யாழ் சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் (39) என்ற கடைக்காரர் ஒருவரின் உடல் மார்ச் 17ம் திகதி லூட்டன் எல்யூ 1 (LU1) என்ற பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டதாக தேசம்நெற்க்கு தெரிய வருகின்றது. தனது கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்தக் கொள்வனவாளர்களிடம் சென்றவர் மார்ச் 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக கொல்லப்பட்டவரின் சகோதரருக்கு நெருக்கமான நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இது பற்றி தேசம்நெற்குத் தெரியவருவதாவது பிரபாகரன் மார்ச் 17 காலம் தாழ்த்தி காலையுணவை முடித்துக்கொண்டு கடைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய, அங்குள்ள மொத்தக் கொள்வனவு நிலையத்துக்கு செல்வதாகக் கூறி வெளிக்கட்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாக வராததினாலும்; தொலைபேசிக்கு பதிலளிக்காததாலும்; மற்றையவர்களுக்கும் தொடர்புகொண்டு விசாரித்தும் பதிலில்லாத நிலையில், அவருடைய மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் பின்னர் இவருடைய தொலைபேசியின் சிக்னலைக்கொண்டு அது இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அன்றைய தினம் இரவு பிரபாகரனின் உடல் தூகிடப்பட்டநிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது என அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
பிரபாகரன் கந்தசாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தவர். யாழ் சாவகச்சேரியில் ஓரளவு வசதியான வர்த்தகக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதர் அதற்கு முன்னரேயே லண்டன் வந்தவர். அவர் கடையை நடத்தி வந்தார். அதன் பின் பிரபாகரனும்; ஒரு கடையை ஆரம்பித்தார். பிரபாகரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு. குடும்பம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்ததாகவும் தற்கொலை செய்வதற்கான எந்தக் காரணமும் குடும்பத்தில் இருக்கவில்லை என்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
பிரபாகரனின் உடல் கண்டெடுப்பதற்கு சிறிது காலம் முன்பாக அவர் கெபாப் (Kebab) உணவகமொன்றுக்கு சென்றிருந்ததாகவும் அங்குள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் பிரபாகரனின கடைக்கு அருகில் கடை நடாத்திவரும் இன்னுமொரு கடைக்காரர் தேசம்நெற்குக்குத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு குறிப்பிடத்தக்க அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு இருந்ததாகவும் அக்கடைக்காரர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தேசம்நெக்கு மேலும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவலும் கிடைத்தது. அதன்படி பிரபாகரன் தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து வழக்கில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இளம் குடும்பஸ்தரான உயிரிழந்த பிரபாகரன், சாவகச்சேரியில் பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுவந்ததாகவும் அவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் தெரியவருகின்றது.
சில ஊடகங்கள் இதனை ஒரு படுகொலை என்று தீர்க்கமானதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன் அப்படுகொலை ஹரோவில் வெறிச்சோடிய பகுதியில் நடைபெற்றதாகவும் ஹெரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.
பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லூட்டன் பொலிஸார் எவ்வித தகவல்களையும் யாருடனும் பரிமாற வேண்டாம் என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகின்றது. பிரேத பரிசோதணையின் பின்னரேயே இம்மரணம் தொடர்பில் வேறு யாரும் தொடர்புபட்டுள்ளனரா என்பதை பொலிஸாரல் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மரணம் தொடர்பில் லூட்டன் பொலிஸார் எவ்வித அறிக்கையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.