16

16

“ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை ” – ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ்

முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொது விவாதத்தின்போது ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் நேற்று (15.9.2020) அளித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட்டின் கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஒரு முழுமையான ஜனநாயக வழிமுறையைத் தொடர்ந்து விவாதிக்கப்படும். அங்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும், இவ்வாண்டு பெப்ரவரியில் இலங்கையானது முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியதால் புதிய அரசாங்கம் ஐ.நா. சபைக்கு அளித்த உத்தரவாதங்கள் குறித்து உறுதியுடன் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, “சட்டவிரோத கொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட மன்னிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் முக்கிய சிவில் திணைக்களங்களில் நியமிக்கப்படுதல் போன்றவை குறித்தும் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மூத்த இராணுவ அதிகாரிகள் அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு எதிராக பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக  இதுகுறித்து தயானி மெண்டிஸ் பதிலளித்துள்ளார்.

எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையுடன் பின்னர் பிணை!

நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாகி திலீபனுக்கு நினைகூரல் நிகழ்வு நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அவருடன் கைதுசெய்யப்பட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

“உங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு கிடைக்கவில்லை என்று மன்றுரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்தவர். அவ்வாறு இருக்கையில் இந்த விபரத்தை அறிந்திருக்காமல் இருக்கமுடியாது.

சட்டத்தின் படியே நீதிமன்றக் கட்டளைகள் இயற்றப்படுகின்றன. அது எல்லோருக்கும் சமம். இனி இவ்வாறு நடக்கக்கூடாது” என்று யாழப்பாணம் நீதவான் ஏ.பீற்றர் போல் பிணைக் கட்டளை வழங்கினார்.

தடையை நீக்கியது நீதிமன்றம் – நாளை இடம்பெறுகின்றது வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் !

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

நெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க கோரி,  வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை தள்ளுபடி செய்த மன்று, ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கியதுடன், ஆலய நிர்வாகத்திற்கு இடையூறோ, அச்சுறுத்தலோ விடுக்க கூடாது எனவும் பொலிசாருக்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது.

இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்று மாலை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தனர்.

குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும், அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.

இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் ஆலயத்திற்கு செல்வதற்கும் வழிபடுவதற்கும் தடை விதிக்க முடியாது என கூறி வழக்கினை மன்று தள்ளுபடி செய்துள்ளது.

”கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்” – ஜனாதிபதி  டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்றுடன்  2 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி  டிரம்ப் கூறும்போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.

நவம்பர் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று ஜனாதிபதி  டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும். ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம்.

இவ்வாறு ஜனாதிபதி  டிரம்ப் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடி 15 லட்சமாக அதிகரிப்பு!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடி 15 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 680 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 576 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
அமெரிக்கா – 40,61,873
இந்தியா – 38,59,339
பிரேசில் – 36,71,128
ரஷியா – 8,84,305
கொலம்பியா – 6,07,978
தென் ஆப்ரிக்கா – 5,83,126
பெரு – 5,80,753
மெக்சிகோ – 4,75,795

வலுக்கும் சீன – அமெரிக்கப்பகை ! – 05 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் தடை.

வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், கொரோனா வைரஸ் தற்போது டிக் டாக் செயலி என அமெரிக்கா- சீனா இடையிலான மோதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

இந்த சூழலில் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீனா அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

எனவே ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையின் மூலமாக அமெரிக்க வினியோக சங்கிலிகளில் சட்ட விரோத, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் நடைமுறைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் – இஸ்ரேல் – பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஆபிரகாம் உடன்படிக்கை ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்து !

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  குறிப்பாக அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. ஆனாலும், இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்தே வந்தது.
அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான மோதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் முடிவுக்கு வந்தது.இரு நாடுகளும் இடையேயும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட அரபு நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலை தனிநாடாக அமீரகம் அங்கீகரித்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயும் நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயும் தூதரக உறவுகளை மேற்கொள்ளவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு டிரம்ப் நிர்வாகத்தின் மிகப்பெரிய வெற்றியாக கருத்தப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டதையடுத்து தனது நாட்டின் வான் எல்லைப்பரப்பு வழியாக இஸ்ரேல்-அமீரகம் இடையேயான விமான போக்குவரத்து நடைபெற சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாடுகள் அனுமதி அளித்தன.
இதனால், சவுதி மற்றும் பஹ்ரைனும் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளலாம் என கருத்துக்கள் நிலவி வந்தன.  இதையடுத்து, சில நாட்களில் இஸ்ரேலை அங்கீகரித்து அந்நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள பஹ்ரைன் நாடு சம்மதம் தெரிவித்தது. மேலும், இஸ்ரேலில் தூதரகம் திறக்கவும், இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்தம் உடன்படிக்கை செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தது மத்திய கிழக்கு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் – இஸ்ரேல் – பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கை நேற்று (செப்டம்பர் 15) அமெரிக்காவில் கையெழுத்தானது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் வெள்ளைமாளிகையில் வைத்து இந்த வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலவி வரும் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான மோதலில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபிரகாம் உடன்படிக்கையின் மூலம் எகிப்து (1979), ஜோர்டான் (1994) ஆகிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்ட அரபு நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (2020) மற்றும் பஹ்ரைன் (2020) இணைந்துள்ளது. இதனால் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டுள்ள அரபு நாடுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையைில் ட்ரம்ப்பிற்கு மத்திய கிழக்கில் கிடைத்துள்ள இந்த வெற்றியானது அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை பல படிகள் முன்நகர்த்தியுள்ளதுடன் அவருக்கான ஆதரவுத்தளத்தையும் அதிகரித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கில் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அவருடைய பெயர் சமாதானத்துக்கான நோபல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமாகவிருக்க ட்ரம்பின் இந்த சமாதான நடவடிக்கைகள் யாவுமே தேர்தலுக்கான முகமூடிகள் என எதிர்கட்சியினர் குற்றம் நாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.

போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்வுகள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நாட்டுவதற்கும் நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

நிர்மாணப் பணிகளுக்கு தடைகள் மற்றும் தாமதங்கள் எந்த வகையிலும் ஏற்படுவதற்கு இடம் வைக்கக்கூடாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். வீதி நிர்மாணப் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கத்தினதும் ஒப்பந்தக்கார்கள் இருதரப்பினர்களினாலும் நடைபெற வேண்டும்.

உப ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்காது இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள், சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

”மாகாண சபைகள் நீக்கம் பற்றி பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளிவரும் தகவல்களில் எந்த வித உண்மையும் கிடையாது” – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மாகாண சபைகள் கலைக்கப்படுமானால் அதன் அதிகாரங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளிவரும் தகவல்களில் எந்த வித உண்மையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அவ்வாறான கூற்றை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்ததாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தாகவும் அவ்வாறு எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது ‘மாகாண சபைகள் கலைக்கப்படுமானால் அதன் அதிகாரங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்’ போன்ற ஒரு தகவலை பசில் ராஜபக்ச தெரிவித்ததாக 14ஆம் திகதி திங்கட்கிழமை தினசரி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ச அவ்வாறு எதையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் ஜனநாயக மறுப்பு செயற்பாட்டுக்கு எதிராக அணி திரள தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு கூட்டமைப்பு அழைப்பு !

வடகிழக்கு மாகாணங்களில் புதிய அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிா்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து இந்த தீா்மானம் எடுக்கப்படும் என அறிவித்திருக்கின்றது.

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட வடகிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசாங்கம் பொலிஸாாின் ஊடாக செயற்படுத்தும் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகள் குறித்து நேற்று (15.09.2020) பிற்பகல் நல்லுாா் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.

குறித்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது,

கலந்துரையாடலில் மாவை சோ.சேனாதிராஜா, த.சித்தாா்த்தன், சீ.வி.கே.சிவஞானம், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் பா.கஜதீபன், எஸ்.ஈசன், விந்தன் கனகரட்ணம், எஸ்.வேந்தன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டிருந்தனா்.