இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் இன்றைய தினம் நீதிபதி வருகைதராமையினால் குறித்த வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டது. விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சரணடைந்த குடும்ப அங்கத்தவர்கள் சார்பில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுமீதான தீர்ப்பினை வவுனியா மேல்நீதிமன்றம் கடந்தமாதம் வழங்கியது. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதில் மன்று திருப்தியடைந்தது.
எனவே அத்தகைய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதுடன், அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை நீதிமன்றில் இன்றைய தினம் விளக்கமளிக்குமாறும் வழக்கு திகதியிடப்பட்டது.
எனினும் இன்றைய தினம் நீதிபதி மன்றுக்கு சமூகமளிக்காமையினால் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தினம் இராணுவம் சார்பாக சட்டத்தரணி ஒருவரே மன்றுக்கு சமூகமாகியிருந்ததுடன், வேறு எவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.