‘நினைவேந்தல் உற்சவம்’: தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரோக்கர்களும்!

 

மலையகத் தமிழர்களை அவமானப்படுத்திய யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களும் யாழ் நண்பர்கள் அமைபும் இந்திய தூதரகமும்!!
மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டன அறிக்கையை இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது!!!

நாளை மார்ச் 19 இல் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை நினைவுகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்வு தொடர்பிலேயே இச்சர்ச்சை எழுந்தள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் எழுத்துப் பிழைகள், பொருட் பிழைகளுடன் மலையக மக்களின் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கி அவர்களை ‘இந்தியதமிழர்கள்’ என அழைப்பிதழ் அடையாளப்படுத்தி உள்ளது. இதனை மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதரகத்தின் அணுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வை யாழ் நண்பர்கள் என்கின்றவொரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. யாழ் நண்பர்கள் என்ற பெயரில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அணுசரணையோடு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவரகள்: கலாநிதி சிதம்பரம்போமன், கே கோபாலகிருஸ்ணன், சு கமலதாஸ், கலாநிதி கந்தையா சிவராஜா, இரா ரட்ணேஸ்வரன், யாழ் எப் எம் சமனோகரன்.

200 ஆண்டுகளுக்கு முன்பு மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை ‘நினைவேந்தல் உற்சவம்’ என அழைப்பிதழ் குறிப்பிடப்பட்டிருந்ததையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கடுமையாகக் கண்டித்து இருந்து. ‘நினைவேந்தல்’, ‘உற்சவம்’ போன்ற சொற்களின் விளக்கத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் ‘யாழ் நண்பர்கள்’ என்ற அமைப்பு அழைப்பிதழைத் தயாரித்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம், 200 ஆண்டுகளுக்கு முன் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூருவது எப்படி உற்சவம் கொண்டாட்டமாகும் என்று கேள்வி எழுப்பியதுடன் இது 200 வருடங்களுக்கு முன் உயிரிழந்த மலையக மக்களை மலையகத் தமிழர்களையும் அவர்களது பரம்பரையையும் அவமானப்படுத்தும் செயல் எனக் கண்டித்துள்ளனர்.

200 ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள் பிரித்தானியர்களால் இலங்கைக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக; அவர்களுக்கு பொய்வாக்குறுதிகள் அளித்து; அவர்களை அவர்களது சொந்தபந்தங்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து; அடிமைகளாகக் கொண்டுவந்த நிகழ்வு வரலாற்றின் மிக மோசன நிகழ்வு. அன்று முதல் இன்று வரை அந்த மலையக மக்கள் தேயிலைக் கொழுந்துகளை தங்கள் முதுகில் சுமந்து தங்கள் முதகெலும்பை முறித்து இலங்கையின் பொருளாதாரத்தின் முதகெலும்பாக இருந்தவர்கள். அவர்களுடைய இந்த வலி மிகுந்த வரலாற்றை அது பற்றிய எவ்வித உணர்வும் பொறுப்புமற்ற மனிதர்கள் வெறும் சம்பிர்தாயத்திற்காக செய்ய முற்பட்டதன் விளைவுதான் இது.

இந்நிகழ்வு வலி மிகுந்த மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாற்றை நினைவிற்கொள்ளும் நிகழ்வு. இது நினைவேந்தல் என்ற உயிர்த் தியாகம் அல்ல. இது உற்சவமோ கொண்டாட்டமோ அல்ல.

மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றத்தின் கண்டன அறிக்கை பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களது வேர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுடன் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது; பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்காக இந்தியத் தமிழர் என்று குறிப்பிட்டதை, சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது உத்தியோகபூர்வமாகவும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அம்மக்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்றே அழைக்கின்றனர். அவ்வாறே அவர்கள் அழைக்கப்பட வேண்டும்” என்றும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வறிக்கையில் “ஈழத் தமிழர்கள் என்ற பதம் சனத்தொகைக் கணக்கெடுப்பில் இல்லை. அதில் ஸ்ரீலங்கன் தமிழர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்ளை ஈழத் தமிழர்கள் என்றே அழைக்க விரும்புகின்றனர். அது அவர்களுடைய உரிமை” என்பதையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவ்வறிக்கையில் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சார்பில் பின்வருவோர் கையெழுத்திட்டுள்ளனர்: கலாநிதி எஸ் கெ நவரட்ணராஜா (Senior Lecturer, Engineering, University of Peradeniya), ரி ஜெயானந்தராஜா (Attorney-at-law, Colombo), பி சுந்தரசன்; (Pharmacist, Hong Kong) எஸ் விஜயகுமார் (Attorney-at-law, Ratnapura).

இந்நிகழ்வை சிறுபிள்ளைத்தனமாக ஏற்பாடு செய்த மொழியும் வரலாறும் தெரியாத யாழ் நண்பர்கள் அமைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த லண்டனில் வாழும் அரசியல் விமர்சகரும் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான ஒருவர்: யாழ் நண்பர்கள் அமைப்பில் உள்ளவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரோக்கர்களும்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக் கூட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் பொன் பாலசுந்தரம்பிள்ளை, ந சண்முகலிங்கன் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர். அடுத்தடுத்து வந்த இவர்களுடைய நிர்வாகத்தின் கீழேயே யாழ் பல்கலைக்கழகத்தின் தரம் மிகத் தாழ்ந்து அதன் கடைநிலையை எட்டியதுடன் குறிப்பாக கலைத்துறை விரிவுரையாளர்களின் அந்தப்புரமாக்கப்பட்டது. இவர்கள் விட்டுச்சென்ற துச்சாதனர்கள் இன்றும் கலைத்துறையில் விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். யாழ் சமூகம் சார்ந்த இத்துணை வேந்தர்களோ விரிவுரையாளர்களோ பேராசிரியர்களோ இதுவரை குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அது பற்றிய அறிவும் சிந்தனையும் அவர்களிடம் இல்லை. இவர்கள் மலையக மக்களின் வலி மிகுந்த வரலாற்றை ‘நினைவேந்தல் உற்சவம்’ என்று குறிப்பிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரொக்கர்களும் தான். தமிழர்களின் கல்வி நிலை இவ்வளவுக் வீழ்ந்ததற்குக் காரணம் இவர்கள் உருவாக்கிய பெரும்பாலும் சமூக அக்கறையற்ற இரண்டாம்தர பட்டதாரிகள் தான் வடக்கு கிழக்கின் கல்விக் கட்டமைப்பிலும் ஏனைய கட்டமைப்புகளிலும் உள்ளதுதான்.

இவர்களுடைய இச்செயல் யாழ் சமூகம் பற்றி மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் பற்றியும் தவறான புரிதலை ஏனைய சமூகங்கள் மத்தியில் விதைக்கின்றது.

தங்களுடைய அரசியல் அபிலாசைகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற ஈழத்தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் பொறுப்புடன் செவிமடுத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். வடமாகாணத்தில் தற்போது கணிசமான நாற்பது வீதமான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் வட மாகாணத்தில் இன்னமும் அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பூஜ்ஜிமாகவே உள்ளது. இந்திய அரசுக்கோ இந்திய தூரகத்திற்கோ தங்களுடைய நாட்டில் வாழும் மக்கள் மீது என்ன கரிசனை உள்ளது என்பதை யாரும் விளக்கத் தேவையில்லை. ஆகவே அவர்கள் மலையகத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைக்க முற்படுவது ஒன்றும் அம்மக்கள் மீது உள்ள கரிசனையினால் அல்ல. சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈழத் தமிழர்களை பயன்படுத்தியது போல் மலையகத் தமிழர்களையும் தன்னுடைய முதலாளித்துவ நலன்களைப்பாதுகாப்பதற்கு பயன்படுத்தவே.

இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பு மிகத் தீவிரமாகி வருகின்றது. அதற்கான புரோக்கர்களையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். ஈழத்தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள், சிங்களவர்கள் நாம் அனைவருமே இலங்கை மக்களாக இருப்பது மட்டுமே எம் அனைவருக்கும் பாதுகாப்பு.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *