03

03

20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள முக்கிய விடயங்கள் இதோ..! (தமிழ்)

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (03.09.2020) வெளியிடப்பட்டது.

அதில் அடங்கியுள்ள சில விடயங்கள் இதோ…

19 ஆவது அரசியலமைப்பில் எஞ்சிய சில விடயங்கள்.

தகவல் அறியும் உரிமை

ஜனாதிபதிக்கு இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் ஆயுட் காலம் 5 வருடங்களாகும்.

மேற்குறித்த விடயங்கள் மாத்திரம் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சபை நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையும் நீக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் மற்றும் நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர், ஒம்புட்ஸ்மென் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

19 ஆம் திருத்தத்திற்கமைய நான்கரை வருடங்களில் பாராளுமன்ற காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

ஆனால் புதிய திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

மேலும் அமைச்சர்கள் நியமனத்தின் போது பிரதமரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40 க்கு மேல் அதிகரிக்க கூடாது என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளது.

19 ஆவது அரசியல் அமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற சரத்து 20 ஆவது அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை நீக்கவும், அவர்களுக்குள்ள விடயதானங்களை தன்னிடம் வைத்துக்கொள்ள முடியும்.

ஜனாதிபதிக்கு குறித்த ஒரு விடயதானத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் தன் வசம் வைத்துக்கொள்வதற்கான இயலுமை உள்ளது.

ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்பதோடு அதில் ஒருவரை தலைவராக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.

முழுமையானதை வாசிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

474670316-20th-Amendment-Gazetted-Tamil (1)

எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ளது ! – டக்ளஸ் தேவானந்தா

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருவரும் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று வடக்கு கிழக்கு மக்களும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலாபலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என்பதை வலியுறுத்தியதுடன் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நியமனங்கள் சில காரணங்களுக்காக தற்போது வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் விரைவில் வழங்கி வைக்கப்படும் எனவும், குறித்த பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்! – ஆம்னெஸ்டி அறிக்கை.

உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் பலியாகி உள்ளனர். அனைத்து அரசாங்கங்களும் சுகாதாரப் பணியாளர்களைக் கதாநாயகர்கள் என்று பாராட்டியுள்ளன. ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டன” என்று தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால்,கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு வெளியீடு !

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற நிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டடுள்ளது.

குறித்த சட்டமூல வரைபு இன்று (03.09.2020) காலை அரச அச்சகத் திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல பத்திரம் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் வர்த்தமானியில் வெளியிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

19ஆவது திருத்தச் சட்டத்தில் பிரதான விடயங்களாகக் காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்றும் விதிக்கப்பட்டது. அத்துடன் தகவலறியும் உரிமைச் சட்டம் வலுப்படுத்தப்பட்டது.

இவ்விடயங்களை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் முழுமையாகச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதற்கு அமைய அவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் இறுதிக்குள் அதனை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சீனாவின் முக்கியச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் – சீன வணிகத்துறை அமைச்சகம்

சீனாவின் முக்கியச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பதற்கு அந்நாடு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வணிகத்துறை அமைச்சகம் தரப்பில், “சீனாவின் முக்கியச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். சீன முதலீட்டாளர்களின் சேவையை இது பாதிக்கின்றது. இந்தியா தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். சீனா தரப்பிலும் சேதம் ஏற்பட்டது.

சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்குப் பதிலடியாக கடந்த ஜூன் 29-ம் தேதி டிக் டாக், யூசிபிரவுசர், ஷேர் இட், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட சீனாவின் 59 ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் பப்ஜி உள்பட சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதித்து இந்தியா உத்தரவிட்டது.

இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் விதமாக இந்தச் செயலிகள் இருந்ததால் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனா தற்போது இந்தியாவின் நடவடிகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயலாற்றுகின்றன ! –

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

இந்நிலையில் 76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயலாற்றுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஒருமித்த தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ‘கோவாக்ஸ்’ பரிசோதனை எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோவாக்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மூன்றாம் கட்ட சோதனைக்கு பிறகு வெற்றியடைந்தால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து குறைந்த விலைக்கு விற்கப்படும்.

மேலும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்ட நாடுகளுக்கு இலவசமாக இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

76 நாடுகளின் தலைசிறந்த நோய்த்தொற்று விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது நல்ல பலன் அளிக்கும் என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜப்பான், ஜேர்மனி, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தடுப்பு மருந்து பரிசோதனைக்கு நிதி அளித்து வருகின்றன.

76 நாடுகள் பட்டியலில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து தெரிவித்து வருவதால், அமெரிக்கா இந்த நாடுகளுடன் ஒன்றிணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொகாகோலா நிறுவனம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து ரூபாய் 50 மில்லியன் பெறுமதியிலான 16,800 பீ.சீ.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் 17,000 VTM வழங்கி வைப்பு !

கொகா கோலா நிறுவனம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து 16,800 பீ.சீ.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் 17,000 VTM ஆகியவற்றை பிரதமரிடம் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு இன்று (2020.09.03) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் 6 வைத்தியசாலைகளுக்கு இந்த பரிசோதனை கருவிகள் வழங்கப்படவுள்ளன. இந்த கருவிகளின் பெறுமதி ரூபாய் 50 மில்லியன் ஆகும்.

கொக்க கோலா நிறுவனம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து கொவிட்-19 தொற்றாளர்களுக்காக இதுவரை ரூபாய் 130 மில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் மஹேஷ் குணசேகர, கொகா கோலா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் லக்ஷான் மதுரசிங்க, முகாமைத்துவ பணிப்பாளர் மயன்க் அரோரா, இந்திய மற்றும் தெற்காசிய பிராந்திய முகாமைத்துவ பணிப்பாளர் பங்கஜ் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

கிழமையின் ஒவ்வொரு புதனையும் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக ஒதுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை !

நாட்டுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் தத்தமது அலுவலகங்களிலேயே இருக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் வேறு வேலைகளுக்காகச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சரவை உபகுழுவின் பணிகள் உள்ளடங்கலாக தினமும் பல்வேறு வேலைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்தே மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதற்காக நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இனிவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்களின் முறைப்பாடுகளைக் கேட்டறிவதற்கு ஒதுக்கப்படுவதுடன் அன்றைய தினம் அமைச்சர்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச உத்தியோகஸ்தர்களும் தத்தமது அலுவலகங்களில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்! – சுமந்திரன்

19ஆவது திருத்தத்தை ஒழித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்க்குமென கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாங்கள் 19ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதனை ஒழிக்க முயல்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் தனது அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்.

19ஆவது திருத்தத்தை அகற்றுவது நாட்டை மோசமான ஜனநாயக பாதையிலே கொண்டு செல்லும் வழி . இது நாட்டுக்கு கேடு, ஜனநாயக விரோதச்செயல், இதை நாங்கள் எதிர்ப்போம் என்பதை அரசுக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்னமும் ஏழு தீவிரவாத குழுக்கள் செயற்படுகின்றன ! – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இஸ்லாமிய மதகுரு தெரிவிப்பு.

உயிரித்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் சில குழுக்கள் தொடர்ந்தும் இஸ்லாமிய தீவிரவாத சொற்பொழிவுகளை நடாத்தி வருவதாக இஸ்லாமிய மதகுரு ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (02.09.2020) சாட்சியம் அளித்துள்ளார்.

தாக்குதலுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமே தடை விதித்திருந்தாலும், மேலும் ஏழு தீவிரவாத அமைப்புகள் நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் சாட்சியமளித்தார்.

அந்த இஸ்லாமிய மத குருவின் பெயர் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

ஆணைக்குழுவில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், தான் நாட்டில் ஒரு பாரம்பரிய முஸ்லிம் என்றும், வஹாபிசத்திற்கு எதிராக சொற்பொழிவுகளை நடத்துவதால் வஹாபிசவாதிகளால் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் கூறினார். 1991 ஆம் ஆண்டில், தான் புனித மக்காவிற்று சென்ற போது விமானத்தில் தன்னுடன் பயணித்த முஸ்லிம்களுக்கு பாரம்பரிய இஸ்லாமிய போதனைகள் குறித்து தெளிவுப்படுத்தியதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஒரு குழு கூர்மையான ஆயுதங்களால் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரித்தார்.

அதேபோல், 1994 ஆம் ஆண்டில் தவடகஹ பள்ளிவாசலில் பிரசங்கித்த போது வஹாபிகள் குழுவினரால் தாக்கப்பட்டதாக கூறிய அவர், மேலும் தான் அக்கரைப்பற்று பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் கூறினார்.

மேலும் சாட்சியமளித்த அவர், குர்-ஆனில் இஸ்லாத்தின் ஆரம்பகால போதனைகளில், முஸ்லிம் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதில் நேரடி சட்டம் ஒன்று இல்லை என்றும், ஆனால் சில முஸ்லிம் பெண்கள் தமது கௌரவத்தை பாதுகாக்க மட்டுமே அதனை அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் பிற்காலத்தில் பாரம்பரிய முஸ்லிம் பெண்கள் தமது தலையை மறைக்க ஆசைப்பட்டாலும், தற்போது முகத்தை முழுவதுமாக மூடி, உடலை முழுவதுமாக கருப்பு உடையால் மூடுவதானது முற்றிலும் தீவிரவாத கொள்ளைகளுக்கு உட்பட்டது எனவும் கூறினார்.

இதன்போது அமைச்சின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினருமான ஒரு பிரதநிதி பேருவளையில் உள்ள ஜமியா நலிமியா என்ற பல்கலைக்கழகத்தைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?  என விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு நன்கு தெரியும் என்றும் அதேபோல் அந்த கல்வி நிறுவனத்தில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரான போதனைகள் அங்கு இடம்பெறுவதாகவும் கூறினார்.

இதன்போது ஆணைக்குழுத் தலைவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரும் நாட்டில் தீவிரவாத உரைகள் நடைபெறுகிறதா? வினவினார்.

இதற்கு பதிலளித்த அவர், பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், சில குழுக்கள் இன்னும் தீவிரவாத பிரசங்கங்களை நடத்தி வருவதாகவும், அவர்கள் வஹாபி சித்தாந்தங்களை நாட்டில் பரப்புவதாகவும் கூறினார்.

வஹாபிசத்தை பரப்புவதற்கு சவூதி அரேபியாவிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கம் அது குறித்து கவனஞ்செலுத்துவதால் வேறு வழிகளில் அந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த மதகுரு கூறினார்.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டிலிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான வாய்ப்பு இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பிழையான முடிவால் அது சாத்தியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டில் ஒன்பது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வந்தாகவும், முன்னாள் ஜனாதிபதி அவற்றில் இரண்டை மட்டுமே தடை செய்துள்ளதாகவும், மற்ற ஏழு குழுக்கள் இப்போதும் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

தவ்ஹீத் ஜமாத், தப்லீ ஜமாஅத், சலாபிகள் மற்றும் குரா சபா போன்ற குழுக்களும் இன்னும் தீவிரவாதத்தை பரப்புகின்றன என்று அவர் மேலும் கூறினார்.