09

09

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கைது !

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கைது செய்யப்பட்டார்.

இவர் இன்றைய தினம் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்துமாறு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நாம் கடந்த 2210 நாட்களாக குறித்த கொட்டகையிலேயே போராடி வருகின்றோம். அந்த கொட்டகைப் பகுதியில் இருந்த மின்சார தூணில் வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

எமக்கான மின்சாரம் மின்சார சபையால் வழங்கப்பட்டிருந்தது. வடமாகாண சபை செயற்பாட்டில் இருக்கும் போதே வழங்கப்பட்டிருந்தது. அதில் பழுதுகள் ஏற்பட்டபோதும் கூட இலங்கை மின்சார சபையினை சேர்ந்தவர்கள் வருகைதந்து அதனை சீரமைத்தும் தந்திருந்தனர்.

இந்நிலையிலேயே எமது சங்கத்தின் தலைவி தற்போது கைதுசெய்துள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாம் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறவில்லை.

எமது போராட்டத்தினை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காசிப்பிள்ளை ஜெயவனிதா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் தனது மகள் உள்ளதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது.” – சீனா

அமெரிக்கா- சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்தநிலையில் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற கின் காங், முதல் முறையாக சீன பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அமெரிக்காவுடனான பிரச்சினை குறித்து அவர் பேசியதாவது:-

அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு மற்றும் ஒலி பாதையில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம். அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற செயல் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும். தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது.

தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது. தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா, சீனாவை ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி – 24 பேர் கைது !

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாதங்களிலும் சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இவ்வாறான நபர்கள் தொடர்பில் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த பொலிஸார் மற்றும் இராணுவம் – நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை!

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரியுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரவேசித்தமை தொடர்பில், இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது அமைச்சு எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதெனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையர்களுக்கு இத்தாலியில் தொழில்வாய்ப்பு!

இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள கோரப்படவுள்ளன.

பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் மற்றும் இலங்கை என்பவற்றின் பணியாளர்களுக்காக 87,702 விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

ஆசிரியர் தாக்கியதால் மாணவன் வைத்தியசாலையில் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை – குறித்த பாடசாலையில் வைத்து ஐ.எம். பஹாரி எனும் ஆசிரியர் தனக்கு பிரம்பால் ஒரு தடவை அடித்ததாகவும், இன்னொரு தடவை தனது ‘சேர்ட் கொலரை’ பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தன்னை தூக்கி வீசியதாகவும் மாணவர் ஹாதிக் தெரிவிக்கின்றார்.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் ஆகியவற்றில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே – மனித உரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறையிட்டதாகவும் மாணவனின் தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) கூறுகின்றனர்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வந்திருந்த மாணவன் ஹாதிக் ஊடகவியலாளருடன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினார்.

சம்பவ நேரத்தில் எனது வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் மேசையில் தலை வைத்து படுத்திருந்தேன். அப்போது பக்கத்து வகுப்பில் இருந்த பஹாரி என்கிற ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து விளையாடிய மாணவர்களுக்கு அடித்தார். அப்போது எனக்கு ஏன் அடிகவில்லை என்று ஒரு மாணவன் கேட்டான். அதனால் பிரம்பால் எனக்கு இரண்டு தடவை ஆசிரியர் அடித்தார்.

பிறகு தகரத்தில் யார் அடித்தது என்று சேர் கேட்டார். அதற்கு இரண்டு மாணவர்களின் பெயரைக் கூறி அவர்கள்தான் என்றேன். அப்போது மீண்டும் என்னை அடிப்பதற்கு ஆசிரியர் வந்தார். அப்போது ஏன் சேர் திரும்ப திரும்ப அடிக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கு ‘அறப்படித்த வாப்பாக்கு மூத்த கதை கதைக்காதே’ என்று கூறிவிட்டு – எனது சேர்ட் கொலரைப் பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தூக்கி வீசினார்.

இதன் காரணமாக தனது கால் அடிபட்டு சதை உடைந்து, முழங்கால் சில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனக்கு நடக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது பாரம்பரிய முறிவு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் ஹாதிக்கின் காலில் ‘பற்று’ போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மூன்றாந் தவணை பரீட்சை ஆரம்பித்துள்ள நிலையில், பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் சென்று – பரீட்சைக்குத் தோற்றி விட்டு, தனது தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) ஆகியோருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஹாதிக் சென்றிருந்தார்.

தனது புத்தகப் பையை பாடசாலையிலேயே – தான் விட்டு வந்ததாகவும், அதனை எடுத்து வருமாறு சிலரை அனுப்பிய போதும், தங்கள் குடும்பத்தவர்கள் வந்தால் மட்டுமே புத்தகப் பையை வழங்க முடியும் என, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கூறியதாகவும் மாணவன் ஹாதிக் தெரிவித்தார். இதனால், பரீட்சைக்காக படித்து தயாராக முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் யு.எல். முபாஹித் கூறுகையில்;

“சம்பவம் நடந்து 06 நாட்களின் பின்னர் எனக்கும் எனது பெரியப்பா மற்றும் அவரின் மகனுக்கும் எதிராக பாடசாலையின் அதிபர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாங்கள் அவரை அச்சுறுத்தியதாக அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது பொய்யான முறைப்பாடு” என்றார்.

“அதிபரின் முறைப்பாடு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸார் எம்மை அழைத்திருந்தார்கள். நாங்கள் சென்றோம். ஆனால் முறைப்பாடு செய்த அதிபர் வரவில்லை. நாங்கள் வாக்குமூலத்தை வழங்கி விட்டு – வந்து விட்டோம்” எனவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட தனது தம்பியான மாணவன் ஹாதிக்கை தனது முச்சக்கர வண்டியிலேயே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, அந்த மாணவனை தான் தாக்கவேயில்லை என்கிறார் ஆசிரியர் பஹாரி.

மாணவன் மற்றும் அவரின் குடும்பத்தாரின் குற்றச்சாட்டு குறித்து ஆசிரியரைத் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் இந்தப் பதிலை வழங்கினார். குறித்த மாணவனின் பக்கத்து வகுப்பில் தான் கற்பித்துக் கொண்டிருந்தாகவும், சம்பந்தப்பட்ட மாணவனின் வகுப்பில் மாணவர்கள் குழப்படி செய்தமையினால் அவர்களை அதிபரிடம் செல்வதற்கு தான் அழைத்த போது, மாணவன் ஹாதிக் தவறான வார்த்தைகளைக் கூறி, முடியாது எனச் சொன்னதாகவும் ஆசிரியர் பஹாரி தெரிவித்தார்.

“இதன் போது அந்த மாணவனின் சேட்டில் எனது விரல் தவறுதலாகப் பட்டதால், அவரின் சேர்ட் பொத்தான்கள் அறுந்து விட்டன. வேறு அவரை நான் தாக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார். ஹாதிக் எனும் மேற்படி மாணவனின் பெரியப்பா மற்றும் அவரின் மகன்மார் இந்தப் பாடசாலை நிர்வாகத்துடன் சில காலங்களுக்கு முன்னர் பிரச்சினைப்பட்டதாகவும், அது குறித்து அவர்களுக்கு எதிராக அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறும் ஆசிரியர் பஹாரி, அதற்குப் பழி வாங்குவதற்கான சந்தர்ப்பமாக தற்போதைய விடயத்தை மாணவன் ஹாதிக்கின் குடும்பத்தினர் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், ஹாதிக் எனும் மாணவனின் பெரியப்பா குடும்பத்தினர் பாடசாலை நிர்வாகத்துடன் பிரச்சினைப்பட்ட சம்பவம் நடக்கும் போது, இந்தப் பாடசாலையில் தான் கடமையாற்றவில்லை என்றும், அதற்கு சில காலத்துக்குப் பின்னரே தான் இந்தப் பாடசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

முதல் நாளிலேயே மூன்று சாதனைகள் – அசத்தலுடன் தொடரை ஆரம்பித்த இலங்கை அணி !

டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரையொட்டி நடைபெற்று வரும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் மூன்று கிரிக்கெட் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நியூசிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் அரைசதத்தை பதிவுசெய்த வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் இன்று தன்வசப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 5980 ஓட்டங்களை பதிவு செய்து கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் நுழைந்தார்.

இது இதுவரை இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச மொத்த ஓட்டமாகும்.

இந்த இரண்டு சாதனைகளைத் தவிர, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7000 ஓட்டங்களைக் கடந்தார்.

இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெத்யூஸ், 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கையின் இந்த சாதனைகளுக்கு மத்தியில், 39 ஓட்டங்களைப் பெற்றிருந்த தினேஷ் சந்திமாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்துக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை டிம் சவுதி தன்வசப்படுத்தினார்.

வடக்கில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்ல தடை !

வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக, வடக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகள் மற்றும் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை 350ஆக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.