“எந்த வகையான நாசகார செயற்பாடுகளை செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்;;
உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் திடீர் வரிநீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானதாகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள அமுல்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் தொடரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, சீன எக்சிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே IMF ற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி , எந்த வகையான நாசகார செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்றொரு ஜூலை 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று கோரியதோடு நாட்டை சீர்குலைப்பதை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் முப்படை மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம் என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.