02

02

அமெரிக்காவிலும் tick-tock செயலிக்கு தடை ?

இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசின் மின்னணு சாதனங்களிலும் டிக்-டாக் செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் இந்த செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை முழுமையாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் டிக்-டாக் செயலியை தடை செய்வதற்கான முழு அதிகாரம் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

தொழில் தேடும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்குமான ‘தொழிற் சந்தை 2023’ !

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் முதற்தடவையாக ‘தொழிற் சந்தை 2023’ (‘Career Fair 2023’) நாளை வெள்ளிக்கிழமையன்று(03) கலைப்பீடத்தில் நடைபெறவுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியிலான ‘மேன்மைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி ஊடாக உயர்கல்வியைத் துரித வளர்ச்சிக்குட்படுத்துதல்’ திட்டத்தின் உதவியில் இத்தொழிற்சந்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளவிய ரீதியில் 85இற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கும் இத்தொழிற்சந்தையில் அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், சபைகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

‘தொழிற் சந்தை 2023’இன் தொடக்கவிழாவில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைக்கின்றார்.

காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில், கலைப்பீடத்தில் நான்காம் வருடம் மற்றும் மூன்றாம் வருட சிறப்புக்கலை மற்றும் பொதுக்கலை பயிலும் மாணவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை, பொதுக்கலைப் பட்டங்கள் பெற்று, வேலைவாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளும் நேரடிப் பயனாளிகளாக இணைந்துகொள்ளவிருக்கின்றனர்.

தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளலை குறைத்துக்கொண்ட இலங்கையின் பாதி குடும்பங்கள்!

இலங்கையில் பாதியளவான குடும்பங்கள், குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துள்ளதாக சேவ் தெ சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும், உலக சமூகமும் செயல்பட வேண்டும் என சேவ் தெ சில்ரன் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மக்கள் பசி, மோசமான வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அவர்களின் துன்பத்தைப் போக்க சர்வதேச கடன் வழங்குனர்கள் இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்க வேண்டும் எனஏற்கனவே சர்வதேச மன்னிப்புச்சபை கோரியிருந்த நிலையில், சேவ் தெ சில்ரனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஒரு முழு அளவிலான பசி நெருக்கடியாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள குடும்பங்களில் பாதி பேர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என குழந்தை உரிமைகள் தொண்டு நிறுவனமான சேவ் தெ சில்ரன் கூறுகிறது.

இலங்கையில் பாதி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 27 சதவீதத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பெரியவர்கள் உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.

10 குடும்பங்களில் ஒன்பது பேர் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர் எனவும் சேவ் தெ சில்ரன் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த ஆலய கட்டுமானம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு !

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த ஆலய கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத கட்டுமானம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் 30.03.2023 அன்று இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்க்கனவே இருந்த AR/673/18 வழக்கு இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் இணைத்து நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜாவால் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணைகளை 30.03.2023 அன்று மீளவும் விசாரணை மேற்கொள்வதற்கு தவணையிட்டுள்ளார். இதன் போது, முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட் பிரசாந் ஆகியோர் இன்று வழக்கு தொடுநர்கள் சார்பில் முன்னிலையாகினர்.

இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.தனஞ்சயன், சுபா விதுரன், ருஜிக்க நித்தியானந்தராஜா உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் ஆறுபேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.  சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கேட்டறிந்த பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

 

“முட்டாள்களை கூட வைத்திருந்ததால் தான் கோட்டாபய வீழ்ந்தார். ரணிலும் அதையே செய்கிறார்.” – இரா.சாணக்கியன்

“முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்தே கோட்டாபய பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வட்டாரங்கள் மேற்கொள்ளவேண்டிய பிரசார செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்;  மக்கள் தேர்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஒரு தேர்தல் நடந்தால்தான் அது ஜனநாயக நாடு என்று ஏற்றுக்கொள்ளப்படும். அதன்மூலம் தான் எமது அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடிய சூழல் ஏற்படும். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கு எமது கருத்துகளை பதிவுசெய்வதற்கு தயாராகவுள்ளோம். தேர்தலுக்காக மக்கள் வீதியிலிறங்கி போராடவும் தயாராகவுள்ளனர்.

ஜனாதிபதி அண்மையில் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அத்தியாசிய சேவையாக சிலவற்றை அறிவித்துள்ளார். கழிவு நீர்வெளியேற்றப்படும் கால்வாய், வோக்குகள் கூட இந்த வர்த்தமானியில் வந்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஓடி ஒழிப்பதற்காக இந்த வோக்குகளை அத்தியாவசிய சேவையாக அறித்துள்ளாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் கல்லடி பாலத்தில் கறுப்பு சுதந்திர தின போராட்டம் நடாத்திய பின்னர் இன்று பாலங்களும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும்.அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள் இந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் சிலவேளைகளில் தேவைப்படாது, சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்துள்ளார்கள். அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தேவைப்படாது என கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினை காட்டி காட்டி மக்களை ஏமாற்றுவதுடன் தேர்தலையும் பிற்போட்டு பொருளாதாரத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரானால் அவரை யாரோ ஏமாற்றுகின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ஸ அவர்களையும் இவ்வாறான பொய்களை கூறியே ஏமாற்றினார்கள். கோட்டாபய ராஜபக்ஸ சேதன பசளை ஊடாக நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்று கூறினார். ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முட்டாள் ஒருவரும் மில்லியனர் பில்லியனர் உருவாகபோகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

அவ்வாறான முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்துதான் கோத்தபாய அவர்கள் பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேர்தல் நடாத்ததேவையில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம், சர்வதேச நாடுகளின் உதவி தேவையில்லையென்றால் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வரும்.

வித்தியாசம் என்னவென்றால் ரணில் விக்ரமசிங்க என்பவர் தனி நபர். கோட்டாபயவினை சுற்றி மொட்டு கட்சி என்ற ஒரு பாராளுமன்றமே சுற்றியிருந்தும் அவர் நாட்டைவிட்டு தப்பியோடவேண்டிய ஒரு சூழல்வந்தது. ஜனாதிபதி தனியொருவராகயிருப்பதன் காரணமாக அவர் அத்தியாவசிய சேவையாக அறிவித்த வோக்குக்குள்ளேயே ஒழிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

வியட்நாம் அகதி முகாமிலுள்ள 20 பேர் இலங்கை திரும்ப விருப்பம்!

சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அன்றாட தேவைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு திரும்பி வர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் , அகதிகளுக்கான சர்வதேச அமைப்பினூடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம், இந்த விடயம் குறித்து UNHCR மற்றும் IOM ஆகிய இரண்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – Tiktok அறிவிப்பு!

18 வயதுக்குட்பட்ட TikTok உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே TikTok கை பயன்படுத்த முடியும்

அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று TikTok தெரிவித்துள்ளது.

லாவோஸில் இடம்பெற்ற இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் தொடர்பில் முறைப்பாடு!

தென்கிழக்காசிய நாடான – லாவோஸில் இடம்பெற்றாக கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு நேற்று (1) வரை 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தாய்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக பொய்யான உத்தரவாதத்தின் பேரில் இலங்கை இளைஞர்கள் பலர் லாவோஸில் சிக்கியுள்ளமை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே பணியகத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ருவன் பத்திரன மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உள்ளூராட்சி வேட்பாளர் அனுர சேனாரத்ன ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தென் மாகாணத்தில் உள்ள இளைஞர்களால் செய்யப்பட்டுள்ளன.

ஒரு சிலரைத் தவிர, எஞ்சிய இலங்கையர்கள் இன்னும் லாவோஸில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் இதற்கு முன்னர் நான்கு இளம் பெண்களையும் ஒரு இளைஞனையும் முதலில் தாய்லாந்துக்கும் பின்னர் லாவோஸுக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக அவர்கள், சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து தலா 5,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளனர். எனினும் இந்த இளைஞர்களின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை.

எதிர்வரும் நாட்களில் இந்தியாவிற்கு 8 ரிச்டர் அளவிலான நிலநடுக்க அபாயம் – கொழும்பு வரை பாதிப்பு !

இந்தியாவின் வடபகுதியை சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவில் ஏற்படும் பாரிய நடுக்கம் கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

பொதுவாக நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது, ஆனால் அவை ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் விளைவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண முடியும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் பாதிப்புகள் திருகோணமலை, மனம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய, அம்பலாந்தோட்டை, உஸ்ஸங்கொடை வரை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய தட்டுக்கு அருகில் இலங்கை அமைந்திருப்பதால், அந்த தட்டில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கையையும் பாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.