10

10

தொடரும் தற்கொலைகள் ! – தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்களின் சடலம் பரந்தனில் மீட்பு!

இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் வாகன விபத்துக்களால் ஏற்படும்  இறப்புக்கள் மலிந்துள்ளதை போல இளைஞர்களின் தற்கொலை தெடர்பான செய்திகளும் நாளொன்றுக்கு ஒன்றுவீதமேனும் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றது.
பரந்தன் ஓசியர் சந்திப்பகுதியிலுள்ள பாழடைந்த காணியொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ம் திகதி 12 மணியில் இருந்து காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியுரியும் பரந்தனைச் சேர்ந்த சுசிதரன் வயது 28 மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த தனுஷியா வயது- 27 ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இருவரும் காதலர்கள் எனவும் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாககவும் தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் நியமனம்!

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா. இந்தியாவின் தலைநகர் டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இவர் கடந்த 2013-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக தேர்வானார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் மேயராக பொறுப்பேற்றார். இதன் மூலம் சவுத்வார்க் பெருநகரத்தின் மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை சுனில் சோப்ரா பெற்றார்.

லண்டனிலுள்ள இந்திய வெளிநாட்டு காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்து வரும் சுனில் சோப்ரா சவுத்வார்க் பெருநகர கவுன்சிலில் முதல் மற்றும் ஒரே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலை ! – இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 34 ஆயிரத்து 506 பேருக்கும், பிரேசிலில் 34 ஆயிரத்து 208 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 20 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 610 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 65,48,737
இந்தியா – 43,70,129
பிரேசில் – 41,99,332
ரஷியா – 10,41,007
பெரு – 7,02,776
கொலம்பியா – 6,86,856
மெக்சிகோ – 6,42,860
தென் ஆப்பிரிக்கா – 6,42,431
ஸ்பெயின் – 5,43,379
அர்ஜெண்டினா – 5,12,293

“முஸ்லீம்களுக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரலின் படி இந்த அரசு இயங்குகின்றது“ – திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் குற்றச்சாட்டு.

மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

இலங்கையில் மாடுகளை அறுக்க தடை விதிக்க வேண்டுமென ஆளும் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக  கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச நிகழச்சி நிரலின்படி செயல்படும் இந்த அரசு கொண்டுவர எதிர்பார்த்துள்ள இந்த சட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான்.

எதிர்காலங்களில் இதைவிட பாரிய செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சர்வாதிகாரத்தை பெறவே இப்பொழுது இருபதாம் திருத்த சட்டத்தை நிறைவேற்றவுள்ளனர். ஆகவே இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் சிறுபான்மையினர் தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்.

“20ஆவது திருத்தத்தை கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும்“ – சித்தார்த்தன்

20ஆவது திருத்தத்தை கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுகின்ற அதேசமயம் தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்குவதற்கான முயற்சியாக 20 ஆவது திருத்தத்தை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும் என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வௌியேயும் எதிர்ப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்“ – கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஜெனுயிஸ்.

இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஜெனுயிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்ட நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வலிந்து காணாமலாக்கப்படுதல், கடத்தல் என்பன சர்வதேச உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் சமூகங்களிலும் முக்கியமான ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக குறிப்பாகவும் மனித உரிமை விவகாரம் குறித்து பொதுவாகவும் என்னைப் போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்கள்.

இப்போது ஒரு தொகையான மக்கள் இந்த விடயம் தொடர்பாக வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தைக் கேட்பதற்காக ரொறொன்ரோவிலிருந்து ஓட்டோவாவுக்கும் கியூபெக்கிலிருந்து ஓட்டாவாவுக்கும் நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நடைபவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு எமது கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

இலங்கையிலும் உலக நாடுகளிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது கொன்சர்வேட்டிவ் கட்சி கோரி வந்திருக்கின்றது.

இந்த நடைபவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு நான் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் கொடுக்கப்போகும் மகஜருக்கு கனேடிய அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

“உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போது இலங்கை அரசு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது “ – பந்துல குணவர்தன

முழு உலகமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கையில் பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(09.09.2020) பாராளுமன்றத்தில்  நிதியமைச்சின் உற்பத்தி வரி திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நாட்டின் பொருளாதாரம் மிகமோசமான வீழ்ச்சியடைந்ததுடன் அரசாங்கத்தின் கடன் சுமை வெகுவாக அதிகரித்தது என தெரிவித்த அமைச்சர்,மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தலைமையிலான ஐந்து வருட காலத்தில் நாட்டில்பாரிய பொருளாதார வளர்ச்சி காணப்பட்டதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் நாட்டு மக்களுக்கு பாரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வரி நிவாரணம் மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிட முடியும். கடன்களுக்கான வட்டி தனி இலக்கமாக வைக்கப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கும் கைத்தொழில் துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது.

இலட்சக்கணக்கான விவசாயிகளின் தொழில் துறைகளை பாதுகாக்கும் வகையில் இன்று சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிச் சலுகை மூலம் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமென கூறுபவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அறியாதவர்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டில் யுத்தம் இல்லாத நிலையில் வெளிநாட்டு கையிருப்பு பெரும் வீழ்ச்சி நிலையையே கண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“புதிதாக கடன் பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம்“ – அரச வங்கி அதிகாரிகளிடம் பிரதமர் வேண்டுகோள்!

அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (09.09.2020) பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுது்தல் வழங்கியுள்ளார்.

நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளின்போது குறிப்பிடத்தக்க தரப்பினரை விசேடமாக கருத்தி கொண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ´சபிரி கமக்´ (வளமான கிராமம்) வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 28 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் 14021 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் ரூபாய் 2 மில்லியன் வீதம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பிரதமரின் ஆலோசனைக்கேற்ப கிராமிய சனசமூக குழுக்களின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட கீழ்காணும் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

– கிராம வீதிகள், படிகள், வடிகால்கள், சிறிய பாலங்கள், பக்க வடிகால் என்பவற்றை மேம்படுத்துதல்
– விவசாய பொருட்கள் உற்பத்திக்கு தேவையான களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல்
– கிராம மட்டத்தில் பொருளாதார மையங்கள், வாராந்திர சந்தைகள் மற்றும் சந்தை இடங்களின் மேம்பாடு
– சிறிய குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள், குளங்கள், விவசாய கிணறுகள் புனரமைப்பு
– சமூக குடிநீர் விநியோக திட்டங்கள்
– கிராமப்புற மருத்துவ மையங்களை நவீனமயப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
– பாடசாலைகளுக்கான மின்சாரம், நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்
– வனவிலங்குகளினால் மக்களின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அபாயங்களை இல்லாது செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான திட்டங்கள்

குறித்த சந்தர்ப்பத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதி, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், அரச வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

“இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவர்“ – நிர்மலாநாதன் வேண்டுகோளிற்கு காஞ்சன விஜேசேகர பதில்!

இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளில் மன்னார் கடல் பிரதேசத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் வளங்களை அழிப்பது தொடர்பில் மன்னார் மீனவர்கள் மூலம் அறிந்து கொண்டேன் என்று பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

கடந்த 02 தினங்களுக்கு முன்பு நான் மன்னார் பிரதேசத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளில் அப் பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன் வளங்களை அழிப்பது தொடர்பில் மன்னார் மீனவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். தற்போது கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக அவ்வாறு அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்களை கைது செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையில் பதிலளித்தார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவர் அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படைத் தளபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இதன் போது சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் என கடும் தொனியில் கூறியிருந்தமையும் நோக்கத்தக்கது.

தியாகி திலீபனின் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுப்பு !

5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட தொடர்ச்சியாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர்களால் கடந்த வருடம் நடைபயண பேரணி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இவ்வருடம் அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்விடயம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.