20

20

மும்பையை பழிதீர்த்து வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது டோனியின் சென்னைசுப்பர்கிங்ஸ்!

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றையதினம்  தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் தலைவர் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 பந்துப்பநிமாற்ற முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ஓட்டங்களும், டி காக் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
சென்னை அணி சார்பில் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்கத்திலேயே விஜய் 1ஓட்டங்களும், வாட்சன் 4 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.
இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.

”நினைவேந்தல் தடையை முன்னிறுத்தி தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தமை தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்” – அஷாத் சாலி பாராட்டு

கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று ஜனநாயக ரீதியில் போராட முடிவுசெய்துள்ள தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் எனவும் அதற்காக தமிழ் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையை வலியுறுத்தி தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, பொதுவான சிந்தனைக்குள் ஒற்றுமை கண்டிருப்பது தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதுடன் உரிமைப் பிரச்சினைகள் மாத்திரமின்றி சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கும் தீர்வு தரவேண்டும்.

இவர்களைப் பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.

தேசிய ஐக்கிய முன்னணியானது, சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு பல தடவை முயற்சித்தது. ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளையாவது ஒன்றுபடச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின. தலைமைத்துவங்களின் தலைக்கனங்களும் கௌரவப் பிரச்சினைகளுமே இந்தச் சமூகத்தின் சாபக்கேடாகியுள்ளன.

பொதுத்தேர்தலில் எதிரணியில் நின்று வெற்றிபெற்றவர்கள், இப்போது சமூகம் தொடர்பாக எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாது ஆளுங்கட்சியில் தாவப் பார்க்கின்றனர்.

எனவே, முஸ்லிம் கட்சிகள் தமது நலன்களுக்கு அப்பால் சமூகத்துக்காக உழைக்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

”வெளியகத் தரப்பினரால் இயக்கப்படும் ஒரு நல்லிணக்க பொறிமுறைக்கு ஒரு போதும் உடன்பட முடியாது ” – ஜெனீவாவில் இலங்கைப்பிரதிநிதிகள் !

வெளியகத் தரப்பினரால் இயக்கப்படும் ஒரு நல்லிணக்க பொறிமுறைக்கு ஒரு போதும் உடன்பட முடியாது என்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அறிவித்துள்ளது.

சுமார் நான்கரை வருடங்களுக்கும் அதிகமான காலமாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்குவதற்குத் தவறிய வெளியக தரப்பினரால் இயக்கப்படும் ஒரு கட்டமைப்பை தொடர்வதிலும் பார்க்க, நாட்டுமக்கள் வழங்கிய ஆணையின் ஆதரவுடன் அவர்களின் நலனை முன் நிறுத்திய வகையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது .

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 வது கூட்ட தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனை தொடர்ந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமைக்கான உத்தரவாதம் ஆகிய விடயங்கள் பற்றிய ஐ.நா விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போதே இலங்கையின் பிரதிநிதிகள் மேற்கண்ட நிலைப்பாடு குறித்து தெளிவு படுத்தியுள்ளனர்.

அத்தோடு 2030 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதுடன் உரிமைகள், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காக கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

மேலும் ஐ.நா விசேட அறிக்கையாளரின் அறிக்கையை பொறுத்தவரையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதிலிருந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அடையப்பட்ட நேர் மறையான முன்னேற்றங்கள் அதில் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

”சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களையும், அறிவுரைகளையும் இந்த அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” – இரா.சம்பந்தன் காட்டம் !

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ள ராஜபக்ச அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டுக்களையும், அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அவரின் கரிசனையையும் நாம் மனதார வரவேற்கின்றோம்.

ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று இலங்கை அரசு கூறியுள்ளமை பெரிய விடயமல்ல. ஏனெனில், சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களையும், அறிவுரைகளையும் இந்த அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிளுக்கு இராணுவத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, இப்படியான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிருசுவிலில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றால் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் மீதான இராணுவக் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் துன்புறுத்தல்களும் தொடர்கின்றன.

இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. அது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவும் இல்லை. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் அவற்றை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இந்த உண்மைச் சம்பவங்களையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குற்றச்சாட்டுக்களாக இலங்கை மீது முன்வைத்துள்ளார். ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை.

அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்த்துள்ளார். அதிலுள்ள பாதகங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இந்த அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடும் சந்திக்கும்” – என்றார்.

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீக்காவிட்டால் எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதி வடக்கு, கிழக்கு முடங்கும் ! – தமிழ்கட்சிகள் அரசுக்கு காலக்கெடு.

தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலை நிகழ்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் கட்சிகள் மூன்று நாள் காலக்கெடு விதித்துள்ளன.

ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்புடைய தீர்வினையோ அல்லது பிரதிபலிப்பை காலக்கெடுவிற்கும் வழங்காத பட்சத்தில் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கூடி அடுத்த கட்டச் செயற்பாடுகளை ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளே இந்த விடயங்களை தெரிவித்தனர்.

இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது நீதிமன்றங்கள் ஊடாக பறிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளை மீளப்பெற்றுத் தராத பட்சத்தில் எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதி வடக்கு, கிழக்கு முடங்கும் வகையில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த விடயத்தில் ஒருங்கிணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.