06

06

இருபதாவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ளது ! – இரா.சம்பந்தன்ஃ

ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பாராளுமன்றக்குழுவிலேயே தீர்க்கமான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக அதன் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 19ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதிக்குரிய மட்டுப்பாடுகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு, பாராளுமன்றம் தொடர்பான விடயங்களில் மாற்றங்களை செய்வதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் வர்த்தமானியில் அறிவித்துள்ளது. இந்நிலையில் அச்சட்டமூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மற்றும் அதுதொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

20ஆம் திருத்தச்சட்டமூலமான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். குறிப்பாக ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் வகையிலான விடயங்கள் தொடர்பில் நாம் அதீத கவனம் செலுத்தியுள்ளோம்.

எனவே இந்த விடயத்தினை நாம் பக்குமாக கையாள வேண்டியுள்ளது. ஜனநாயகத்தினை பாதுகாக்கும் அதேநேரம், எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எமது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக பாராளுமன்றக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் எமது உறுப்பினர்கள் அனைவரும் சமூகம் தரவுள்ளனர்.

அதன்போது நாம் இந்தக் கருமம் தொடர்பில் கவனம் செலுத்தி முடிவுகளை எடுக்கவுள்ளோம். பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை எமது பாராளுமன்றக்குழு கூடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன. இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக நாம் ஏனைய அரசியல் கட்சிகளுடனும், தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளோம். இந்த விடயத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் ஆராயாவுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் இரா.சம்பந்தன்.

“ஓர் ஜனநாயக புரட்சி ஊடாக நாட்டிலே அரசியலை மாற்றி அதன்மூலம் வந்த 19ஆவது திருத்தத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போடும் செயற்பாட்டில் அரசு ஈடுபடுகின்றது ” – கிளிநொச்சியில் சுமந்திரன்.

பிராந்திய வல்லரசுக்கும், முழு சர்வதேசத்திற்கும் மூன்று தடவை கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் காற்றில் பறக்கவிடுமாக இருந்தால் அதுதான் இலங்கை என்ற நாடு விடுகின்ற மாபெரும் தவாறாக இருக்குமெனவும்இந்தப் பிழையினூடாக தமிழர்களின் எதிர்ப்பை மாத்திரமல்லாது, முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கும் சிங்கள மக்களினுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது, முழு உலகத்தினுடைய எதிர்ப்பையும் எதிர்கொள்ள நேரிடும் எனவும்    நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (06.09.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “ஓர் ஜனநாயக புரட்சி ஊடாக நாட்டிலே அரசியலை மாற்றி அதன்மூலம் வந்த 19ஆவது திருத்தத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுகின்ற நிகழ்ச்சி ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. வருகின்ற நாட்களிலே அது முழுமையாக நிறைவேறப்போகின்றது.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போகின்றது என இன்று பலர் குரல் கொடுக்கின்றார்கள். இந்த அரசாங்கத்தை ஆதரித்தவர்கள்கூட இன்று அதற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில் ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த விடயத்தை நாங்கள் எதிர்ப்போம்.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு மேலும் தள்ளிப்போவதற்கான சூழ்நிலை தென்படுகின்றது. ஆனால், அப்படியான சங்கடங்கள் ஏற்படுகின்ற வேளைகளில்தான் தீர்வுகளும் வரும்.

1983ஆம் ஆண்டு நாடுமுழுவதும் தமிழ் மக்கள் அடித்து, கலைக்கப்பட்டு, கொல்லப்பட்டு அவர்களது உடமைகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட வேளையில்தான் இந்தியா தலையிட்டது. அக்காலப் பகுதியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரதிபலனாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அது போதிய தீர்வு இல்லை என்பது இன்றைக்கும் எங்களுடைய நிலைப்பாடாகும். அது போதிய தீர்வில்லை என்பதை இலங்கை அரசாங்கமும் பல தடவை ஏற்றுக்கொண்டுள்ளது.

விசேடமாக மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுடன் இணைந்து மூன்று தடவைகள் கூட்டறிக்கை விடுத்துள்ளார். 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன், அதற்கும் அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக ஆக்குவேன் என்று சொல்லியிருக்கின்றார். இதனடிப்படையில் தற்போது இருக்கின்ற முறைமையானது ஓர் அர்த்தமில்லாத முறைமை என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள்.

அதை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம் எனவும் உறுதி கொடுத்துள்ளார்கள். ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுகின்றபோது அது மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளிடம் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஆட்சி அதிகாரங்களாக இருக்கும். மாறாக மத்திய அரசாங்கத்திலே ஒரு அமைச்சர், மூன்று அரை அமைச்சர்கள் என தனிப்பட்ட ரீதியிலே அவர்களுக்கு பதவிகளைக் கொடுப்பது மக்களுக்குக் கொடுக்கின்ற ஆட்சிப் பகிர்வு அல்ல.

இப்பொழுது இருக்கின்ற மாகாண சபை முறைமையிலே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் கூட அது இல்லை. சட்டமாக்கல் அதிகாரம் மாகாண சபைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், எந்தச் சட்டத்திற்கும் அனுமதி கொடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

அந்த அனுமதியைக் கொடுப்பது ஆளுநரே. ஆளுநர் அனுமதி கொடுத்தால்தான் அது அந்த மாகாணத்தில் சட்டமாகும். சட்டவாக்கல் சபை அதனை நிறைவேற்றினாலும்கூட ஜனாதிபதியில் நேரடி பிரதிநிதியாக இருக்கின்ற ஆளுநர் கைச்சாத்திடாமல் அது சட்டமாகாது. ஆகவே சட்டமாக்கம் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் முழுமையாக கொடுக்கப்படவில்லை.

அதேவேளை, நிறைவேற்று அதிகாரமும் ஆளுநரின் கைகளிலேயே உள்ளது. அமைச்சர் வாரியத்தினுடைய அனுமதியுடன் அவர் செயற்பட வேண்டும் என்று அரசியலமைப்பிலே கூறியிருந்தாலும்கூட, மாகாண சபைகள் சட்டம் என்ற சட்டத்தின்படி அந்த அதிகாரங்களை ஆளுநர் நேரடியாகவே உபயோகிக்கின்றார்.

ஆகையினாலே, நிறைவேற்று அதிகாரம்கூட அதிகாரப் பகிர்வு என்பதற்கு உட்படுத்தப்படாமல் மத்திய அரசினுடைய பிரதிநிதியான ஆளுநரின் கைளிலே தொடர்ச்சியாக இருக்கின்றது. ஆகையினால்தான் மாகாணசபை முறைமை அர்த்தமில்லாது இருக்கின்றது. அதனை அர்த்தமுள்ளதாக்குவோம் என்கின்றார்கள். இந்த வாக்குறுதிகள் எழுத்து மூலமாக இன்றைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்தபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும்.

எனவே, சர்வதேசத்திற்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை இங்கே வாழ்கின்ற எமக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளைப்போல தட்டிக்கழிக்க முடியாது. இந்த வாக்குறுதியானது பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதியாகும்.

இந்திய இந்த விடயங்களிலே தலையிட்டு தன்னுடைய நல்லெண்ணத்தின் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வந்தபோது பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தன்னுடைய பிரதிநிதியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பியபோது இலங்கை அதனை ஏற்றுக்கொண்டது.

தலையீடு செய்து மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் இன்றும் அமுலில் இருக்கின்றது. ஆகவே, தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் கொடுக்கின்ற வாக்குறுதிகளைப்போல் அல்லாது சர்வதேசத்திற்கு விசேடமாக அண்டை நாடான இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை அவ்வளவு இலகுவாக மீறமாட்டார்கள். மீறவும் முடியாது.

இந்தியாவிற்கு மட்டுமல்லாது மேலைத்தேச நாடுகளனைத்திற்கும் முழு சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 47 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் தெரிவுசெய்யப்படுகின்ற நாடுகள்.

அத்தனை நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அங்கும் மூன்று தடவைகள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை கொடுத்திருக்கின்றார்கள். இந்தியாவிற்கு எவ்வாறு மூன்றுதடவை எழுத்திலே வாக்குறுதி கொடுத்தார்களோ ..?அதேபோன்று முழு சர்வதேசத்திற்கும் இலங்கை அரசு மூன்று தடவை எழுத்திலே வாக்குறுதி கொடுத்திருக்கின்றது.

அந்த வாக்குறுதிகளிலும்கூட கூடுதலான அதிகாரப் பகிர்வின் ஊடாக ஓர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் மீள நிகழாமைக்கான உத்தரவாதத்தினை கொடுக்கின்றோம் என சொல்லியிருக்கின்றார்கள். நிலைமாறுகால நீதியிலே நான்காவது தூணாக சொல்லப்படுவது இந்த மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதமாகும்.

ஓர் புதிய அரசியலமைப்பின் ஊடாகவே இந்த மீள் நிகழாமைக்கான உத்தரவாதத்தினை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதிகாரப் பகிர்வை மேலும் அதிகரிப்பதன் ஊடாக அதனை உறுதிப்படுத்துவதாக அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையினாலே, இன்றைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த நாட்டிலே அவர்கள் பெற்றிருக்கின்ற ஒரே காரணத்திற்காக பிராந்திய வல்லரசுக்கு மூன்று தடவை கொடுத்த வாக்குறுதியையும், முழு சர்வதேசத்திற்கும் மூன்று தடவை கொடுத்த வாக்குறியையும் காற்றிலே இலங்கை அரசாங்கம் பறக்கவிடுமாக இருந்தால் அதுதான் இலங்கை என்கின்ற நாடு விடுகின்ற மாபெரும் தவறாக இருக்கும்.

அதை நாங்கள் திரும்பத் திரும்ப இலங்கை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டுகின்றோம். இந்த தவறை விடவேண்டாம் என்று சொல்லுகின்றோம். தொடர்ச்சியாக நீங்கள் இந்த தவறான பாதையிலே பயணிப்பீர்களேயாக இருந்தால், எங்களுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கும் சிங்கள மக்களினுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது முழு உலகத்தினுடைய எதிர்ப்பையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் !

தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், நடைபெறவுள்ள நடைபவனியில் தாங்கள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் க.பிருந்தாபன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணித் தலைவர் கி.கிருஸ்னமேனன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணித் தலைவர் கி.கிருஸ்னமேனன் யாழ். ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 21ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இருந்து ஆரம்பமாகும் குறித்த நடைபவனி 26ஆம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நிறைவுபெறவுள்ளது.

இதேவேளை, இளைஞர்களான எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினைகளும் முரண்பாடுகளும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் நாங்கள் தேசியத்துக்கான ஒரு விடயம் வரும்போது ஒற்றுமையான செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்துள்ளோம்.

இளைஞர்களாகிய எங்களுடைய செயற்பாடுகளைப் பார்த்து தலைவர்கள், தாங்களும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் இனப் பிரச்சினைக்கான தீர்வினையோ அல்லது ஏனைய விடயங்களையோ பேசமுடியும். உணர்வுபூர்வமாக இருந்தால் நிச்சயமாக அது சாத்தியமாகும். எதிர்காலத்தில் ஒரு ஒற்றுமையான பயணத்தினை மேற்கொள்வதற்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் மர்ம நபர் சரமாரி கத்திக்‍குத்து – ஒருவர் உயிரிழப்பு !

இங்கிலாந்து நாட்டின் Birmingham நகரில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக 8 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Birmingham நகரின் மதுக்குடிப்பகங்கள் நிறைந்த பகுதியில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் பலரை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ஒருபெண் மற்றும் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான மேலும் 5 பேரின் உயிருக்கு ஆபத்தில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலோ அல்லது குழுக்கள் இடையிலான முன்விரோத தாக்குதலாகவோ தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

ஒரே நாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு 41 லட்சத்தைக் கடந்தது!

கடந்த ஆகஸ்ட் 7-ம்தேதி 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் கொரோனா பாதிப்பு எட்டியுள்ளது. ஏறக்குறைய 13 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒருநாளில் 90,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமையானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்‍கப்பட்ட மகாராஷ்டிராவில் மேலும் 20 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 83 ஆயிரத்தை தாண்டியதோடு, பலியானோர் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 10 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 4 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் 2,973 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1,566 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 3,042 பேருக்கும், கேரளாவில் 2,655 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 41 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 31 லட்சத்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

வெளியானது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி அட்டவணை . முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதல் ! – முழுமையான அட்டவணை இதோ.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. அதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

IPL 2020 Schedule Announced, Mumbai Indians To Take On Chennai Super Kings  In Opener

 

இறுதிப் போட்டி வருகின்ற  நவம்பர் 10- ம் தேதி நடக்கிறது. ப்ளே ஆப் சுற்று நடக்கும் நகரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ வெளியிட்ட அட்டவணையில் ரவுண்ட் ராபின் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி முதல் 46 நாட்களில் 56 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் 10 நாட்களில் இரு ஆட்டங்கள் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி மும்பை vs சென்னை

துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் டி20 போட்டிகள் நடக்கின்றன. இரவு நடக்கும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், இரு போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கும் தொடங்குகிறது.

இதன்படி வரும் 19-ம் தேதி சனிக்கிழமையன்று துபாயில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது நாள் 20-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

3-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. அதன்பின் 22-ம் தேதி ஷார்ஜாவில் முதல் போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.

துபாய் நகரில் 24 லீக் போட்டிகளும், அபுதாபியில் 20 லீக் ஆட்டங்களும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடக்கின்றன. ப்ளே ஆப் நடக்கும் இடங்களும், இறுதிப்போட்டி நடக்கும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழர்களின் எதிர்கால நிலைத்திருப்பில் அரசியல் சாராத பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவையும் அவசியமும்….! – அருண்மொழி

வடக்கு – கிழக்கு சமூக அக்கறையுடைய இளைஞர்களிடையேயும் அரசியல் விமர்சகர்களிடையேயும்  பொதுக்கட்டமைப்பு ஒன்றின் தேவை பற்றிய விடயங்கள் ஆழமான  பேசுபொருளாக மாறி வருகின்ற இந்த நிலையில் தேசம் நெற் இன் இந்தக்கட்டுரை பொதுக்கட்டமைப்பின் தேவை பற்றியும் அதன் செயல் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றது.

முதலில் இந்த பொதுக்கட்டமைப்பு ஏன் தேவை..? என்பது பற்றி நோக்குதல் அவசியமாகின்றது.

இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு மிக அவசியம் ஏற்பட்ட பின்னணியில் இலங்கை வாழ் தமிழ் மக்களை இணைக்ககூடிய ஒரு மையப்புள்ளியாக ஒரு பொது அமைப்பு ஒன்றின் தேவை அதிகமாக கடந்த காலங்களில் உணரப்பட்டமையேயாகும். உலகின் ஒவ்வொரு அடக்கப்பட்ட சமூகங்களிலும் அரசியல் சார்ந்த அமைப்புக்களே அரசிற்கும் அடக்கப்பட்ட சமூகங்களுக்குமிடையான தொடர்பாளராக செயற்பட்டு, மக்களினுடைய உரிமைகளை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியோராக காணப்படல்  வேண்டும். ஆனால் இலங்கை தமிழர் அரசியலை பொறுத்த வரை அப்படியான ஒரு அமைப்பு இல்லை என்பதே உண்மை.  தமிழர் மத்தியில் பல அமைப்புக்கள் அரசியல் சார்ந்து உருவாகியுள்ளமையால் மக்கள் எந்த அமைப்பின் பக்கம் நிற்பது என்ற குழப்பமான ஒரு சூழலே நிலவுகின்றது. கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓரளவேனும் பலமான ஒரு அமைப்பாக காணப்பட்டமையால் மக்களுடைய வாக்குகள் முதல் ஆதரவு என அனைத்துமே அதனை மையப்படுத்தியதாக காணப்பட்டடது. எனினும் கூட்டமைப்பு தன்னுடைய அரசியலை மக்கள் நலன்சார்ந்து பெரியளவிற்கு நகர்த்தியிராத நிலையில் மக்கள் மாற்று அணிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றில் தமிழரின் வாக்கு பலத்தை சிதைத்துள்ளதுடன் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமலேயே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் அரசமைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தை நாம் சிந்தித்தித்து பார்க்க வேண்டியோராகவுள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவையுடைய தோல்வியும் கூட பொதுக்கட்டமைப்புக்கான வெளி ஒன்றினை உருவாக்கியுள்ளது. முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து வடக்கு – கிழக்கின் புத்தி ஜீவிகளையும் இளைஞர்களையும் இணைத்து பாரிய கொள்கைப் பிரகடனங்களோடு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பானது தன்னுடைய அரசியலுக்காக மக்களுடைய எதிர்பார்ப்பை சிதைத்து எஞ்சி நின்ற நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியது. இது பொதுக்கட்டமைப்பு பற்றி அதிக இளைஞர்கள் சிந்திக்க பயப்படுகின்ற ஒரு சூழலையும் உருவாக்கி விட்டது. இந்த நிலையிலேயே பொதுக்கட்டமைப்பு பற்றி சிந்திக்க வேண்டியோராக நாமுள்ளோம்.

தமிழர் சமூகத்தினுடைய பின்தங்கிய நிலையை அடிப்படையில் இருந்து கட்டமைக்க பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது. கல்வி சார்ந்து தமிழர் சமூகம் அடக்கப்பட்டமை கூட கடந்தகால போராட்டங்களுக்கான மையமாகும். உண்மையிலேயே அந்த அடக்கு முறையில் நாம் தோற்றுப்போய் பெரும்பான்மை சமூகம் வென்றுவிட்டது என்பதே உண்மை. நம்முடைய தமிழர் சமூக கல்வி நிலை அண்மைக்காலங்களில் அதிகம் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் கல்விக்கு தடையாக போதைப் பொருள்பாவனை,  வறுமை , சமூக ஏற்றத்தாழ்வுகள் என பல காரணங்கள் துணை போகின்ற நிலையில் ஆக்கபூர்வமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்தக்கூடிய பொது அமைப்பு ஒன்று இன்றியமையாததாகிறது.

அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக பிரச்சினைகள் ஏற்படும் போது எதிர்வினையாற்றக் கூடியோராகவோ..? அல்லது மக்களுடைய மனதை புரிந்து கொண்டோராகவோ..? இல்லை. மக்களுடைய நிலையை புரிந்து அதனை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அரசியல் தலைவர்கள் இல்லை. நம்முடைய அரசியல் தலைவர்கள் தங்களுள் சண்டையிட்டு கொள்வதிலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனமும் கூட. இந்த நிலையிலேயே மக்களுக்கான அரசியல் தலைவர்களை உருவாக்கவும் அடையாளம் காட்டவும் இந்த பொதுக்கட்டமைப்பு அவசியமாகிறது.

தமிழர் சமூகங்களிடையே பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க அரசியல் தலைமைகள் தவறிய நிலையில் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி ஒரு பொது அமைப்பின் தேவை அவசியமாகின்றது. சொல்லப்போனால் மக்களுடைய வாழ்வை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வோம் எனக்கூறும் தேர்தல்கால  அரசியல்வாதிகளுடைய வாழ்க்கையிலும் வாகனங்களிலும் மட்டுமே அபிவிருத்தி தென்படுகிறதே தவிர வட – கிழக்கில் ஏழை எந்த அபிவிருத்தியும் இல்லாமலே இருக்கின்றான். மேலும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றும் அரசியல்வாதிகள்  பொருளாதார அபிவிருத்தி என்னும் பெயரில் உள்ள  வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்புகின்றனரே தவிர புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவோ,  தொழில் முயற்சிகளை தமிழர் பகுதிகளில் உருவாக்கவோ முனைவதாக தெரியவில்லை. இதனாலேயே தமிழர் சமூகம் பொருளாதார நிலையிலும் பின்நிற்க வேண்டியுள்ளது. இந்தநிலையிலேயே தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய அமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது.

இதே வேளை இனம் எனும் போது தமிழர் என நம்மை நாமே குறிப்பிட்டாலும் கூட பிரதேசவாதத்தால் வடக்கு தமிழர்,  கிழக்கு தமிழர்,  மலையகத் தமிழர் எனவும் [அதற்குள்ளும் பல உபபிரதேச பிரிவுகள் உள்ளன] சாதிய கட்டமைப்புக்களாலும் சமயரீதியாகவும் பல கூறாக பிரிந்துள்ள தமிழர்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய ஒரு பொதுக்கட்டமைப்பு தேவையாக உள்ளது.

விமர்சனங்கள் தாண்டி 2009 க்கு முன்பு வரை மக்களை வழிப்படுத்த காணப்பட்ட ஒரு அமைப்பினுடைய தேவையை இன்று உணரக்கூடியதாக உள்ளது.

இந்தநிலையில் மக்களை வழிப்படுத்தவும் அரசியல் சார்ந்து நம்முடைய கருத்துக்களை ஒரு சேர பதிவு செய்யவும் அரசியலை தீர்மானிக்கூடிய எனினும் அரசியல் பின்னணியற்ற ஒரு அமைப்பினுடைய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இங்கு பொதுக்கட்டமைப்பு என்னும் போது ஆயுதக்கலாச்சாரம் பற்றி சிந்திப்பதல்ல. ஆக்கபூர்வமான நகர்வுகளூடாக நம்முடைய உரிமைகளையும் நிலைப்பையும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபப்ட்டுள்ள அரசிடம்  இருந்து பாதுகாப்பதும் பெற்றுக்கொள்வதும் தமிழர் பகுதிகளின் சமூக,  பொருளாதார,  கல்வி, கலாச்சார  நிலைகளை மேம்படுத்துவதுமேயாகும்.

பொதுக்கட்டமைப்பின் செயல் பயணம் எப்படி இருக்க வேண்டும்..?

இந்த பொதுக்கட்டமைப்பினுடைய எழுச்சியானது திரையில் நாம் காண்பது போல ஒரு சில உணர்ச்சி பாடல்களுடன் முழுமை பெற மாட்டாது. அது தன்னுடைய தளத்தை ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்து தொடங்க வேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஆக்கபூர்வமாக சமூகத்துக்காக சிந்திக்க கூடிய சரியான நபர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் மூலமாக அந்த கிராம முன்னேற்ற நடவடிக்கைகளை படிப்படியாக பொதுக்கட்டமைப்பு நகர்த்த வேண்டும். கிராமங்களின் இளைஞர் அமைப்புக்கள் / விளையாட்டுக் கழகங்களை கொண்டு அவர்களுடைய சமூகத்தின் தேவையை அவர்ககளே பொறுப்பெடுக்க கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த பொதுக்கட்டமைப்பு வடக்கு – கிழக்கு – மலையகத்தின் கிராமங்களை மையப்படுத்தியதாக நகர ஆரம்பிக்க வேண்டும். இதுவே அமைப்பினுடைய முனைப்பான வளர்ச்சிக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும்.

பொதுக்கட்டமைப்பின் நகர்வுகள் ஏழ்மையை மாற்றக் கூடியதாக நகர வேண்டும். புலம்பெயர் தேசங்களிலிருந்து அனுப்பப்படும் பணம் முறையாக எல்லோரிடமும் போய் சேர்வதில்லை. அத்துடன் அந்த பணம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு வார காலமோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்யுமே தவிர பணம் முடிய அந்த குடும்பத்தின் நிலை…? எனவே புலம்பெயர் அமைப்புக்களுடாக கைமாற்றப்படுகின்ற பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பசியோடு இருப்பவனுக்கு நிரந்தமான சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க அந்தப்பணத்தை பயன்படுத்தல் ஆரோக்கியமானது. மேலும் பண்ணைகள் அமைத்தல்,  தள்ளு வண்டிக்கடைகள் ஏற்படுத்திக்கொடுத்தல், தொழில் உபகரண வசதிகளை வழங்குதல், இப்படியாக பொருளாதார மாற்றங்களை அடிப்படையில் இருந்து ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையாளர்களை உருவாக்குதும் வறுமை ஒழிப்பின் ஒரு படியே..!

இவ்வளவு பெரிய இழப்புக்களின் பின்னணியில் நம்முடைய கல்விக்கு பெரிய பங்குண்டு. நம்முடைய அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வளப்படுத்துவது காலத்தின் அதிமுக்கிய தேவையாகவுள்ளது. போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டுக் கலாச்சார மோகம், என அடுத்த தலைமுறை தன்னுடைய கல்வியை நம்கண்முன்னேயே தொலைத்துக்கொண்டு நிற்கின்றது. நெல்சன் மண்டேலா கூறுவது போல ஒரு சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளவோ அல்லது முன்னேறவோ  நினைக்குமிடத்து கல்வி மட்டுமே தெளிவான ஒரு ஆயுதம் என கூறுகின்றார்.  எனவே எல்லா மாணவர்களுக்கும் சரியான முறையான ஆரோக்கியமான கல்வி கிடைக்க வகை செய்தல் அவசியமாகின்றது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கதைத்தை மீள கட்டியெழுப்பல்,  நம்முடைய வரலாற்றை ஆரோக்கியமாக கடத்துதல்,  மாணவர் தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மட்டங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நிலையை இல்லாதாக்க செயற்படல்,  மாணவர்களின் கல்விக்கான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல் என பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் மாணவர்களோடு மாணவர்களாகவும் மேற்கொள்கின்ற பட்சத்தில் ஆரோக்கியமான அடுத்ததலைமுறையை உருவாக்க முடியும்.

மிக முக்கியமாக உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு தனித்து ஒரு மாவட்டத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்காது எல்லா பகுதி தமிழர்களையுப் மையப்படுத்தி இயங்குவதே பொதுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவும் இலகுவாக வழி செய்யும். இதை விடுத்து யாழ்ப்பாண பகுதியை மட்டுமே மையப்படுத்தி பொதுக்கட்டமைப்பு நகருமாயின் அது வீண் முயற்சியே..!

ஆக்கபூர்வமான வகையில் எங்களுடைய தேவைகளையும் வலிகளையும் பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்க வேண்டிய பொறுப்பினை பொதுக்கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள், மாணவர் படுகொலை நிகழ்வுகள் என்பன பற்றிய நிகழ்வுகளை ஆக்கபூர்வமாக எல்லா தரப்பினருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும். அதாவது எங்களுடைய வலிகளையும் தேவையையும் அதன் நியாயப்பாட்டையும் பெரும்பான்மை சமூகத்துக்கு எடுத்துக்கூற கூடிய ஒரு ஊடகமாக இந்த பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டும்.

இவை தவிர பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்கான உதவிகளை வழங்குதல்,  நுண்நிதி உள்ளிட்ட தொடரும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே பேசுதல், அழிந்து வரும் கலைகளையும் கடந்த கால வரலாறுகளையும் ஆவணப்படுத்துதலும் மீள் ஆக்கப்படுத்தலும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற வகையிலாக சமூகப்பபொறுப்புடன் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இந்த வகையிலாக எல்லா பகுதி தமிழர்களையும் ஒரே கோர்வையாக இணைத்துக்கொண்டு செல்லக்கூடியதான நெகிழ்திறன் உள்ள ஒரு அமைப்பாகவும், தமிழர் சமூகத்தின்  அடிப்படையில் இருந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களூடாக தன்னுடைய எதிர்கால தூரநோக்குககளையும் இலக்குகளையும் கட்டமைத்து பயணிக்க கூடிய ஒரு அமைப்பாகவும் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பினுடைய பயணத்தின் மீது முழுமையான மக்கள் நம்பிக்கையும் திருப்பப்பட்டு அரசியல் சார்பற்ற ஆனால் அரசியலை தீர்மானிக்க கூடிய அமைப்பாக அது வளர்ச்சி கண்டு தமிழ் மக்களுக்கான அமைப்பாக மிளிர முடியும். இந்த அமைப்பினுடைய வெற்றிக்காக எத்தனை வருடங்களும் எடுக்கலாம். ஆனால் அமைப்பினுடைய வெற்றியின் இறுதியில் இந்த பொதுக்கட்டமைப்பு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் அளவே மதிப்பீடாக காணப்படும். அந்த மக்கள் நம்பிக்கையே பொதுக்கட்டமைப்பு கைகாட்டும் வழி சரியெனும் நிலைக்கு மக்களை கொண்டு செல்ல அத்தியாவசியமானது.

பொறுத்திருந்து பார்க்கலாம் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை இலங்கைத்தமிழ் இளைஞர்களும் புத்திஜீவிகளும் அரசியாலாளர்களும் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்று……..!

“20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அனைவரது ஒத்துழைப்புடன்தான் நாம் நிறைவேற்ற வேண்டும் ” – சபாநாயகர் மஹிந்த யாப்பா

“20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அனைவரது ஒத்துழைப்புடன்தான் நாம் நிறைவேற்ற வேண்டும் ” என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் தரப்பில் ஒருவிதமாகவும் ஏனைய கட்சிகள் ஒருவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அனைவரது ஒத்துழைப்புடன்தான் நாம் நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு நாடாளுமன்றில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.  இது நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடு. இது ஒரு தரப்பை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.

19 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் தான் கடந்த அரசாங்கத்தின்போது கொண்டுவந்தோம். ஒருவர்தான் எதிர்ப்பினை வெளியிட்டார்.

நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்த்தே அதனைக் கொண்டுவந்தோம். ஆனால், எமது எண்ணம் நிறைவேறியதா இல்லை என்பதில் சந்தேகம் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4Shares

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)

தொழிலாளியை தாக்க முற்பட்ட அதிகாரியை இடமாற்றக்கோரி 500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்!

தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி நேற்று (05.09.2020) சனிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருகையில்,

ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்ற கோரியே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை அத்தோட்ட அதிகாரி தாக்க முற்பட்டதாக அத்தொழிலாளி அதிகாரி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

குறித்த அதிகாரி அத்தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக பல கெடுபிடிகளை செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்தோட்ட அதிகாரிக்கு எதிராக நேற்று (05) காலை அணிதிரண்ட அத்தோட்ட தொழிலாளர்கள், அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலைக்கு அருகாமையில் பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.