11

11

சிமன்ஸ் அதிரடியால் ,கரீபியர் பிரிமீயர் லீக் 2020 சம்பியனானது போலார்ட்டின் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் ! –

ஐ.பி.எல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.
இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று கரீபியன் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி ர்டினிடெட் நகரில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணி டிரிபாகோ நைட்ரைடர்ஸ் எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில்  வென்ற டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, செயின்ட் லூசியா சாக்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கார்ன்வெல் மற்றும் மார்க் டியல் களமிறங்கினர். கார்ன்வெல் 8 ஓட்டங்களிலும் மார்க் டியல் 29 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஆன்ரே பிளட்சர் அதிகபட்சமாக 39ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால், டிரிபாகோ அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக செயின்ட் லூசியா சாக்ஸ் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
டிரிபாகோ அணியின் கேப்டனும் பந்துவீச்சாளருமான கேரன் போலாட்டு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணியின் சிமன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெப்ஸ்டர் 5 ஓட்டங்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டிம் செய்ஃப்ரிட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய டெரன் பிராவோ, சிமன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் எதிர் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த சிறப்பான ஆட்டத்தால் 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 157ஓட்டங்களை எட்டியது.
இதனால் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிராபாகோ நைட் ரைடர்ஸ் அணி கரீபியன் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.
டிராபாகோ அணியின் சிமன்ஸ் 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 84 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அதேபோல் டேரன் பிராவோவும் 47 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த டிராபாகோ அணியின் சிமன்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அந்த அணியின் கேப்டன் கேரன் போலாடுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

கொரோனா அபாயத்தால் தொடரும் பொருளாதார நெருக்கடிகள் ! – மூன்றாவது நாளாகவும் ஆர்ஜென்டீனாவில் போராட்டம்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு என்பவற்றால் உலகின் பல நாடுகளிலும் பொருளாதார பின்னடைவுகள் வேகமாக ஏற்பட ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் ஊதிய உயர்வு, பணியின் போது கொரோனா பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அர்ஜென்டினாவில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ப்யூனஸ் அயர்ஸ் மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களில் சீருடையுடன் போலீசார் இப்போராட்டங்களில் பங்கேற்றனர். தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார், தங்களுக்கு 56 சதவிகித ஊதிய உயர்வு அளிக்குமாறு அரசை வலியுறுத்தினர். மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் போது, போதுமான மருத்துவ பாதுகாப்பை அளிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். கடந்த 2018ம் ஆண்டு முதல் மிகப்பெரிய பொருளாதார இழப்புக்களை எதிர்கொண்டு வரும் அர்ஜென்டினா, தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூடுதல் பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறது.

”சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும்” – பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து , கொரோனா பரவலைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் 6 பேருக்கு மேல் கூடினால்  அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளைக்‍ கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நண்பர்கள், குடும்ப சந்திப்புகளில் 6 பேருக்கு மேல் கூடினால் தொடக்கத்தில் 9 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அடுத்தடுத்து இந்த விதிகளை மீறினால் 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், அலுவலகங்கள், கொரோனா விழிப்புணர்வுடன் நடக்கும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பெலாரஸ் எதிர்ப்பு போராட்ட தலைவர் குற்றச்சாட்டு!

பெலாரஸ் எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உக்ரேனுக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் எனது தலைக்கு மேல் ஒரு பையை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வியாழக்கிழமை அவரது வழக்கறிஞர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலாரசில் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் மறுதேர்தலுக்கு எதிராக நடைபெற்ற  ஒரு மாத கால போராட்டங்களில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான கோல்ஸ்னிகோவாவை நாடுகடத்தும் முயற்சி நடைபெற்றது.அவர் தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து வெளியேற்றும் முயற்சியைத் தடுத்தார்.
நாடு கடத்தப்படுவதில் தோல்வியுற்ற போது தனது உயிருக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் இருப்பதாக அவர் ஒரு   அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக நான் தானாக முன்வந்து பெலாரஸ் குடியரசை விட்டு வெளியேறவில்லை என்றால், நான் எப்படியாவது உயிருடன் வெளியே அழைத்துச் செல்லப்படுவேன் என்று கூறப்பட்டது. என்னை 25 ஆண்டுகள் வரை சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தல்களும் இருந்தன” என்று கோல்ஸ்னிகோவா கூறினார்.
லுகாஷென்கோவின் 26 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்த முயற்சிக்கும் எதிர்ப்பு இயக்கத்திற்கு  ஒரு புதிய தலைமையாக உருவெடுத்துள்ள மரியா கோல்ஸ்னிகோவா  உலகில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.

நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க அரசு தீர்மானம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றன. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர். வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அது பொது நலனை நோக்கமாகக் கொண்டதே தவிர அரசியல் தலையீடு அல்ல எனவும் ஜனாதிபதி இதன் பொது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது .

ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த வேண்டும். அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக அது முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்கிறார் கி.துரைராசசிங்கம் !

தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக அம்பாறையைச்சேர்ந்த கலையரசன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சி அங்கத்தவர்களிடையே நீண்ட இழுபற் நடந்தேறியது. குறிப்பாக கலையரசனை தெரிவு  செய்த போது பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஏனையவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற விடயமானது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து  இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார் .

இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளேன். எனது செயற்பாடுகளுக்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனவே, எனது இப்பதவி துறப்பை ஏற்றுக் கொண்டு இது தொடர்பான ஏனைய விடயங்களை உரியவாறு கையாளுமாறு தங்களை மிக அன்புடன் வேண்டுகின்றேன்.எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

119008549 354886052344596 2873696060065358033 n

 

“புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயாராக உள்ளது“- சிவனேசதுரை சந்திரகாந்தன்

போலி தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களை போலன்றி சாத்தியமான செயற்பாடுகளுடன் தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதே தமது நோக்கமென பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10.09.2020) நிதியமைச்சின் உற்பத்தி வரி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 ஆயிரத்து 198 வாக்குகளை வழங்கி பெரும் நம்பிக்கையுடன் தனக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

போலி தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுவதே இடம்பெற்று வருகின்றது. கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிட்டு இன்று பலர் பாராளுமன்றத்தில் வெறுமனே குரல் எழுப்பி வருகின்றனர்.

மைத்திரி, ரணில், சம்பந்தன் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் மிக மோசமான செயற்பாடுகளையே அதன் ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயாராக உள்ளது. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதும் எமது மக்களின் வளர்ச்சியிலும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“எம் மீது ஒரு இனப்படுகொலையை புரிந்து விட்டு இப்போது இங்கு வந்து நாட்டை கட்டியெழுப்பவது பற்றி கதைத்துகொண்டிருக்கிறீர்கள்“ – செல்வராஜா கஜேந்திரன்

எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்துடன் இணைந்தால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எம் மீது ஒரு இனப்படுகொலையை புரிந்து விட்டு இப்போது இங்கு வந்து நாட்டை கட்டியெழுப்பவது பற்றி கதைத்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அபிவிருத்தி எனும் பெயரில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் மறுதலிக்கபடுகின்றன. மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி எனும் பெயரில் அப்பகுதியை சார்ந்த மீனவர்களுக்கான வாய்ப்புகளை தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மையின சிங்களவர்கள் அபகரிக்கின்றனர்.

எங்களுக்காக உண்ணாநோன்பிருந்து தன் உயிரை தியாகம் செய்த மாவீரன் திலீபனின் நினைவு தினத்தை கடைப்பிடிக்க எமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்காக உயிர்நீத்த அந்த உத்தமனை நினைவுகூர எமக்கு அனைத்து உரிமையும் உண்டு. அதை நீங்கள் தடை செய்ய முடியாது எனவும்செல்வராஜா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார் .

”விக்னேஸ்வரன் அரசியல் நோக்கங்களுக்காக இவர் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்துகின்றார்” – சரத் வீரசேகர

பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபைத் தேர்தலால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப் போவதில்லை மாறாக மக்களின் வரிப்பணமே வீண்விரயமாக்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் குறிப்பிடுகையில், “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய வேண்டும் என நான் தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைப்பதாக குறிப்பிட்டதற்கு தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

மக்களின் வரிப்பணத்தில் வெள்ளை யானையாக செயற்படும் மாகாண சபைகளினால் எவ்வித சேவையும் மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பதை அரசியலில் இருந்தபோதும் குறிப்பிட்டேன். தற்போதும் குறிப்பிடுகிறேன். அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றவுடன் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது.

இனப்  பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு கிழக்கில் படுதோல்வியடைவோம் என்பதை நன்கு அறிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தலை நடத்தினார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் உரிமை ஜனநாயக முறையில் வழங்கப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கடந்த அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அன்றும் இன்றும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபை தேர்தலால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப் போவதில்லை. மக்களின் வரிப்பணமே வீண்விரயமாக்கப்படுகிறது. மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கொள்கையாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், பௌத்த மதம், சிங்கள இனம் தொடர்பாக நாடாளுமன்றில் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாக காணப்படுகிறது.

இவரது கருத்தை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்து என ஏற்க முடியாது. அரசியல் நோக்கங்களுக்காக இவர் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்திக்கொள்கிறார்.

எனினும், தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும்” என்றார்.

”ஆறுமுகன் தொண்டமானும் தனது மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர்” – எம்.ஏ சுமந்திரன்

”ஆறுமுகன் தொண்டமானும் தனது மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர்” தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நான் திரு தொண்டமானுக்காக இரு தடவைகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தேன். ஒரு வழக்கு மிகவும் முக்கியமானது. மலையகத்திலும் தலைநகரிலும் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக உச்ச நீதிமன்றில்   தான் அமைச்சரவையில் இருந்த போதும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து என்னை நடத்துமாறு கேட்டிருந்தார்.

அந்த வழக்கிலே பல முக்கியமான நீதிமன்ற உத்தரவுகளை நாம் பெற்றிருந்தோம். கைதானவர்கள் விடுவிக்கப்படுவதற்கு மேலதிகமாக வீடுகள் சோதனை செய்யப்படும் நேரம், முறை என்பனவும் அந்த உத்தரவுகளிலே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எமது அரசியல் கட்சி உருவான வரலாறும் மலையக தமிழ் மக்களது பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.

திரு ஜீ.ஜீ பொன்னம்பலம் அந்த வரலாற்று அநீதிக்கு துணை போனதற்கு எதிராகவே திரு எஸ். ஜே. வி. செல்வநாயகம் அ. இ. தமிழ் காங்கிரசிலிருந்து விலகி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்தார். திரு சொளமியமூர்த்தி தொண்டமான் தமிழர் ஐக்கிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

பின்னர் அமைச்சரான போதும் மற்ற தமிழ் தலைவர்களில் இணக்கப்பாடு இருந்தது. திரு.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றிய போது அதை எதிர்த்தவர். ஆறுமுகன் தொண்டமானும் தனது மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர்.

அவரது இறுதிக் கிரியைகளில் பங்குபற்றவதற்காக நான் கொட்டகலைக்குச் சென்றிருந்தபோது அந்த மக்களது துக்கத்தை நேரிலே பார்த்தேன். எனது கட்சியின் அனுதாபங்களையும் இந்த வேளையில் பதிவு செய்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.