29

29

ஆப்கானிஸ்தானில் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் – 700 குழந்தைகள் வரை உயிரிழப்பு !

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்தனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோகத் துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் காதல் – 15 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை !

வட்ஸ் அப்  மூலம் ஏற்பட்ட நட்பினால் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வட்ஸ் அப் மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  சிறிது காலம் மேற்படி வட்ஸ் அப் காதல் நீடித்துள்ளது.

அண்மையில் மேற்படி சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த அம்பலாந்தோட்டை நபர் சிறுமியை ஏமாற்றி  கண்டி கெட்டம்பே பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அந்நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 10 பேர் கைது !

யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு மற்றும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மாவட்ட குற்றதடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருவமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கொழும்பில் இடம்பெற்ற விசேட கூட்டம் !

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து – நெடுந்தீவில் போராட்டம்!

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை)  போராட்டத்தில் ஈடுபட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 150கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் நேற்றிரவு இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை – NDDCB அறிக்கை பகீர் !

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 67,900 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிக்கிறது என்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 52% பேர் ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 37% பேர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று NDDCB இன் இயக்குநர் ஜெனரல் பத்ராணி சேனாநாயக்க தெரிவித்தார்.

எட்டு மாத காலப்பகுதியில் மொத்தம் 6,728 நபர்கள் ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ஆகியவற்றின் கணிசமான அளவு பயன்பாடு மற்றும் பரவல் காணப்படுகிறது . எனினும் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்க போதிய வசதிகள் இல்லாதது வருத்தத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் குறைந்தது 100,000 பெரும் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள்
சுமார் 350,000 இருந்த போதிலும் அவர்களில் 4000 பேர் மட்டுமே சிகிச்சை மற்றும் புனர்வாழ்விற்காக வருகை தருவதாக அவர் மேலும் கூறினார்.

“போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்தினாலும், போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிறுவனங்களில் வசதிகள் போதுமானதாக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்!

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளை புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்களையும் தலைவர்களையும் பாதுகாக்க இந்தியாவில் வலுவான சட்டங்கள் இருப்பதாகவும், இலங்கையிலும் அத்தகைய சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்கள் மற்றும் தலைவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்டு, இந்த நாட்டை அழித்தவர்கள் மற்றும் நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான எதையும் செய்யாதவர்கள் முன்னிலைப்படுத்தப்படும் நிலை இலங்கையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசியத் தலைவர்களை திருடர்கள் என முத்திரை குத்துபவர்கள் தோல்வியடைந்தவர்கள், இது வருந்தத்தக்க நிலை, நாட்டின் மோசமான நிலை, இதே நிலை நீடித்தால் முற்போக்குவாதிகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்றார்.

ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுடன் குறைவடைகிறது எரிபொருள் விலை – போக்குவரத்து கட்டணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் !

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

இதேவேளை நாளை (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் 35 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாகவே பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று முதல் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் (AITWDU) தீர்மானித்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.100 ஆகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.80 ஆகவும் வசூலிக்கப்படும். குறித்த அறிவிப்பின் பிரகாரம் கட்டணத்தை குறைக்குமாறு மீற்றர் டாக்சி சாரதிகளிடம் சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, தமது வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் மின்வலு எரிசக்தி அமைச்சரிடம் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது . பலமுறை கோரிக்கை விடுத்தும், அமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான தீர்மானத்துடன், வாடகை வண்டி கட்டணத்தை குறைத்து நுகர்வோருக்கு அந்த சலுகையை வழங்க முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளதாக தர்மசேகர தெரிவித்தார்.

முன்னதாக, முதல் கிலோமீற்றருக்கு முச்சக்கர வண்டி கட்டணம் ரூ. 120 மற்றும் ரூ. இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.