்குள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது என்றும், தீவிரவாத செயல்களில் தாலிபான்கள் ஈடுபடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தற்போது அங்கு 2 ஆயிரத்து 500 வீரர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் தாலிபான்கள், ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால், வன்முறை மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஒப்பந்தம் குறித்து பைடன் நிர்வாகம் மறுஆய்வு செய்ய உள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சல்லிவன், ஆப்கன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப்-உடன் தொலைபேசி மூலம் பேசியபோது தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும், அதற்கான நடவடிக்கைகளை ஆதரிப்போம் என்றும் ஜாக்சல்லிவன் குறிப்பிட்டார்.